எடின்பரோ விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஏ8 (A8) வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் சாரதி ஒருவர் உயிரிழந்த நிலையில், சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய பெண்கள் இருவர் மற்றும் ஆண் ஒருவரை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
திங்கட்கிழமை காலை 09:25 மணியளவில் நியூபிரிட்ஜ் மற்றும் கோகர் சுற்றுவட்டங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் மெர்சிடிஸ் ஏ250, ரெனோ கேப்டூர், ஸ்கோடா கரோக் மற்றும் ஹூண்டாய் ஐ30 ஆகிய நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. விபத்து குறித்து தகவலறிந்து அவசர சிகிச்சைப் பிரிவினர் விரைந்த போதிலும், ஹூண்டாய் ஐ30 ரக வாகனத்தின் 58 வயதான சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
விபத்தில் காயமடைந்த மேலும் நால்வர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் வீடு திரும்பியுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய மெர்சிடிஸ் வாகனத்தில் பயணித்துவிட்டு கால்நடையாகத் தப்பியோடிய மூன்று பேரைக் கண்டறிவதற்காகப் பொலிஸ் ஹெலிகொப்டர் மற்றும் மோப்ப நாய் பிரிவுகள் களமிறக்கப்பட்டு, விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த விபத்து தொடர்பான முழுமையான பின்னணியை வெளிக்கொணர்வதற்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பொலிஸார் வருகை தருவதற்கு முன்னர் அங்கிருந்து தப்பியோடிய மூவரையும் அடையாளம் காண்பது மிகவும் அவசியமானது எனவும் பொலிஸ் பரிசோதகர் தோமஸ் மல்லின்சன் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்த அவர், விபத்து தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் அல்லது வீடியோப் பதிவுகளை வைத்துள்ளவர்கள் உடனடியாக ஸ்கொட்லாந்து பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு மூன்று அம்பியூலன்ஸ்கள், விசேட நடவடிக்கை அணிகள் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. பொலிஸாரின் புலனாய்வு விசாரணைகளுக்காகப் பல மணித்தியாலங்கள் மூடப்பட்டிருந்த குறித்த வீதி, இரவு 07:05 மணியளவில் மீண்டும் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டது.