இங்கிலாந்தின் புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) இன்று பொறுப்பேற்கிறார், அவர் கீர் ஸ்டார்மருக்குப் பதிலாகப் பதவி ஏற்கிறார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் இங்கிலாந்தின் ஐந்தாவது பிரதமராகவும், மன்னர் மூன்றாம் சார்லஸின் ஆட்சியின் கீழ் நான்காவது பிரதமராகவும் பர்ன்ஹாம் இருப்பார். அத்துடன், 10 ஆண்டுகளில் இங்கிலாந்தில் பதவியேற்கும் ஏழாவது பிரதமர் ஆவார்.
கீர் ஸ்டார்மர் இன்று (20) காலை பிரதமராகத் தனது இறுதி உரையை ஆற்றிய பிறகு, பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் சார்லஸைச் சந்தித்துத் தனது ராஜினாமாவை முறைப்படி சமர்ப்பிப்பார்.
அதனைத் தொடர்ந்து, ஆண்டி பர்ன்ஹாம் மன்னரைச் சந்திப்பார். அப்போது புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு, மன்னரால் அவர் கேட்டுக்கொள்ளப்படுவார்.
பதவியேற்றவுடன், பர்ன்ஹாம் டவுனிங் வீதியில் தனது முதல் உரையை நிகழ்த்துவார். அந்த உரையில் இங்கிலாந்து மக்களுக்கு “சுவாசிக்க அதிக இடமளிப்பேன்” (more breathing room) என்று அவர் உறுதியளிக்க உள்ளார்.
ஆண்டி பர்ன்ஹாமின் முக்கிய கொள்கைகள்
மக்களின் நிதிச் சுமையைக் குறைக்க வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்துவது குறித்து அவர் பரிசீலித்து வருகிறார்.
பப்கள் மற்றும் இசை அரங்குகளுக்கான வணிக வரி விகிதத்தை 20% குறைக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
நாட்டின் வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவிலான கவுன்சில் வீடுகளைக் கட்டும் திட்டத்தை அவர் முன்னெடுக்க உள்ளார்.
ஊழியர்கள் அனைவரும் மின்னிலக்க அடையாள அட்டை வைத்திருக்கவேண்டும் என்ற திட்டத்தை இரத்துச் செய்வது, பர்ன்ஹாமின் முதன்மையான நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்கும் என்று அவருடைய அலுவலகம் தெரிவித்தது.
சட்டவிரோதக் குடியேற்றத்தைச் சமாளிப்பதற்காக அந்தத் திட்டம் முன்மொழியப்பட்டது. ஆனால், அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அது தோல்வியடைந்த திட்டம் என்று கருதுகிறது.
நார்த் சீ (North Sea) பகுதியில் எண்ணெய், எரிவாயு ஆகியவற்றைத் தோண்டியெடுக்கும் திட்டத்தையும் பர்ன்ஹாம் ஆதரிக்கிறார். அந்தத் திட்டத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டோன்ல்ட் டிரம்ப்பும் ஆதரவு தெரிவித்தார்.
இதேவேளை, புதிய பிரதமர் பொறுப்பேற்பதற்கு முன்னதாகவே, சிறைத்துறை அமைச்சரான லார்ட் டிம்ப்சன் இன்று காலை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.