‘ஒன்பது ரூபாய் நோட்டு’ | 15 ஆண்டுகள் | தங்கர் பச்சான்

“எந்த ஒரு சிறந்த படைப்பும் அதற்குத் தேவையானவற்றை தானே தகவமைத்துக் கொள்ளும் என்பதைப் பலமுறை பட்டறிந்திருக்கிறேன்” என ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ படம் குறித்து இயக்குநர் தங்கர் பச்சான் நெகிழ்ந்துள்ளார்.

சத்யராஜ் நடிப்பில் உருவான ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ படம் வெளியாகி 15 ஆண்டுகள் கடந்ததையொட்டி அதன் இயக்குநர் தங்கர் பச்சான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நெகிழ்ச்சிப் பதிவொன்றை பகிர்ந்துள்ளார். அதில், “எனது 25-ஆம் அகவையில் எழுதத் தொடங்கி 11 ஆண்டுகளுக்குப் பின் 1996-ஆம் ஆண்டில் புதினமாக வெளியாகி 2007-ஆம் ஆண்டில் “ஒன்பது ரூபாய் நோட்டு” திரைப்படமாக வடிவம் கொண்டது.

எந்த ஒரு சிறந்த படைப்பும் அதற்குத் தேவையானவைகளைத் தானே தகவமைத்துக் கொள்ளும் என்பதைப் பலமுறை பட்டறிந்திருக்கிறேன். அவ்வாறே இத்திரைப்படத்தில் பங்களிப்பு செய்த நடிப்புக் கலைஞர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் முழுமையான ஈடுபாட்டுடன் பணியாற்றினர்.

சத்யராஜ், அர்ச்சனா, நாசர், ரோகிணி, நடன இயக்குநர் சிவசங்கர் என அனைவரும் இந்தப் பாத்திரங்களாகவே எக்காலத்துக்கும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். பரத்வாஜ் இசை, வைரமுத்து பாடல்கள், லெனின் படத்தொகுப்பு, ஜாக்கி கலை இயக்கம் அனைத்துமே ஈடு இணையற்றவை.

தமிழ் மரபின் குடும்ப உறவுகள், உழவுக் குடும்பத்தின் சிக்கல்கள், சினிமாத்தனமற்ற உரையாடல்கள் என அனைத்தும் கொண்ட இவ்வாறான நம் மண் சார்ந்த படைப்புகளை என் உயிர் உள்ளவரை படைக்க வேண்டும் என்பதே என் பெரு விருப்பம். நான் மட்டும் நினைத்தால் அவை ஈடேறாது. எழுத்தில் உயிர் வாழ்ந்த ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ உயிர் ஓவியமாக, திரைப்படமாக வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மருத்துவர் கணேசனை என்றென்றும் மறவேன்” என தெரிவித்துள்ளார்.

இதனிடையே படத்தில் நடித்த நடிகர் பத்மன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “15-ஆவது வயதில் ‘ஒன்பது ரூபாய் நோட்டு’. அடுத்த பட வேலைகள் ஆரம்பித்து விட்டது வரவில்லையா?’ எனக் கேட்ட ராஜாபக்கிரிசாமியின் வார்த்தைகள் அன்றைய காலைப்பொழுதை பரபரப்பாகியது. அப்போதுதான் ‘பள்ளிக்கூடம்’ திரைப்படம் வெளிவந்திருந்த நிலையில் அதற்குள் அடுத்த படமா என்று கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. ஆனால், ஐயா தங்கர் பச்சானின் உழைக்கும் வேகம் உலகறிந்ததே, அவசரமாக கிளம்பி காலை பத்தரை மணி அளவில் அலுவலகத்திற்கு வந்தேன்.

ஏகப்பட்ட கூட்டம் எல்லாம் நடிகர்கள் தேர்வுக்காக. அதுநாள் வரை நான் நடிகனாக பெருமுயற்சி எடுத்ததில்லை நான் உதவி இயக்குநருக்காக முயற்சித்துக் கொண்டிருந்த வேலையில் பள்ளிக்கூடம் படத்தில் எனக்கு ஒரு காட்சியில் நடிக்கும் வாய்ப்பை தந்திருந்தார் தங்கள் பச்சான். அதற்கு தூண்டுகோலாக இருந்தது அண்ணன் அஜயன்பாலா தான். அண்ணனின் மூலமாக அடுத்து ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ நாவல் திரைப்படமாக போகிறது என்ற தகவல் தெரிந்தபோது மனம் மிக மகிழ்ந்தது.

அந்த நாவலின் ஒவ்வொரு வரியும் எனக்கு அவ்வளவு பிடிக்கும். அதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் எனக்கு நன்றாக தெரிந்ததுதான். நண்பன் ராஜா பக்கிரிசாமியின் தூண்டுதலும் அண்ணன் அஜயன் பாலாவின் வார்த்தைகளும் ஐயா இயக்குநர் தங்கர்பச்சானின் ஊக்குவிப்பும் சரி முயற்சித்து பார்ப்போம் என்று தோன்றியது. காலை 11 மணிக்கு முதல் காட்சியை நடித்துக் காட்ட தயாரானேன், அடுத்தது அடுத்தது என்று தேர்வுநிலை கூடிக்கொண்டே போனது, இரவு 11 மணிக்கு ஐயா தங்கர்பச்சன் முன்பு படத்தில் பொங்கலன்று சாப்பிடும் அந்த காட்சியை நடித்துக்காட்டினேன். ஒருவாறு ஒப்புக்கொண்டவர் ‘மாணிக்கம் ஒரு குடிகாரன், உடம்பு இப்படி இருக்க கூடாது குறைக்கப் பாரு’ என்று சொல்லிவிட்டு சென்றார்.

அப்போது நான் 85 கிலோ இருந்தேன். அன்று காலை வீட்டில் சாப்பிட்டு கிளம்பியது தான். அதன்பிறகு சோறு சாப்பிட்டது 15 நாட்கள் கழித்து படப்பிடிப்பு முடிந்துதான். தினமும் குறைந்தது 20 கிலோமீட்டர் நடைபயிற்சி. படப்பிடிப்பிற்கு கிளம்பும்போது நான் 72 கிலோவிற்கு வந்திருந்தேன். அதன் பிறகான ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிகழ்வும் அற்புதங்கள் தான். 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் என் அம்மா, அப்பாவுடன் பேச வைத்ததில் தொடங்கி எண்ணற்ற மாற்றங்களை என் வாழ்வில் நிகழ்த்தியது இந்த ஒன்பது ரூபாய் நோட்டு தான்… அதில் எனக்கு வாய்ப்பளித்த ஐயா தங்கர்பச்சனை வணங்கி மகிழ்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

ஆசிரியர்