அறிமுக நடிகர் ராஜ கணபதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஏ படம் ‘ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இந்திய மக்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திரு.தொல் திருமாவளவன் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இயக்குநர் ‘கேஸ்ட்லெஸ் சிவா. கோ இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏ படம்’ எனும் திரைப்படத்தில் ராஜகணபதி மேகா ஸ்ரீ ,சந்திர போஸ், அஸ்மிதா, சுஷ்மிதா மற்றும் பலர் நடித்துள்ளனர். எம். சதீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜோஸ் பிராங்கிளின் இசையமைத்திருக்கிறார்.
சமூகத்தில் ஏற்பட வேண்டிய மாற்றங்களை குறித்து உணர்வுபூர்வமாக விவரித்திருக்கும் இந்த திரைப்படத்தை மாங்காடு அம்மன் மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ராஜகணபதி தயாரித்திருக்கிறார்.
பல தடைகளைக்கடந்து எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் வெளியாகும் இப்படத்தைப் பற்றி தயாரிப்பாளர் ராஜகணபதி பேசுகையில், ” ஒரு விவசாயி அவர் எதிர்கொண்டுள்ள சிக்கலான தற்போதைய சமூக சூழலை அம்பேத்கர் மறு பிறவி எடுத்து வந்தால் எப்படி எதிர்கொள்வார் என்பதை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கினோம்.
தணிக்கை சான்றிதழ் வாங்குவதில் ஏராளமான தடைகளை எதிர் கொண்டோம். இதனால் ஒன்றரை ஆண்டு காலம் நீதிமன்ற போராட்டத்திற்கு பிறகு இப்படத்திற்கு தணிக்கை சான்றிதழை பெற்று இருக்கிறோம். இந்த திரைப்படம் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் படமாளிகையில் வெளியாகிறது. இதில் நான் அம்பேத்கர் வேடத்தில் நடித்துள்ளேன். தற்போதைய சமூகத்தில் நிலவும் அவலங்கள் குறித்து அம்பேத்கர் பேசுவது போல் நடித்திருக்கிறேன். இது அனைத்து சமூகத்தினரும் பார்த்து ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.