வட இலண்டனின் பின்ஸ்பரி பூங்கா பகுதியில் உள்ள வீடொன்றில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் 75 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை இரவு 9.20 மணியளவில் டோலிங்டன் பார்க் வீதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும், மருத்துவக் குழுவினரும் அந்த 75 வயதுப் பெண்ணையும், 81 வயதான ஒரு ஆணையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண் அடுத்த நாள் உயிரிழந்தார். 81 வயதான ஆண் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியுள்ளார். சம்பவம் தெடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்த வழக்கை விசாரித்து வரும் பொலிஸ் குழுவின் தலைவர் டிடெக்டிவ் சீஃப் இன்ஸ்பெக்டர் பென் மாசின்க், தனது குழு சம்பவம் குறித்த அனைத்து வழிகளிலும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், பொதுமக்கள் வழங்கும் தகவல்கள் மிக முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.
“ஏற்கனவே வாக்குமூலம் அளித்து உதவியவர்களுக்கு நன்றி. மேலும், யாரேனும் தகவல் அல்லது கெமரா பதிவுகளைப் பெற்றிருந்தால், அவற்றை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இப்பகுதியில் உள்ள பல குடியிருப்பாளர்கள் எங்கள் விசாரணைக்கு உதவும் முக்கிய தகவல்களை வைத்திருக்கலாம். சிறிய விவரம் கூட முக்கியமானதாக இருக்கும்” என்று அவர் கூறினார்.