விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணி முயற்சிகளை மேற்கொண்டு வரும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், நிலாவில் மனிதர்கள் வாழக்கூடிய நகரம் அமைக்கும் திட்டத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றுவது நீண்டகால இலக்காக இருந்தாலும், அதற்கு முன்பாக நிலாவில் நகரம் அமைப்பது நடைமுறைக்கு எளிதானதாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட தகவலில், செவ்வாய் கிரகத்தை விட நிலா, பூமிக்கு மிகவும் அருகில் இருப்பதால் அங்கு விண்கலங்களை அடிக்கடி அனுப்புவது சுலபமாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிலாவுக்கு செல்ல சுமார் இரண்டு நாட்கள் மட்டுமே ஆகும் நிலையில், செவ்வாய் கிரகத்தை அடைய சுமார் ஆறு மாதங்கள் வரை தேவைப்படுகின்றன. இந்த நேர வித்தியாசம் செலவினங்களையும் தொழில்நுட்ப சவால்களையும் குறைக்க உதவும் என அவர் விளக்கியுள்ளார்.
மேலும் தொழில்நுட்ப ரீதியாக நிலவில் மனிதர்கள் வாழக்கூடிய அமைப்புகளை உருவாக்குவது சாத்தியமானதாக இருப்பதாகவும், அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் செயல்படும் நகரத்தை உருவாக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.