செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை “காணிகளை விடுவிப்போம்” எனக் கூறியவர்கள்… விடுவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை | சுரேஷ் பிரேமச்சந்திரன்

“காணிகளை விடுவிப்போம்” எனக் கூறியவர்கள்… விடுவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை | சுரேஷ் பிரேமச்சந்திரன்

1 minutes read

காணிகளை விடுவிப்போம் என கூறியவர்கள் இரண்டு ஆண்டுகள் கடந்தும் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஒரு வருடத்துக்குள் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என அரசாங்கமும் ஜனாதிபதியும் உறுதியளித்திருந்த போதிலும், இரண்டு ஆண்டுகள் கடந்தும் தேர்தல் நடத்தப்படவில்லை. அடுத்த ஆண்டிலாவது தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதேபோன்றே, காணி விடுவிப்பு தொடர்பில் இரண்டு வருடங்களாக, காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

ஜனாதிபதியை தமிழ்க் கட்சிகள் சந்தித்தபோதும், காணி விடுவிப்பு தொடர்பில் முக்கியமாக கூறியிருந்தோம். குறிப்பாக வடக்கு, – கிழக்கில் முப்படைகளின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில், மலையக மக்களுக்கு காணி பகிர்ந்தளித்தது தொடர்பிலும் பேசினோம்.

யாழ்ப்பாணத்தில் பலாலி, மயிலிட்டி, தையிட்டி போன்ற பிரதேச மக்களும் முல்லைத்தீவில் கேப்பாப்பிலவு மக்களும் தமது காணிகளை விடுவிக்குமாறு போராடி வருகின்றனர். அது மாத்திரமின்றி, மன்னார், கிளிநொச்சி, கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் தங்கள் வாழ்வாதார நிலங்களை மீட்க தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது தொடர்பில் ஜனாதிபதியிடம் விரிவாக எடுத்துக் கூறினோம்.

அதற்கு அவர்கள் முப்படைகளிடம் எந்தெந்த காணிகளை விடுவிக்க முடியும் என அறிக்கை ஒன்றினை வழங்குமாறு கூறியுள்ளோம். அறிக்கை கிடைத்ததும் அதன் அடிப்படையில் காணி விடுவிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என கூறியுள்ளனர்.

மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என்ற எமது நோக்கத்தில் மாற்றமில்லை என அரசாங்கம் கூறி வந்தாலும், இரண்டு வருடங்களாக இதையே கூறி வருகின்றனர். இது ஏற்புடையதில்லை.

யாழ்ப்பாணத்தில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவுக்கு காணிகள் விடுவிக்கப்படவில்லை. ஒருசில வீதிகளை மாத்திரமே விடுவித்துள்ளனர்.

தொடர்ச்சியாக மக்கள் தமது காணிகளை விடுவிக்கவேண்டும் என கோரி போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். அரசாங்கம் மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.

நாங்களும் போராட்ட களத்தில் நின்றவர்கள் என கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், மக்களின் போராட்டங்களை, கண்டுகொள்ளாமல் இருப்பதும், அவர்களின் கோரிக்கைகளை செவி சாய்க்காது இருக்கின்றமையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

நாங்கள் இனவாதிகள் அல்ல, மதவாதிகள் அல்ல என அரசாங்கம் கூறிக்கொண்டாலும், செயலில் அவ்வாறு இல்லை என்றே கூற முடியும் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.