Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா “தமிழ் சினிமாவின் அசுரக் கலைஞன்” : வெற்றிமாறன் பிறந்ததினம் இன்று

“தமிழ் சினிமாவின் அசுரக் கலைஞன்” : வெற்றிமாறன் பிறந்ததினம் இன்று

5 minutes read

வெற்றிமாறன் கண்டிப்பாக இந்திய சினிமாவின் one of the finest director. இதை எந்தத் தயக்கமும் இல்லாமல் அவரது சினிமாவைத் தொடர்ந்து கவனிக்கும் யாராலும் சொல்லிவிட முடியும். அதேபோல் ஒரு இயக்குநரால் நான்கே படங்களில் இந்த உயரத்தில் நின்றுவிட முடியாது என்பதும், வெற்றிக்கு அது சாத்தியம் ஆகியிருக்கிறது என்பதும் சினிமா மீது அவர் கொண்டிருக்கும் மரியாதையின் சாட்சி.

நான்கே சினிமாக்களில் உலக அரங்கு வரை தமிழ் சினிமாவை அழைத்துச் சென்ற இந்த அசுரக் கலைஞனுக்கு இன்று பிறந்தநாள். சினிமாவாகவும், வளர்ச்சியாகவும் வெற்றியின் பயணத்தை ஒரு கொண்டாட்டமாக இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

எப்போதும் நல்ல கலைஞர்களால் இது போதும் என்கிற இடத்துக்கு வந்துவிடவே முடியாது. தனது ஒவ்வொரு படைப்பிலும், ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கான இடைவெளியில் எவ்வளவு முன்னேறியிருக்கிறோம் என்பது அவர்களுக்கு மிகவும் தேவையானதாக இருக்கும். அந்த மாதிரி ஒருவராகவே வெற்றியும் இருக்கிறார்.

“தமிழ் சினிமாவின் அசுரக் கலைஞன்” : வெற்றிமாறன் பிறந்ததின சிறப்புப் பகிர்வு! #HBDVetrimaaran

தொடர்ந்து அவரது சினிமாக்களை கவனிப்பவர்களுக்கு அவரது ஒவ்வொரு படத்திலும் ஏற்படும் வளர்ச்சியை உணர முடியும். அதுவேதான் அவர் சினிமாவில் நிகழ்த்தியிருக்கும் அதிர்வுகளைத் தவிர்க்க முடியாததாக மாற்றுகிறது. பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை என ஒவ்வொரு சினிமாவிலும் அவரது Evolvement இருக்கிறது. எப்படி? வரிசைப்படி அவர் சினிமா வாயிலாகவே வருவோம்.

உதவி இயக்குநராக இருந்த சமயத்தில் வெற்றி தனது முதல் படமாக நிறைய யோசித்து வைத்திருந்தார். மருத்துவ காப்பீட்டு ஊழல்களை மையமாக வைத்து, ‘வியூகம்’ என்ற கதையை உருவாக்கியிருந்தார். அது நல்ல கதை ஆனால், அதை விற்கவே முடியவில்லை என வெற்றியே கூறியிருக்கிறார். ஒரு காதல் ஜோடியை மையமாக வைத்து `தேசிய நெடுஞ்சாலை’ என்ற கதையை உருவாக்கினார். அது நிறைய பேருக்குப் பிடித்திருந்தாலும், வெவ்வேறு காரணங்களுக்காக தள்ளிப் போனது. பின்பு அதுதான் வெற்றிமாறன் எழுத்திலும் தயாரிப்பிலும், மணிமாறன் இயக்கத்தில் `உதயம் NH4′ ஆக உருவானது. இப்படியான ஒரு கதையாகத்தான் பைக்கை மையமாக வைத்தும் வெற்றி ஒரு கதையை உருவாக்கியிருந்தார்.

அந்தக் கதையும், `அது ஒரு கனா காலம்’ படத்தில் வேலை செய்ததன் மூலம் சந்தித்த தனுஷும்தான் அவரின் சினிமா வருகையை சாத்தியப்படுத்துவார்கள் என்பது அப்போது வெற்றிக்கு தெரிந்திருக்காதுதான். பொல்லாதவன் கதையை விடாப்பிடியாக வைத்துக்கொண்டு பல தயாரிப்பாளர்களை சந்தித்தார் வெற்றி. ஆனால், ஹீரோ மட்டும் மாறவே இல்லை, தனுஷ்தான். கடைசியில் பொல்லாதவனும் பல தடைகள் தாண்டி உருவானது. அதிலிருந்து அவரது பயணம் நாம் அனைவரும் அறிந்ததே.

“தமிழ் சினிமாவின் அசுரக் கலைஞன்” : வெற்றிமாறன் பிறந்ததின சிறப்புப் பகிர்வு! #HBDVetrimaaran

பொல்லாதவன், ஒரு கமர்ஷியல் சினிமா என்பதில் எப்போதும் மாற்றமே கிடையாது. உள்ளே இருந்த காமெடியும், கவர்ச்சிப் பாடலும் என பல மசாலாக்கள் சேர்த்தே உருவாகியிருந்தது. கூடவே தான் எழுதிய சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டில் காணாமல் போனதையும், எடிட்டிங் டேபிளில் அதை கண்டடைவதே பெரிய போராட்டமாகவும் இருந்தது பற்றி வெற்றிமாறன் தொடர் ஒன்றில் கூறியிருந்தார்.

இதை எல்லாம் மீறி பொல்லாதவன் மிகப்பெரிய வெற்றியடைந்தது. என்ன காரணம்? வெற்றி தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி அலைந்த காலத்தில், தன் கதைக்கு தயாரிப்பாளர் கிடைக்காததால், ”இனிமே விக்கிற கதைய எழுதணும்” என்ற முடிவை எடுத்தும் எழுதினார். ஒருவேளை பொல்லாதவன் வெற்றிக்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். இதைத் தாண்டி இன்னொன்று இருக்கிறது. பொதுவாக ஒரு கமர்ஷியல் சினிமா என்பது, தனக்குள் எந்த ஒழுக்கத்தையும் பெற்றிருக்க அவசியமில்லை என்ற பார்வை உண்டு. ஆனால், பொல்லாதவன் கதாபாத்திரங்கள் மிக நேர்த்தியாக எழுதப்பட்டிருந்தன. அதனாலேயே படத்தில் வரும் காமெடிகள், பாடல்களை எடுத்துவிட்டுப் பார்த்தால், அதற்குள் இருக்கும் கச்சிதம் புரியும்.

பொல்லாதவன் படத்தின் மிக முக்கியமான காட்சி, பலருக்கும் பிடித்த காட்சியாகவும் மாறியது. பிரபுவின் அப்பாவை, குணாவின் தம்பி தவறுதலாகத் தாக்கிவிடுவார். சமாதானம் பேசுவதற்கு மருத்துவமனைக்கு வரும் குணாவை பிரபு எதிர்கொள்ளும் அந்தக் காட்சி. இது ஒன்றை வைத்தே பொதுவாக வரும் மூளை வளர்ச்சியற்ற மசாலா படங்களுக்கும், பொல்லாதவனுக்கும் இடையேயான வித்தியாசத்தை விளங்கிக் கொள்ள முடியும்.

“தமிழ் சினிமாவின் அசுரக் கலைஞன்” : வெற்றிமாறன் பிறந்ததின சிறப்புப் பகிர்வு! #HBDVetrimaaran

இன்னும் விரிவாகச் சொல்வதென்றால், படத்தின் முக்கியமான கதாபாத்திரம் மட்டுமே இந்தக் கதையை நகர்த்தவில்லை. படத்தில் வருகிற ஒவ்வொரு கதாபாத்திரமும் இந்த ப்ராசஸில் ஈடுபடுவதை நம்மால் உணர முடியும். அதுதான் ஒரு நல்ல திரைக்கதையின் அடையாளம். இதில் மட்டும் என்றில்லை. இதை தனது ஒவ்வொரு படத்திலுமே கூட நடத்துகிறார் வெற்றி.

ஆடுகளம் படத்தை எடுத்துக் கொள்ளலாம். பேட்டக்காரன் கதாபாத்திரத்துக்கும் – கே.பி.கருப்பு கதாபாத்திரத்துக்குமான உரசல் ஏற்படும் தருணங்களில் எல்லாம், தவறாகப் புரிந்து கொள்ளப்படும் செயலோ, மிகைப்படுத்தி ஒன்றைச் சொல்லும் கதாபாத்திரமோ சேர்ந்தே இருக்கும். இப்படி ஒரு கதையை எழுதுவதோ, அதை நினைத்ததற்கு நெருக்கமான வடிவத்துக்குக் கொண்டுவரவோ தேவைப்படும் அத்தனையும் வெற்றிக்கு கைவந்தது.

இப்போது யோசித்துப் பாருங்கள், களமாகவும் – கையாண்ட விதமாகவும் பொல்லாதவனில் இருந்து ஆடுகளம் எவ்வளவு முன்னேறிய சினிமாவாக உருவாகியிருக்கிறது என்று. ஆனால் இதையும் விட மிக பயங்கரமான வளர்ச்சி விசாரணை படத்தினுடையது. அதனாலேயே விசாரணை படத்தை ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்பதில் வெற்றிக்கு ஒரு கவலையும் இருந்தது. ஆனால் படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும், பல்வேறு திரைவிழாக்கள் சென்றும் வேறு பாய்ச்சலை நிகழ்த்தியது.

“தமிழ் சினிமாவின் அசுரக் கலைஞன்” : வெற்றிமாறன் பிறந்ததின சிறப்புப் பகிர்வு! #HBDVetrimaaran

பொதுவாக பிரம்மாண்ட சினிமா என்பது, பெரிய பெரிய செட் போட்டு, ஸ்டைலிஷான ஆடைகள் போட்டு, வெளிநாடு சென்று காட்சி எடுத்து, கூட்டம் கூட்டமாக ஆடி, பாடி, சண்டை போடுவது என்கிற வழக்கு ஒன்று இங்கே உண்டு. இதையெல்லாம் தாண்டிய பிரம்மாண்டம் எழுத்தில் இருக்கிறது என்பதை வெற்றி படம் போட்டு விளக்கியவர். அதில் மிக முக்கியமான ஒரு உதாரணம். வடசென்னை என்கிற அசுரத்தனமான திரைக்கதை.

இத்தனைக்கும் வடசென்னை இன்னும் நமக்கு முழுமையாக சொல்லப்படவில்லை. ஆனால் படத்தில் நாம் உணர்ந்த முழுமையை சாத்தியப்படுத்தியது வெற்றியின் தீவிரமான எழுத்துதான். இப்படி படத்துக்குப் படம் தன் வழியாக மக்களுக்கு கடத்தப்படும் சினிமாவை மெருகேற்றி, தானும் Evolve ஆவதுதான் இப்போது வெற்றியை இந்த உயரத்துக்கு கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.

சமீபத்தில் அசுரனின் பத்திரிகையாளர் சந்திப்பில் பலரும் பேசியது, அசுரன் தான் வெற்றியின் மிகச் சிறந்த படமாக இருக்கும் என சொன்னார்கள். ஆனால், நாம் உறுதியாக நம்பலாம், அசுரனையும் தாண்ட அவர் ஒரு சினிமாவுக்கு தயாராகிக் கொண்டிருப்பார். அதையும் நாம் பார்த்து பிரமிப்போம்!

பிறந்தநாள் வாழ்த்துகள் வெற்றிமாறன்..!

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More