செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home ஆசிரியர் தெரிவு தமிழக சட்டப்பேரவையின் புதிய கூட்டத் தொடர்: எதிர்க்கட்சி வரிசையில் அருகருகே அமர்ந்த திமுக – அதிமுக!

தமிழக சட்டப்பேரவையின் புதிய கூட்டத் தொடர்: எதிர்க்கட்சி வரிசையில் அருகருகே அமர்ந்த திமுக – அதிமுக!

1 minutes read

தமிழக சட்டப்பேரவையின் புதிய கூட்டத் தொடரில் அனைவரது கவனத்தையும் அதிகமாக ஈர்த்த காட்சி என்றால், எதிர்க்கட்சி வரிசையில் திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் அருகருகே அமர்ந்திருந்த தருணம்தான்.

கடந்த ஐந்து தசாப்தங்களாக தமிழக அரசியலை ஆளுகை செய்த இந்த இரு முக்கிய திராவிடக் கட்சிகளும், ஒரே நேரத்தில் எதிர்க்கட்சிப் பக்கத்தில் அமர்ந்திருப்பது தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

1967ஆம் ஆண்டு முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றிய திமுக, தமிழக அரசியலில் திராவிட இயக்க ஆட்சிக்கான புதிய அத்தியாயத்தை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 1977ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்று, தமிழக அரசியலில் இரு கட்சிகளும் மாறி மாறி ஆளுங்கட்சியாகவும் பிரதான எதிர்க்கட்சியாகவும் செயல்பட்டு வந்தன. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் பெரும்பாலும் இந்த இரு கட்சிகளை மையமாகக் கொண்டே இயங்கி வந்தது.

ஆனால், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் தமிழக அரசியலில் எதிர்பாராத மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உருவான புதிய அரசியல் சூழலில், திமுகவும் அதிமுகவும் ஆட்சியை இழந்து, இரண்டும் ஒரே நேரத்தில் எதிர்க்கட்சிப் பகுதியில் அமர வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால், சட்டப்பேரவையின் அரசியல் அமைப்பே முற்றிலும் மாறியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், அதிமுக தொடர்ந்து இரண்டாவது முறையாக எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதும் கட்சியின் வரலாற்றில் முதல்முறையாகும். இதற்கு முன்பு, அதிமுக தோல்வியடைந்த தேர்தல்களுக்கு பிறகும் விரைவாக மீண்டும் ஆட்சிக்கு திரும்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த முறை தொடர்ச்சியாக எதிர்க்கட்சியில் அமர வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது, தமிழக அரசியலில் வாக்காளர்களின் மனநிலையிலும் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் காட்டுவதாக பார்க்கப்படுகிறது.

அதேபோல், ஆளுங்கட்சி தரப்பில் பல புதிய முகங்கள் இடம்பெற்றிருப்பதும், நீண்டகாலம் தமிழக அரசியலை ஆதிக்கம் செலுத்திய இரண்டு பாரம்பரியக் கட்சிகளும் எதிர்க்கட்சி இருக்கைகளில் அமர்ந்திருப்பதும், மாநில அரசியலில் ஒரு புதிய காலகட்டம் தொடங்கியிருப்பதற்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.