மத்திய தரைக்கடல் பகுதியில் பாதுகாப்புச் சூழல் மோசமடைந்து வரும் நிலையில், சைப்பிரஸில் உள்ள தனது இராணுவ தளத்தைப் பாதுகாக்க ‘HMS டிராகன்’ (HMS Dragon) என்ற நவீன போர்க்கப்பலை, இங்கிலாந்து அரசு அங்கு நிலைநிறுத்த உள்ளது.
HMS டிராகன் என்பது ஒரு ‘டைப் 45’ ரக அழிப்புக் கப்பல் (Type 45 Destroyer) ஆகும். இது உலகின் மிகச் சிறந்த வான் பாதுகாப்பு போர்க்கப்பல்களில் ஒன்றாகும்.
இந்தக் கப்பல் 10 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் 8 ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்டது. இதில் 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
கப்பலுடன் இரண்டு வைல்ட்கேட் (Wildcat) ஹெலிகாப்டர்களும் அனுப்பப்படுகின்றன. இவை ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தும் ‘மார்ட்லெட்’ (Martlet) ஏவுகணைகளைக் கொண்டுள்ளன.
சைப்பிரஸில் உள்ள இங்கிலாந்து விமான தளமான RAF அக்ரோதிரி (RAF Akrotiri) மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து இந்தப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஈரான் மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளின் ஆபத்தான மற்றும் கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு எதிராக இங்கிலாந்து தனது நட்பு நாடுகளுடன் உறுதியாக நிற்கும் என்று பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். “இங்கிலாந்து மற்றும் அதன் நட்பு நாடுகளின் நலன்களுக்காக நாங்கள் எப்போதும் செயல்படுவோம்” என்றும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.
இங்கிலாந்தைத் தொடர்ந்து, பிரான்ஸ் தனது விமானம் தாங்கிக் கப்பலான ‘சார்லஸ் டி கோல்’-ஐயும், வான் பாதுகாப்பு ஏவுகணைகள் கொண்ட மற்றொரு கப்பலையும் அனுப்ப முடிவு செய்துள்ளது.
அதேபோல், கிரீஸ் நாடு நான்கு F-16 போர் விமானங்கள் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளைக் கொண்ட இரண்டு போர்க்கப்பல்களை சைப்பிரஸின் பாதுகாப்பிற்காக வழங்க முன்வந்துள்ளது.
இந்தச் சூழலில், ஈராக், ஜோர்டான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் கடந்த 24 மணி நேரத்தில் பல ட்ரோன்களை இங்கிலாந்து படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.