கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ராஜங்கணை யயா 01, 03 மற்றும் 05 ஆகிய பிரதேசங்கள் முற்றாக முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றும் ஆலோசகர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை அடுத்து ராஜங்கணையில் மேலும் சிலருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே இந்த குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் அனில் ஜாசிங்க அறிவித்துள்ளார்.
கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் தொடர்ச்சியாக தொற்று உறுதியானவர் அடையாளம் காணப்படுகின்றமையை வைரஸ் பரவல் அலையாக கருத முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ராஜாங்கனை, அபராதுவ மற்றும் வெலிகந்த ஆகிய பிரதேசங்களே தற்போது பிரச்சினைக்குறிய பிரதேசங்களாகக் காணப்படுகின்றன என்றும் இந்த பிரதேசங்களில் தொற்று உறுதியாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுபவர்கள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கையும் 2631 ஆக அதிகரித்துள்ளது.