(A city without walls) சுவர்கள் இல்லாத நகரம் என்ற ஆங்கில மொழிமூல கவிதை நூல் ஒன்று அண்மையில் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் வெளிடப்பட்டுள்ளது. மேற்படி கவிதை நூல் தான் இப்போதைய ஈழத்து இலக்கிய உலகில் பேசு பொருளாக மாறியுள்ளது.
பதினேழு வயதான அகிலினி நந்தகுமார் என்ற பாடசாலை மாணவி இந்த நூலின் மூலம் ஈழத்து சிந்தனைகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் முதற்படியில் கால் வைத்துள்ளார். பதினேழு வயது பாடசாலை மாணவியின் மேற்படி நூல் தற்போது எல்லா நூலகங்களிலும் வாசகர்கள் பெற்றுக் கொள்ள வழிசெய்யப் பட்டுள்ளது.
பெற்றோர்களான நந்தகுமார், றஞ்சுதமலர் ஆகியோர் மேற்படி A city without walls நுலை வெளியிட்டுள்ளனர். மேற்படி நூலில் ஆய்வினை மேற்கொண்டிருக்கிறார்கள் இலக்கிய விமர்சகர் திரு கே எஸ் சிவகுமாரன். மற்றும் சமூக செயற்பாட்டாளரும் இலங்கை வங்கி ஊர்காவற்றுறை முகாமையாளருமாகிய திரு ரெனோல்ட் எட்வேட் ஆகியோர் . வெளியீட்டு உரையினை எழுத்தாளரும் கவிஞருமான வெற்றிச் செல்வி அவர்கள் நிகழ்த்தினார்.
இதுவரை காலமும் ஈழத்து இலக்கியங்கள் உள்ளூர் வாசகர்களுக்கு அவர்களுக்கு பரிச்சையமான விடயங்களை கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் மூலம் மீள நினைவு படுத்துவதாக அல்லது அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதாகவே இருக்கிறது. அதைத் தாண்டி உலக மக்களின் பார்வைக்கு கொண்டு செல்வது என்பது அரிதாகவே உள்ளது. காரணம் தமிழ் மொழி கடந்து ஏனைய மொழி வாசகர்களுக்கு நம் ஆக்கங்கள் போய்ச் சேர இந்த மொழி ஒரு தடையாக இருந்து வருகிறது.
அதனை மிக எளிமையாகவும், லாவகமாகவும் உடைத்து வெளி வந்திருக்கிறார் சகோதரி அகிலினி. அவரது இந்த வெளியீட்டை நான் மிகவும் பிரம்மிப்பாக பார்க்கிறேன். ஒரு நூல் வெளியிடுவதென்பது அத்தனை இலகுவானதொன்று அல்ல.
தன் ஆக்கத்தை நூலாக தொகுக்க முதல் இதனை தொகுக்கலாமா? இது அதற்கு தகுதியானதா? இது சமூகத்தில் வரவேற்கப்படுமா? என்னாகும்? என சிந்தித்தே பலர் நூல் வெளியிடுவதை பின் தள்ளி போட்டுள்ளனர். அதனையும் தாண்டி நூல் வெளியிட தயாரானால் பொருளாதார பிரச்சினை, நூலை வெளியிடுவதில் பிரச்சினை, நூலை அறிமுகப்படுத்துவது, நூலை விளம்பரப்படுத்துவது, விற்பனையாக்குவது வரை எல்லாமே எவ்வளவு சவாலானவை என்பதை நான் நன்கு அறிவேன்.
ஆனால் தன் பதினேழு வயதான பிள்ளையின் மீது நம்பிக்கை வைத்து, தன் பிள்ளையின் திறமையை அங்கீகரித்து, அந்த நூலுக்கான முதலீட்டை செய்து, வெளியிட்டு, ஒரு எழுத்தாளரை கொண்டாடி, கௌரவித்துக் கொண்டிருக்கும் மாணவி அகிலினியின் பெற்றோர்களுக்கு அறிவார்ந்த உலகமும், ஈழத்து எழுத்தாளர்களும், வாசகர்களும் எங்கள் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் …
அகிலினி அத்தனை பொறுமையும், தன்னடக்கமும் கொண்டுள்ளார். இத்தனை சிறிய வயதில் இந்த சாதனையை செய்ததற்கான எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் எளிமையாக எல்லோரையும் எதிர் கொள்கிறார். உலக வாசகர்களுக்கு ஈழத்து எழுத்துலகில் இருந்து இன்னும் பெறுமதிமிக்க படைப்புகளை அகிலினி மூலம் நாம் உலகுக்கு கொடுப்போம். உலக அரங்கிலும் உள்ளூர் அரங்கிலும் விரைவில் அகிலினி ஒரு பாரிய வீச்சை ஏற்படுத்துவார். எதிர்கால ஈழத்து இலக்கியத்தின் அனுபவமும், ஆளுமையும் கொண்ட எழுத்தாளராக அகிலினி திகழ்வார் என்பதை இன்றே ஆரூடம் சொல்லி வைக்கிறேன்.
வாழ்க அகிலினி!.. வளர்க !..
வாசகர்கள் சார்பில் உங்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்
கேஜி கேஜி நன்றி முகநூல்.