ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களை வழிமறிப்பதற்கான வரையறுக்கப்பட்ட தற்காப்பு நடவடிக்கைகளுக்காக, அமெரிக்கப் படைகள் இங்கிலாந்து இராணுவத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் கியர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் அமெரிக்கா உத்தியோகபூர்வமாக வேண்டுகோள் விடுத்ததாகவும், அதனை கருத்தில் கொண்டு தற்காப்பு நோக்கில் மட்டுமே இங்கிலாந்து இராணுவத் தளங்களை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை, ஈரானுக்கு எதிரான அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்களில் இங்கிலாந்து எவ்விதமாகவும் ஈடுபடவில்லை என்றும், எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய தாக்குதல்களிலும் இங்கிலாந்து பங்கேற்காது என்றும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.
மேலும், பிராந்திய விமான நிலையங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் மீது ஈரான் ஏவிய ஏவுகணைத் தாக்குதல்களால் சில இங்கிலாந்து குடிமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கியர் ஸ்டாமர் குறிப்பிட்டார்.