தீச்சுடர் விட்டெரிய வான்வெளி முகர்ந்த
வெண்தாமரை கண்டாய்
தேகம் நிரம்பிய மகரந்த மணிகளை
கொண்டாய்
விழிநூல் புனைந்து மனவெளி நிரப்பி
ஆசானுமாய்
நிழல் பூத்த கொடிதனில் பல்
மொட்டுக்களை விருந்தளித்தாய்
ஆயிரமாயிரம் துளிகளை விதைத்து
விலையில்லா வனப்பு ஈந்தாய்
என்னுயிர் தளிரே
அன்னங்களாய் பலர்கூடி
ஒடுங்கிய பலர் நெஞ்சம் மறைத்து
இருள்மூடிய கதவுடைத்து
அறிவொளி இறைத்த
ஆசானும் ஆனாய்
காலன் செய்த வேலை
என்னவோ உன்
புகழ் மயக்க முனைந்தானோ
கள்வன் உன் இனமழிக்க
புறப்பட்டது அறிந்ததுவோ
வன்கும்பல் காமினி கரம்
முறித்தெறிய பயந்தாயா
பசுஞ்சோலை இதழ் விரித்து-உன்
மகரந்த மணிகளை பிய்த்தவன்
தலை கொய்யாமல் விட்டது
காரணம் என்னவோ
அங்கே அடுக்கிய இதழ்களை
கொய்தவன் வீணாய் போக
விரைந்திடுவாயா
மகரந்த மணிகளோடு – உன்
மென்னிதழ் கருகிட
தீயிட்டவன் வர்க்கம்
அழிந்திட பழிப்புரையிட்டு
தாகம் தீர்ப்பாயாக.
கேசுதன்