Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் ஆறாவது ஒழுங்கை கடைசி வீடு | சிறுகதை | சாள்ஸ் குணநாயகம்

ஆறாவது ஒழுங்கை கடைசி வீடு | சிறுகதை | சாள்ஸ் குணநாயகம்

5 minutes read

சாள்ஸ் குணநாயகம் அவர்கள் கலை இலக்கிய பரப்பில் நன்கு அறியப்பட்ட பன்முக ஆளுமைகொண்டவர். கதைகள் கவிதைகள் என மட்டுப்படுத்தாது நாடக துறையிலும் இன்றுவரை கணிசமாக ஈடுபட்டுவருகின்றார். சமூக செயற்பாடுகளில் தாயகத்தில் பரந்தனிலும் தற்போது நெதர்லாந்திலும் முன்னின்று இயங்கிவருகின்றார்.

மழை பெய்து ஓய்ந்து விட்டது. வேலியில் பூத்து கிடந்த கிளுவை மரங்களில் மழை நீர் தொங்கி வளைந்து கிடந்தன.

ஆறாவது ஒழுங்கை சந்தி மூலையில் இருந்த வைரவர் கோவில் சூலத்தில் செவ்வரத்தம் பூக்கள் குத்தப்பட்டிருந்தன. கூரையும் புதிதாய் வைகோலால் வேயப்பட்டிருந்தது. தெருவெங்கும் குழிகளை நிரப்பி செந்நிற மழைநீர் நிறைந்து வழிந்தது. நான் நிலம் பார்த்து மெல்ல மெல்ல நடக்கிறேன்.

இந்த மண்ணை மிதித்த கடந்த நாற்பது வருட வாழ்க்கையில் முடிந்த இந்த ஐந்து வருடங்கள் இந்த மண்ணை மிதிக்காதே என்று தடுத்துவிட்ட தொல்லைகள்… ஏராளம்.

இந்த மண்ணை விட்டுப்பிரியேன் என்றிருந்த என்னைக்கூட துரத்தி அலைய வைத்து விட்டது யுத்தம்.

காஞ்சூரைக் காடாய் கண்டி வீதியை அண்டிக் கிடந்த இந்த கிராமத்தை உருவாக்க தெரியப்பட்ட முதல் இருபது பேரில் நானும் ஒருவன். இளந்தாரியாய் வெளிக்கிட்டு கிழடு தட்டும்வரை இந்த மண்ணோடு ஒட்டி வளர்ந்த என்னைப் பிடுங்கி எறிந்த பேய்களை நான் என்னென்பேன்.

தோல் சுருங்கி, கண் மங்கி, மயிர் முழுவதும் நரையாகி நடை தளர்ந்து தள்ளாடும் இந்த நேரத்திலா இது எனக்கு வரவேண்டும். நானும் என் பிள்ளைகளும் பண்படுத்தி உழுது, விதைத்த வயற்காட்டையும், வீட்டையும் அயலட்டையையும் மீண்டும் தரிசிக்கும் அவசரம் எனக்கு. கொஞ்சம் வேகமாகவே நடக்க முயற்சிக்கிறேன்.

எங்கள் ஒழுங்கையில் எப்போதும் அறுக்கையாய் அடைக்கப்பட்டு கிடக்கும் மாட்டுகார அம்பலம் வீட்டுவேலி ஓவென்று கட்டைகளில் தொங்கும் கம்பிகளுடன் கிடக்கிறது. மாடுகளும் இல்லை, கன்றுகளும் இல்லை.

நெடுந்தீவு அந்தோனி வீட்டில் யாரும் இல்லை. அவன் ஐந்தாம் வாய்க்காலுக்கு குடிபோய் இருப்பானோ. சின்னப்பிரகாசம் மகனுடன் சேர்ந்து இந்தியா போனவன் வீடு கவனிப்பார் அற்றுத்தான் கிடக்கும். என் கண்ணுக்கு எதுவும் தெரிவதாய் இல்லை. இந்த ஒழுங்கையும் தெருவும் எவ்வளவாய் உருக்குலைந்து கிடக்கிறது.

ஆறாவது ஒழுங்கை கடைசி வீடு. அது என் வீடு. வயலும் தோட்டமுமாய் சிறுகச் சிறுக மண்ணையும் கல்லையும் என் உழைப்பையும் சேர்த்து சேர்த்து கட்டிய வீடு. என் வீடு கம்பீரமாய் நிமிர்ந்து தான் நிற்கிறது.

விறாந்தை வளையில் ஏணைகட்டி என் பேரக் குழந்தைகள் ஆடிய வீடு.

இருண்ட மழை முகில்கள் விலகி சூரியன் உச்சியில் சுட்டுக் கொண்டு நின்றான். படலையடி கொஞ்சம் மாற்றப்பட்டுள்ளது. நிழலும் பழமுமாய் வளர்ந்து நின்ற நாவல் மரம் தறிக்கப்பட்டு வெறும் கட்டைகளாய் விழுந்து கிடந்தன. படலையை திறந்து வளவிற்குள் போனேன். வளவு முழுவதும் மாறித்தான் போச்சு.

வீட்டுக்கு முன்னால் கொடி எலுமிச்சை தடிகளில் கட்டி படர்ந்து கிடந்தது. கிணற்றடியில் வாழைகள் பொத்தி வந்து செழித்துக் கிடந்தன. மாமரங்கள் உயர்ந்து வளர்ந்து பூத்து மணக்கின்றன. தென்னைகள் வட்டு வெடித்து குலை தள்ளி அதன் ஓலைகள் நிலம் தொட்டு நிற்கின்றன.

அடிவளவில் ஒரு கக்கூசு கட்டப்பட்டிருக்கிறது.

பின்பக்க கழிவாற்றங்கரையில் வளர்ந்து கிடந்த மந்துக்காடு இப்போது இல்லை. வாய்க்காலை நிறைத்து செம்மண் கலங்கிய நீர் சுழித்து சுழித்து ஓடிக் கொண்டிருந்தது.

என் கிராமத்து காற்றை சுவாசிக்க தொடங்கி விட்டேன். ஏதோ இழந்து போன ஒன்றை திரும்பப் பெற்றதாய் எனக்கொரு திருப்தி.

என் இயலாமை மெல்ல மெல்ல விலகி, இளமையுறுவதாய் நான் உணர்கிறேன். என் மனைவி பூமணியை கல்யாணம் கட்டி வீட்டுக்கு கூட்டி வந்த வேளை இருந்த பூரிப்பு இன்று எனக்கு.

ஈரமண் என் நாசி வரை வந்து மணக்கிறது.

எனது வீடு, எனது நிலம், எனது தேசம்.

என் பாட்டில் வளவை சுற்றி நடந்தேன். சற்றுத் தூரத்தே பாலை மரக் கிளையில் மயில் ஒன்று கேவிக் கொண்டு நின்றது.

அந்த நாள் எனக்கு திரும்பத் திரும்ப ஞாபகத்துக்கு வந்து போகிறது. அன்றைக்குத் தான் தர்முவின் மகளுக்கு திருமணம். சந்தியில் இராணுவத்துக்கும் இயக்கத்துக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் தப்பி வந்தவர்களைத் தேடிக்கொண்டு இராணுவம் ஆறாம் ஒழுங்கைக்குள் புகுந்தது.

ஒழுங்கையின் முதலில் இருந்த வீடுகள் எரிக்கப்பட்டு, இளையவர்கள் பலரையும் பிடித்துக் வைத்துக் கொண்டது ராணுவம். வெறியாட்டமும் அடாவடித்தனமும் கொண்ட அதன் சப்பாத்து கால்களுக்குள் மிதிபட்டு நசிந்தது ஒழுங்கை. கிராமத்து எல்லா ஒழுங்கைகளிருந்தும் மக்கள் பின் பக்க ஆற்றைக் கடந்து, கினியா பற்றைகள் நிறைந்த அடர்ந்த மந்துகாடுகளைக் கடந்து, வயல் நிலங்களினூடாக ஓடத் தொடங்கி விட்டார்கள்.

இராணுவத்துக்கு துணையாக ஆனையிறவு முகாமல் இருந்து செல் தாக்குதல் நடத்தப்பட்டுக் கொண்டு இருந்தது. என் பிள்ளைகளையும் பேரர்களையும் மக்களோடு மக்களாய் ஓட விட்டு, நான் பின்னே நடந்தேன்.

நாம், நம் நிலத்தை விட்டு எங்கே ஓடுவது?

ஆற்றைக் கடந்து வயல் வரப்புகளில் நடந்த என் தலையில் செல் சிதலம் ஒன்று வெட்டிப் பறந்தது. நான் வயல் வரப்பில் சரிந்து விழுந்தேன்.

எனக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டதாகவும், நினைவுகள் திரும்ப மனநல காப்பகம் ஒன்றில் கடந்த ஐந்து வருடங்களாகப் பராமரிக்கப்பட்டதாகவும் அவர்களே எனக்கு சொன்னார்கள்.

வளவை சுற்றி நடந்து வீட்டு வாசலுக்கு வந்தேன்.

‘புள்ள கோமளம், கோமளம்’ கூப்பிட்டுப் பார்த்தேன். வீட்டில் எந்த ஆளரவமும் இல்லை.

வீடு பூட்டிக்கிடந்தது. விறாந்தையில் ஒரு சாக்குகட்டில் மடித்து வைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்து வந்து மாமர நிழலில் போட்டு படுத்தேன்.

இன்று இது எனக்கொரு நிம்மதியான நித்திரை.

‘அப்பு, அப்பு ஆரப்பு நீ’.

என்னை தட்டி எழுப்பிய அந்தப் பிள்ளையை கண்களை இடுக்கி கையை புருவத்துக்கு துணையாக்கி கூர்ந்து பார்த்தேன். எனக்கு அடையாளம் தெரியவில்லை.

‘ஆரப்பு நீ? ஏனணை இதில் வந்து படுத்திருக்கிறாய்?’ மீண்டும் அந்தக் கேள்வி என் மீது பெரும் பாறையாய் விழுந்தது.

இது நான் கொத்திப்பிரட்டி பண்படுத்திய மண்… என்வளவு… நான் கட்டிய வீடு… என்னால் இவற்றைச் சொல்ல முடியவில்லை. இந்த ஐந்து வருடங்கள் என்னை கொன்று தின்று விட்டன.

‘புள்ளை கோமளம் எங்கயணை?’ என்றேன்.

‘அப்பு இப்ப நாலுவருஷமா இந்த வீட்டில் நாங்கள் தான் இருக்கிறம். கோமளம் ஆரெண்டு எனக்கு தெரியாது. ஆனா, இது கோமளத்தின்ர வீடு எண்டு அயலாக்கள் சொல்லியிருக்கினம். ஆட்கள் விட்டிட்டு போன ஓடின வீடுகளிலும், வெளிநாட்டுக்கு போன ஆக்களின்ர வீடுகளிலும் பலரைக் குடியிருத்தியிருக்கினம். நாங்கள் வடமராச்சியில் இருந்து பாதிக்கப்பட்டு வந்தனாங்கள்.’

‘கோமளம் என்ர மூத்த மகள்’ என்று சொல்ல வாய் எடுத்தேன், முடியவில்லை.

எங்கள் குருவிக்கூடு பிய்த்து எறியப்பட்டு விட்டது.

‘நீ கோமளத்துக்கு சொந்தமா அப்பு?’ மீண்டும் விசாரித்தாள்.

‘புள்ளை இந்தக் கிணத்தில் ஒரு வாளி தண்ணி அள்ளித்தாறியா’ என்றேன். 

என்னைப் பிடித்து மெதுவாகக் கூட்டிப்போய், வாளியில் தண்ணீர் அள்ளி ஊற்றினாள். நான், என் இரண்டு கைகளையும் ஏந்தி கை மண்டையில் என் தாகம் தீரக் குடித்தேன்.

‘புள்ளை நான் போறனணை.’

அவள் என்னை மிக அனுதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாள். படலையை தாண்டி தறிக்கப்பட்டுக் கட்டையாய் கிடந்த நாவல் குற்றிகளில் கொஞ்ச நேரம் இருந்தேன். பின்னர் எழுந்து என் கால் போன போக்கில் நடந்தேன்.

– சாள்ஸ் குணநாயகம்

நன்றி – தாய்வீடு – கனடா ஓகஸ்ட் 2020

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More