செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா படை(த்) தலைவன் | திரைவிமர்சனம்

படை(த்) தலைவன் | திரைவிமர்சனம்

2 minutes read

படை(த்) தலைவன்- திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : வி ஜெ. கம்பைன்ஸ்

நடிகர்கள் :  சண்முக பாண்டியன் விஜயகாந்த், கஸ்தூரி ராஜா, யாமினி சந்தர், முனீஸ்காந்த், ரிஷி ரித்விக், யூகி சேது, அருள் தாஸ், கருடா ராம், ஏ.வெங்கடேஷ் மற்றும் பலர்.

இயக்கம் : யு. அன்பு

மதிப்பீடு: 2 / 5

கேப்டன் விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘படை(த்) தலைவன்’. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் விஜயகாந்த் தோன்றியிருக்கும் இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

தமிழகத்தின் பொள்ளாச்சி எனும் பகுதியில் மண்பாண்ட தொழில் செய்யும் கஸ்தூரி ராஜாவின் மகன் வேலு( சண்முக பாண்டியன்) . இவர்கள் மண்பாண்ட தொழில் செய்வதுடன் ‘மணியன்’ என்ற பெயரிலான யானை ஒன்றையும் வளர்க்கிறார்கள். இதற்கு வேலு பாகனாகவும் இருக்கிறார். பருவநிலை பொய்த்துப் போனதால் நாளாந்த வாழ்வாதாரத்திற்கு கஷ்டப்படும் அந்த குடும்பம் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளுக்காக வசதியுள்ள உறவினர் ஒருவரிடம் கடன் வாங்குகிறது.

அந்த கடன் சுமை கழுத்தை நெரிக்க வேறு வழி இல்லாமல் தாங்கள் ஆசை ஆசையாய் பாசத்துடன் வளர்க்கும் யானையை சுப நிகழ்வுகளுக்கு அழைத்துச் சென்று வருவாய் ஈட்ட திட்டமிடுகிறார்கள். இதற்காக திரைப்படத் துறையில் இருக்கும் தயாரிப்பு நிர்வாகி ஒருவரை சந்தித்து உதவி கேட்கிறார்கள்.

அவர் அந்த யானையின் வரலாறை தெரிந்து கொண்டு, சட்ட விரோதமான காரியங்களில் ஈடுபட்டு, யானையை அவர்களிடம் இருந்து தந்திரமாக பிரித்து விடுகிறார். அதன் பிறகு என்ன நடந்தது ? என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் கதை.

இதே தருணத்தில் வட இந்தியாவில் அடர்ந்த வனப்பகுதியில் திலகன் ( கருடா ராம்) எனும் ஒரு உயிர் பலி கொடுக்கும் பூசாரி-  அந்த காட்டை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கிறார். அதனால் அங்கு வாழும் மக்கள் தங்களுடைய வன தேவதை வணங்க முடியாமல் தவிக்கிறார்கள். அத்துடன் அந்த திலகனுக்கு அடிமையாகவும் அங்குள்ள மக்கள் வாழ்கிறார்கள். இவர்களுக்கு விடிவு காலம் யார் மூலம் எப்படி கிடைக்கிறது? என்பதையும் இந்த கதையுடன் இணைத்து சொல்லி இருக்கிறார்கள்.

முதல் பாதியில் தமிழக கிராமத்தில் எளிய பின்னணியுடன் வாழும் குடும்பமும், அந்த குடும்பத்தில் ஒரு உறுப்பினராக யானையும் காட்சிப்படுத்தப்படுவது புதிதாக ஏதோ ஒன்றை சொல்ல முயல்கிறார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அது தொடர்பான காட்சி நகர்வுகளும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

ஆனால் யானை அந்த குடும்பத்தில் இருந்து சதி செய்யப்பட்டு, வட இந்தியாவிற்கு பலி கொடுப்பதற்காக கடத்தப்பட்ட பிறகு திரைக்கதை நம்பக தன்மையை இழந்து அப்பட்டமான கமர்சியல் அம்சங்களுக்கு தாவுகிறது. இங்குதான் ரசிகர்களுக்கு அமில சோதனை ஆரம்பமாகிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஊடாக  ஒரு காட்சியில் தோன்றும் கேப்டன் விஜயகாந்த்தின் திரை தோற்றம் நேர்த்தியாக வடிவமைக்கப்படவில்லை. இருப்பினும் ரசிகர்கள் விஜயகாந்த் திரையில் தோன்றியதும் ஆர்ப்பரிக்கிறார்கள்.

கதையின் நாயகனான வேலு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சண்முக பாண்டியன் சில இடங்களில் நடிக்க முயற்சி செய்திருக்கிறார். அத்துடன் அவரும் அவருடைய தந்தை போல் அதிரடி எக்சன் காட்சிகளில் அனாயாசமாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டை பெறுகிறார்.

உடல் மொழி – தோற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்திய சண்முக பாண்டியன் கதையையும்‌ துல்லியமாக தெரிவு செய்திருந்தால் பாரிய வெற்றி கிடைத்திருக்கும்.

இயக்குநர் கஸ்தூரிராஜா இந்த படத்தில் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். இவரைக் கடந்து திலகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருடா ராம் கவனிக்க வைக்கிறார்.‌

அடர்ந்த வனப்பகுதியின் பின்னணியில் கதைக்களம் அமைக்கப்பட்டிருப்பதால் ஒளிப்பதிவாளர் – இயற்கையின் அழகியலை நேர்த்தியாக காட்சி படுத்தி காண்போரின் கண்களை குளிர்விக்கிறார். இதற்கு இசைஞானியின் பின்னணி இசையும் பல தருணங்களில் தாலாட்டுகிறது.

படை (த் ) தலைவன் –  ஒலிக்காத முரசு.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More