அமெரிக்காவின் மயாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் பிரைம் எயார் (Amazon Prime Air) நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஐவர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புவர்ட்டோ ரிக்கோவில் (Puerto Rico) இருந்து மயாமி நோக்கிப் பயணித்த குறித்த சரக்கு விமானம், விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஓடுபாதையைத் தாண்டிச் சென்று அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதியது. மோதிய வேகத்தில் விமானம் தீப்பிடித்ததுடன், அதிலிருந்து எரிபொருளும் கசியத் தொடங்கியது.
விபத்து இடம்பெற்ற வேளையில் வாகனங்களில் இருந்த இருவரும் விமானிகளும் வெளியேற முடியாமல் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். உடனடியாகச் செயற்பட்ட சுமார் 200 மீட்புப் பணியாளர்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக விமான நிலையத்தின் அனைத்து ஓடுபாதைகளும் தற்காலிகமாக மூடப்பட்டன. விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய அமெரிக்க தேசிய விமானப் போக்குவரத்து நிர்வாகம் விசாரணை குழுவொன்றை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளது.