செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா கான் சிட்டி | திரைவிமர்சனம்

கான் சிட்டி | திரைவிமர்சனம்

3 minutes read

கான் சிட்டி – திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்

நடிகர்கள் : அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி, அகிலன், அருள்தாஸ், வி டி வி கணேஷ், ராதா ரவி, தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி மற்றும் பலர்.

இயக்கம் : ஹரீஷ் துரைராஜ்

மதிப்பீடு : 2/ 5

‘டார்க் ஹுயூமர் ஜேனரில் ‘கான் சிட்டி’ தயாராகி இருக்கிறது’ என படக் குழு, பட வெளியீட்டிற்கு முன்பு படத்தை விளம்பரப்படுத்தினர். இதனால் ரசிகர்கள் ஆவலுடன் படமாளிகைக்குள் சென்றனர். அவர்களுக்கு அவல நகைச்சுவை உணர்வு ஏற்பட்டதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

மின்வாரிய நிறுவனத்தில் பயனர்களின் மின் கட்டணத்தை வசூலிக்கும் தற்காலிக ஊழியராக பணியாற்றுகிறார் சரவணா( அர்ஜுன் தாஸ் )

ஆதரவற்ற நிலையில் காதலரை நம்பி ஏமாந்து தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் மித்ரா ( அன்னா பென்) கடினமாக உழைத்து சேகரித்து மூன்று இலட்சம் ரூபாயை கொடுத்து ஒரு வீட்டை போக்கியத்திற்கு எடுக்கிறார். ஆனால் அந்த வீட்டின் உரிமையாளர் வாடகை வராததால் வீட்டை காலி செய்ய சொல்கிறார்.  மூன்று லட்சம் ரூபாய் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து மனதிற்குள் அழுகிறார்.

திரைப்பட தயாரிப்பாளரின் மகனான ஜாக்கி( யோகி பாபு) யும், அவரது தாயான ஜானகி( வடிவுக்கரசி) யும் பொருளாதார நிதி நெருக்கடியில் சிக்குகிறார்கள். ஜானகியின் உடல் நலமும் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் சத்திர சிகிச்சை செய்வதற்காக இணையத்தில் நிதி உதவி கோருகிறார் ஜானகி.

சரவணா-  மித்ரா-  ஜாக்கி & ஜானகி-  ஆகிய மூவரும் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்வதற்காக குறுக்கு வழியில் பயணிக்க தொடங்குகிறார்கள். இதன் மூலம் மக்களை ஏமாற்றி லட்ச லட்சமாக சம்பாதிக்கிறார்கள்.

மித்ரா-  ஜாக்கி & ஜானகி ஆகியோர் மக்களை ஏமாற்றி சேமித்த லட்சக்கணக்கான பணத்தை, சரவணா தனியாக தொடங்கிய நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாறுகிறார்கள். சரவணா மக்களின் முதலீட்டை மேலும் விரிவு படுத்துவதற்காக தன்னுடைய நண்பனின் நிறுவனத்தில் முதலீடு செய்கிறார்

. ஆனால் எதிர்பாராவிதமாக அந்த நண்பர் இறந்து விடுகிறார். இதனால் சரவணா- மித்ரா- ஜாக்கி & ஜானகி ஆகியோர் காவல் துறையினரால் கைது செய்யப்படுகிறார்கள். சிறையிலிருந்து இவர்கள் அனைவரும் தப்பித்து மங்களூர் அருகே ஒரு உணவகத்தை தொடங்கி தலை மறைவு வாழ்க்கையை வாழ்கிறார்கள். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மித்ராவின் மகனான ஜீவாவை ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியான கல்யாணசுந்தரம் கடத்துகிறார்.

இதை சற்று தாமதமாக தெரிந்து கொள்ளும் சரவணா, கல்யாண சுந்தரத்திடம் பேச்சு வார்த்தை நடத்துகிறார். ‘தான் இணைய வழியிலான சூதாட்டத்தை ஆட வேண்டும். அதற்கு நான் அடிமையாகி விட்டேன். இதற்காக லட்சக்கணக்கில் பணம் வேண்டும். மீண்டும் மக்களை ஏமாற்றி எனக்கு சம்பாதித்துக் கொடுத்தால் ஜீவாவை விடுவிக்கிறேன்’ என கல்யாணசுந்தரம் நிபந்தனை விதிக்கிறார்.‌ ஜீவாவை தன்னுடைய சொந்த மகனாக கருதும் சரவணா ஜீவாவை விடுவிப்பதற்காக மீண்டும் மங்களாபுரம் திரும்பி,  புது வகையில் மக்களை ஏமாற்ற திட்டமிடுகிறார்.

அந்தத் திட்டம் என்ன? அது வெற்றி பெற்றதா? இல்லையா?  ஜீவா, கல்யாண சுந்தரத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டாரா ? இல்லையா?  என்பதை சிறிது நகைச்சுவையுடனும், சிறிய அளவிலான எதிர்பாராத திருப்பங்களுடனும் விவரிப்பது தான் இப்படத்தின் கதை.

‘சதுரங்க வேட்டை’ பாணியில் மக்களின் நுட்பமான உணர்வை தூண்டி, பேராசையை உண்டாக்கி, பின் அவர்களை ஏமாற்றுவது அரசாங்க அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தற்காலிக ஊழியர். போலியான ரசீதுகளை கொடுத்து மக்களிடம் மோசடி செய்வது…. உடல் நலத்திற்கான சத்திர சிகிச்சைக்கு நிதி உதவி தாருங்கள் என இணைய வழியிலான கோரிக்கை மூலம் கிடைத்த தொகையை ஏமாற்றுவது

வீட்டின் உரிமையாளரிடம் மாதாமாதம் வாடகையை தருவேன் என ஒப்பந்தம் செய்துவிட்டு, அதே வீட்டை மற்றவருக்கு அதிக தொகைக்கு போக்கியத்திற்கு விட்டுவிட்டு வீட்டு உரிமையாளரை ஏமாற்றுவது… ஊடகவியலாளர்- அரசியல்வாதி- அமைச்சர் – ஆகியோரை அவர்களுக்கே தெரியாமல் முறைகேடாக பாவிப்பது… இப்படி பல விடயங்களை திரைக்கதையில் இடம்பெறச் செய்திருந்தாலும்

இதன் திரை மொழியில் சில இடங்களில் மட்டுமே பட மாளிகைக்கான பிரத்யேக அனுபவங்கள் ரசிகர்களுக்கு கிடைக்கிறது. இதில் ஜானகி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மூத்த நடிகை வடிவுக்கரசியும், ஜாக்கி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகி பாபுவும் தங்களுடைய பங்களிப்பை நிறைவாக வழங்கி ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்கள்.

ஜீவாவின் ‘வீல் சேர்’ ரகசியத்தை இயக்குநர் புத்திசாலித்தனமாக உச்சக்காட்சியில் பயன்படுத்தி இருப்பது ரசனை.

படத்தின் முதல் பாதியை விட, இரண்டாம் பாதி திரைக்கதை ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக பயணித்து ரசிக்க வைக்கிறது. முதல் பாதியில் மின்வாரியத்தில் பணியாற்றும் அரசாங்க ஊழியரான கங்காதரனின் ( விடிவி கணேஷ்) பேச்சும், உடல் மொழியும், நடவடிக்கையும் கலகல.

அவல நகைச்சுவை -தற்போதைய மக்களின் ஏமாறும் & ஏமாற்றும் குணம் – வித்தியாசமான கதாபாத்திரங்கள்-  பொருத்தமான நடிகர்கள்-  கச்சிதமான ஒளிப்பதிவு- தரமான பின்னணி இசை- என அனைத்தும் இருந்தும்…. படத்தைப் பார்க்கும் ரசிகர்களிடத்தில் ஏற்பட வேண்டிய ‘மேஜிக்’ மிஸ்ஸிங்!!!

சரவணா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ் சற்று முரண்பாடான கதாபாத்திரத்தை.. உணர்ந்து கையாண்டு, அளவான நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களை வியக்க வைக்கிறார். அதிலும் அவருடைய ஓல்ட் கெட் அப் ‘செம’.

மித்ரா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மலையாள நடிகை அன்னா பென்- ஒரு குழந்தையின் தாய் என்ற கதாபாத்திரத்தின் தன்மையை மேலோட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஜானகி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வடிவுக்கரசி நீண்ட நாள் கழித்து தன் குணச்சித்திர நடிப்பால் ரசிகர்களை சிரிக்க வைத்து கவனம் ஈர்க்கிறார்.

ஜாக்கி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யோகி பாபு வழக்கமான ‘ஒன் லைன் பஞ்ச்’சை விட சில ரியாக்ஷன்கள் மூலமாக கைத்தட்டல்களை பெறுகிறார்.‌

கல்யாணசுந்தரம் எனும் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் நந்தகோபால் பொருத்தமான தெரிவு . வில்லத்தனத்தையும் அளவுடன் வெளிப்படுத்தி ரசிக்க வைக்கிறார்.

கங்காதரன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விடிவி கணேஷ் வழக்கம்போல் கரகர குரலில் டைமிங் பஞ்ச் வசனங்களை பேசி ரசிக்க வைக்கிறார்.

ஏனைய பிரபலமான நட்சத்திர நடிகர்கள் திரையில் தோன்றி ரசிகர்களுக்கு ஆறுதல் தருகிறார்கள்.

2010-  17 காலகட்டங்களில் கதை சம்பவங்கள் நடைபெறுவது போல் விவரிக்கப்பட்டிருப்பதால்… அதற்கான கலை இயக்கமும், பின்னணி இசையும் கவனிக்க வைக்கிறது. ‘ஏமாறாதே ஏமாற்றாதே’ எனும் தத்துவ பாடல் ஓகே.

கான் சிட்டி என்ற தலைப்பிற்கான பொருள் நேரடியாக விவரிக்கப்படவில்லை என்றாலும்.. அவை ஒரு மோசமானவர்கள் வாழும் நகரம் என்பதாக சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

கான் சிட்டி – விட்டி சிட்டி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.