செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு ‘யுகங்கள் தாண்டும் சிறகுகள்’ கவிதை நூல் பற்றிய பார்வை | கேசுதன்

‘யுகங்கள் தாண்டும் சிறகுகள்’ கவிதை நூல் பற்றிய பார்வை | கேசுதன்

2 minutes read

தனிமனித ஒழுக்கம், விழிப்பு ஆகியனவே சமூக மாற்றத்திற்கான மூல காரணங்கள். யுகம் யுகமாக அழுந்தி தவிக்கும் குரலாக வெளிப்படுகிறார் ஆசிரியர். தன் கவிகளின் மூலம் சமூக மாற்றத்தினை காண விரும்புகிறார். ஒரு மனித மனம் தன்னை எப்போது முழுமையாக மாற்றிக்கொள்கின்றதோ அன்றிலிருந்தே ஒரு தூய சமூகத்தில் காலடி எடுத்து வைக்கின்றது

வாழ்வில் கற்பனை வியப்பு வேதனை கனவுகள் கோரங்கள் அனுசரிப்பு தவிர்ப்பு எதிர்ப்பு என்பவற்றை கடந்து வாழாத ஒரு மனிதன் உலகில் எவரும் இல்லை. ஒவ்வொரு தனி மனித உந்தல்களையும் சிறுகச்சிறுக மெருகூட்டி கவித்தொகுப்பாய் எமக்கு தந்துள்ளார். ஆழ்மனதில் படிந்து கிடக்கும் அழுக்குகளை துடைத்தெறிந்து ஒரு புது மனிதனாய் வாழ யுகங்கள் தாண்டும் சிறகுகள் கவிதைத்தொகுப்பு சிறப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.

நவீன கவி அமைப்புடன் வாசிப்போர் மனதில் ஆழமாக பதிந்திடும் ஒரு திரட்சி மிக்க கருத்துக்கள் பொதிந்த தொகுப்பாகவே தந்துள்ளார்.ஆசிரியரின் கவிதைகள் இனிமை, சிறப்பான சிந்தனை , சொற்கவி கோர்ப்பு, தனிமனித நேயத்தை முன்னிலைப்படுத்தல் ,சுட்டிக்காட்டல், காலத்துக்கு தகுந்தாற் போல் சலிப்பூட்டாத சொல் முறைமை என்பன நேர்த்தியாகவே உள்ளது. குரோத மனப்பாங்கு மனங்களை ஒடித்துப்போடும் கவி வரிகள் மெய்சிலிர்க்கச்செய்துவிடும். உதாரணமாக என் மகளுக்கு எனும் கவிதையில் தாயானவள் கூறுவாள்,
உன்னை தடுக்கி வீழ்த்திய
கற்களில் எல்லாம்
நீ உயிர்த்தெழுந்த சூட்சுமத்தை
எழுதி வை..
நீதாண்டிய பெருஞ்சுவர்களில்
உன் சிறகுகளின் வலிமை பற்றிய
குறிப்புக்களைப் பொறித்து வை..

உன் அந்திமத்திலும்
எழுதுகோலில் உன்னை நிரப்பி
வெற்றியின் படிகளை
ஒவ்வொன்றாய் எழுதிக்கொள்
உன்னோடு மடிந்துபோகாது
தொடரட்டும்..

மிக அற்புதமான வரிகளை படைத்துள்ளார். அனைத்து வரிகளிலும் மனங்களை செதுக்கிவிடுகிறார். கவிதைகளுக்கு அணிகள் அழகு சேர்க்கும். அணிகள் ஒவ்வொன்றும் ஆழமான கருத்துக்களுக்கு அழகுசேர்த்துள்ளன.அன்பென்பது யாதெனில் எனும் கவியில்
அன்பென்பது யாதெனில்
நீங்களும் நானும்
கடக்கவிருக்கும் சாலையை
கைபிடித்துக் கடக்க அழைக்கும்
பச்சை விளக்கு..

வாழ்தலென்பது யாதெனில்
கொடுப்பதும் பெறுவதுமான
ஒரு சமநிலை தத்துவம்தான்
சமன்செய்து கொள்ளுங்கள்.

அன்பு ஒன்றே தேடலாக அமைகிறது கவி. வாழ்க்கைத் தத்துவங்கள் தாயின் தினசரிகள் என்று பல சூட்சுமம் பொதிந்த கருத்துகள் தன்னகத்தே அடக்கியுள்ளது யுகங்கள் தாண்டும் சிறகுகள்.

ஆசிரியரின் கவிதைகள் அனைத்தும் ஆற்றுநீர் போல வாசிப்பவர் மனக்கழிவினை அகற்றி முடிவில் தூய நீராக்கி சங்கமித்துவிடும்.
நாங்கள் சில கவிதைகளை வாசிக்கும் போது சிறப்பான வரிகளை அடிக்கோடிடுவது வழமை. ஆனால் இவரின் கவிதையில் அடிக்கோடிடுவது என்பது கடினம்.ஏனென்றால் வரிகள் அனைத்துமே தத்துவம் பொதிந்து மிக நேர்த்தியாக இருக்கும்.நாம் கோடிட்டு காட்டிட முடியாது.

கவிஞரின்அழகான சொல்லாடல் ஒரு சிறு புரள்வும் அல்லாது திறனில் வசப்பட்ட கவிகளை இறுதிவரை கலக்கம் இல்லாமல் செல்கிறது. இந்நூலை இரண்டு தடவைகள் மேல் வாசித்துவிட்டேன். பக்கங்களை புரட்டி விட முடியாமல் கவிதைகள் என்னை ஆரத்தழுவிக்கொள்கின்றன. இவ்வாறான படைப்புக்கள் எங்கள் சமூகத்திற்கு மேலும் ஆசிரியர் உருவாக்கிடவேண்டும் என்பது எமது ஆசை.

கவிஞனாய் இருப்பது வரம்.அவரின் வாசகனாய் இருப்பது கவிஞருக்கு கிடைத்த மிகப்பெரும் வரம்.ஏறத்தாழ 70 கவிதைகள் மிகவும் வீரியம் மிக்க வரிகளை தொகுப்பித்த ஆசிரியருக்கு நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். இப் படைப்பை வெளிக்கொணர்ந்த அனைவருக்கும் நன்றியும். வாசிப்பிற்கு வயதெல்லை இல்லை. இப்படைப்பை அனைவரும் வாசிக்க வேண்டும் என்பதே எனது அவா.

கேசுதன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.