கடந்த திங்கட்கிழமை இரவு வடக்கு பெல்ஃபாஸ்டில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில், 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கண், கழுத்து மற்றும் முதுகுப் பகுதிகளில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக, 2023இல் இங்கிலாந்துக்கு வந்து அகதி அந்தஸ்து பெற்ற 30 வயதுடைய சூடான் நாட்டைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் மற்றும் பொது இடத்தில் ஆயுதம் வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
தொடர்புடைய செய்தி : கத்திக்குத்துத் தாக்குதல்: உயிருக்கு ஆபத்தான நிலையில் 40 வயது நபர்; சந்தேகநபர் கைது
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பெல்ஃபாஸ்ட் மற்றும் வடக்கு அயர்லாந்தின் பல்வேறு பகுதிகளில் கடும் வன்முறை வெடித்தது. வன்முறை கும்பலால் வீடுகள், கார்கள் மற்றும் ஒரு பஸ் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் நகரின் பொதுப் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.
செவ்வாய்க்கிழமை இரவு மட்டும் தீயணைப்புத் துறையினர் சுமார் 256 அழைப்புகளைக் கையாண்டு, 62 தீ விபத்துச் சம்பவங்களுக்குச் சென்றுள்ளனர்.
வன்முறையின் போது சில குடும்பங்கள் தங்கள் வீடுகளில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக, கறுப்பின மக்கள் குறிவைக்கப்படுவதாகவும், அவர்களின் வீடுகள் தாக்கப்பட்டு, ஜன்னல்கள் உடைக்கப்படுவதாகவும் மதபோதகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பாலி்க்ளேர் (Ballyclare) பகுதியில் ஒரு துருக்கிய சிகையலங்கார நிலையமும் சேதப்படுத்தப்பட்டது.
வடக்கு அயர்லாந்தின் முதலாமைச்சர் மிச்செல் ஓ நீல் இந்த வன்முறையை “முற்றிலும் ரௌடித்தனம்” என்றும் “கோழைத்தனமான செயல்” என்றும் எச்சரித்துள்ளார்.
வடக்கு அயர்லாந்து செயலாளர் ஹிலாரி பென், இத்தகைய அழிவு மற்றும் வன்முறைக்கு எந்த நியாயமும் இல்லை என்று கூறியுள்ளார். நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வடக்கு அயர்லாந்து பொலிஸ் (PSNI) பொதுமக்களிடம் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.


