செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா காதல் ரீசெட் ரிப்பீட் | திரைவிமர்சனம்

காதல் ரீசெட் ரிப்பீட் | திரைவிமர்சனம்

2 minutes read

காதல் ரீசெட் ரிப்பீட் – திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : மாலி& மான்வி மூவி மேக்கர்ஸ் – டி ஸ்டுடியோஸ் – டென் வி புரொடக்ஷன்

நடிகர்கள் : மதும்கேஷ், ஜியா சங்கர், அர்ஜுன் அசோகன், எம். எஸ். பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் மற்றும் பலர்.

இயக்கம் : விஜய்

மதிப்பீடு : 2/5

இயக்குநர் விஜய் இயக்கத்தில் வெளியாகும் படைப்புகள் அனைத்து தரப்பினரையும் கவரும் என்ற நம்பிக்கையில் அவரது இயக்கத்தில் உருவான ‘காதல் ரீசெட் ரிப்பீட் ‘  திரைப்படத்தை காண பட மாளிகைக்குள் சென்ற ரசிகர்களுக்கு இயக்குநர் மீதான நம்பிக்கை அதிகரித்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

தேயிலை தோட்ட அதிபரின் மகளான அதிதி( ஜியா சங்கர்) இசைமீது பேரார்வம் கொண்டவர். தனியாக இசைக்குழு ஒன்றையும் உருவாக்கி அதில் பாடகியாகவும் பங்கு பற்றி தன் கலைச் சேவையை தொடர்கிறார். ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெறும் சர்வதேச அளவிலான இசை போட்டியில் பங்கு பற்றி வெற்றி பெற வேண்டும் என்ற இலட்சியத்தையும் கொண்டிருக்கிறார்.

ஹரி கிருஷ்ணன் ( அர்ஜுன் அசோகன்) அதிதியின் இசைக்குழுவின் பணியாற்றும் இசைக்கலைஞர். அதிதியை காதலிக்கிறார்.

சித்தார்த் ( மதும்கேஷ்) சிறுவயது முதல் அதிதியை அவரது இசை திறமையால் வியந்து நேசிக்கிறார். அதிதியை எப்போதும்.. எங்கும்.. ஒரு தலையான நேசத்துடன் பின் தொடர்கிறான். இந்த மூவருக்கும் இடையேயான காதல் கதை தான் காதல் ரீசெட் ரிப்பீட்.

உணர்வு ரீதியிலான தாக்கத்தால் திடீரென்று தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடும் அதிதி அதிலிருந்து மீட்கும் போது 24 மணி தியாலத்திற்கு மட்டுமே அவருடைய நினைவுகள் இருக்கும் என்ற குறைவான நினைவுத்திறன் கொண்ட பெண்ணாக மாறுகிறார். நேற்றைய நினைவுகளை தொலைத்து விட்டு, ஒவ்வொரு நாளையும் புதிதாக தொடங்கும் அதிதியிடம், ‘நான் தான் உன் காதலன்’ என ஹரியும், சித்தார்த்தும் சொல்ல.. குழம்பும் அதிதி.. எம் மாதிரியான முடிவை மேற்கொள்கிறார் என்பதை விவரிப்பது தான் இப்படத்தின் திரைக்கதை.

ஸ்காட்லாந்து எனும் நிலவியல் பின்னணியில் கதையும், சம்பவங்களும் பெரும்பாலும் நடைபெறுகிறது. இதன் மூலம் பார்வையாளர்களுக்கு  நல்லதொரு விசுவல் விருந்து கிடைக்கிறது.

கதாபாத்திரங்கள் இசையால் பிணைக்கப்பட்டிருப்பதால் நல்லதொரு இசை அனுபவம் ரசிகர்களுக்கு கிடைக்கிறது.  அதிலும் இரண்டாம் பாதியில் கர்நாடக இசை சங்கதிகளுடன் கூடிய பாடலை சிங்கிள் ஷாட்டில் படமாக்கி வழங்கி இருப்பதை பாராட்டலாம்.

‘அம்மா உனக்காக இருக்கிற மாதிரி.. நீ அவங்களுக்காக ( அதிதி) இருக்கணும். எப்பவும் அவங்களுக்கு நல்லதே நடக்கணும்னு நினைக்கணும்’  என அம்மா சொன்னதை வேதவாக்காக எடுத்துக் கொள்ளும் சித்தார்த், அதிதியை பின்தொடர்வது.. அது அவருக்குள் ஒரு தலை காதலாக மாறினாலும்..அதை வெளிபடுத்தாமல் மனதிற்குள் பூட்டி வைத்திருப்பது…. என கதாபாத்திரத்தை வடிவமைத்திருப்பதில் தான் சிக்கல்.

காதல் என்பது நேசிப்பவர்களிடம் அன்பை பகிர்ந்து கொள்வது.. இதுதான் டிஜிட்டல் திரையில் படைப்பாளிகளால் உருவாக்கப்பட்டிருக்கும் காதல் பிம்பம்.  ஆனால் இந்தப் படத்தில் காதல் என்பது நேசிப்பவர்களை மௌனமாக அவதானித்துக்கொண்டிருந்தாலும்… அது உணர்வு ரீதியாக கடத்தப்படும் என சொல்லி இருக்கிறார்கள். இதற்காக நினைவு திறன் இழப்பு பாதிப்பை காதலிக்கு வழங்கி.. இவர்கள் இருவரையும் இணைக்கும் பாலமாக இசையை உருவாக்கி… இப்படி வலிந்து திரைக்கதையை திசை திருப்பி இருப்பது ரசிகர்களை ஒரு புள்ளிக்கு பிறகு சோர்வடையச் செய்கிறது.

சித்தார்த் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அறிமுக நாயகன் மதும்கேஷ்.. கதாபாத்திரத்தை ஒரு கோணத்தில் மட்டுமே உணர்ந்து அதனை திரையில் வெளிப்படுத்தி இருப்பது பெரும் குறை.

ஹரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜுன் அசோகன் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும், அந்த கதாபாத்திரத்தின் உணர்வையும் துல்லியமாக உணர்ந்து நடித்து பாராட்டை பெறுகிறார்.

அதிதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அறிமுக நடிகை ஜியா சங்கர்  திரை தோற்றத்தில் நடிகை தமன்னாவை நினைவு படுத்துவது போல் தோன்றினாலும்.. இசை கலைஞர் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து ரசிகர்களின் கவனத்தை கவர்கிறார்.

ஜெயப்பிரகாஷ்- எம் எஸ் பாஸ்கர் -விஜி சந்திரசேகர் -ஆகியோர் இயக்குநர் சொன்னதை செய்து ரசிகர்களிடம் சபாஷ் பெறுகிறார்கள்.

இசை தொடர்பான காதல் கதை என்பதால் ஹாரிஸ் ஜெயராஜ் இடமிருந்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் அவர் அதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். அதனால் பாடலும் பின்னணி இசையும் ஜஸ்ட் ஓகே.

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு இவை இரண்டும் மட்டும்தான் இயக்குநருக்கு பக்கபலமாக இருக்கிறது.

காதல் ரீசெட் ரிப்பீட் – நோ ஒன்ஸ்மோர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.