March 31, 2023 7:35 am

‘ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி’ வாணி ஜெயராம் காலமானார்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பிரபல தென்னிந்திய திரைப்பட பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று (பெ. 4) தனது 78ஆவது வயதில் காலமானார். 

அவர் வீட்டில் தவறி விழுந்து நெற்றியில் அடிபட்டு உயிரிழந்ததாக இந்திய செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளன. 

அண்மையில் வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது மறைவுச் செய்தி இசை ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

30 நவம்பர் 1945 அன்று வேலூர் மாவட்டத்தில் இசைக் குடும்பத்தில் பிறந்தவர் வாணி ஜெயராம்.

ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி என அழைக்கப்படும் வாணி ஜெயராம் கர்நாடக சங்கீத துறையிலும் திரையிசை துறையிலும் பல மேடைகளை, கான கச்சேரிகளை சந்தித்தவர். 

இவர் 1974ஆம் ஆண்டு வெளியான ‘தீர்க்க சுமங்கலி’ என்ற படத்தில், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்….’ என்ற பாடலை பாடி தமிழ் திரையிசைக்கு அறிமுகமானார்.

‘நித்தம் நித்தம் நெல்லு சோறு…’, ‘என்னுள்ளில் எங்கோ ஏங்கும் ஜீவன்…’, ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…’, ‘பாரதி கண்ணம்மா…’, ‘நினைவாலே சிலை செய்து…’, ‘கேள்வியின் நாயகனே…’, ‘அந்தமானை பாருங்கள் அழகு….’, ‘ஒரே நாள் உனை நான்….’ என பல்லாயிரம் பாடல்களை பாடியுள்ளார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் பாடல்கள் பாடிய இவர் நான்கு தேசிய விருதுகள், நான்கு மாநில விருதுகள் உட்பட பல விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார்.

வாணி ஜெயராமின் மறைவு குறித்து திரைத்துறையினரும் கலைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்