இங்கிலாந்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருவதாக பெரும்பாலான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
லாய்ட்ஸ் பிசினஸ் பாரோமீட்டர் (Lloyds Business Barometer) மேற்கொண்ட ஆய்வில், இங்கிலாந்து நிறுவனங்கள் AI தொடர்பான பரிசோதனைகளைத் தாண்டி, தங்களது ஆள்சேர்ப்பு மற்றும் பணியாளர் தேவைகளில் மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
ஆய்வின்படி, இங்கிலாந்து நிறுவனங்களில் சுமார் நான்கில் ஒரு பகுதியினர் AI திறன்களைக் கொண்ட பணியாளர்களை அதிகளவில் ஆட்சேர்ப்பு செய்து வருகின்றனர். அதேவேளை, ஐந்தில் ஒரு பகுதி நிறுவனங்கள் AI தொழில்நுட்பத்துக்காகவே புதிய மற்றும் பிரத்யேக வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளன.
ஒட்டுமொத்தமாக, ஆய்வில் பங்கேற்ற நிறுவனங்களில் 54 சதவீதத்தினர் AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு வழிவகுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
லாய்ட்ஸ் நிறுவனத்தின் வணிக மற்றும் வர்த்தக வங்கிப் பிரிவின் தலைமை நிர்வாகி அமண்டா மர்ஃபி, நிறுவனங்கள் AI தொழில்நுட்பத்தை வெறுமனே அணுகுவதில் கவனம் செலுத்துவதை விட, அதனை திறம்பட பயன்படுத்துவதற்குத் தேவையான திறன்கள், நிறுவன கலாச்சாரம் மற்றும் நம்பிக்கையை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி தொழிலாளர் சந்தையில் இருவிதமான தாக்கங்களை ஏற்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஒருபுறம், AI-ஐ வெற்றிகரமாக பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு உற்பத்தித்திறன் மற்றும் வளர்ச்சியில் பலன்கள் கிடைக்கின்றன. மறுபுறம், சில துறைகளில் பணியிடங்கள் குறைவதற்கான சாத்தியமும் உருவாகியுள்ளது.
பேங்க் ஆஃப் இங்கிலாந்து (Bank of England) ஊழியர்கள் மேற்கொண்ட ஆய்வும், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நிறுவனங்கள் அதிக உற்பத்தித்திறனைப் பதிவு செய்து வருவதை சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், இந்த உற்பத்தித்திறன் அதிகரிப்பு சில சந்தர்ப்பங்களில் வேலைவாய்ப்புகள் குறைவதுடனும் தொடர்புடையதாக இருப்பதாக அந்தப் பகுப்பாய்வு தெரிவித்துள்ளது.
இதனால், எதிர்காலத்தில் AI திறன்களைக் கொண்ட பணியாளர்களுக்கான தேவை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதுடன், தொழிலாளர்கள் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தங்களது திறன்களை மேம்படுத்த வேண்டிய தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.