பல நேரத்தில் நம்மிடம் உள்ள பல அருமையான பண்புகள் நம்மால் உணராமலையே தெரியாமல் போய்விடும். அதேபோல் எந்த மருந்தையும் நாடாமல் பல நோய்களைத் தடுக்கும் திறனை நாம் பெற்றுள்ளோம் என்பது நம்முள் பலருக்கு தெரியாமலையே இருக்கின்றது. நம்மால் வெளியிடப்படும் ‘சிரிப்பு’ என்ற வெளிப்பாட்டிற்கு நிகர் இவ்வுலகில் எதுவும் இருக்க முடியாது.
நாம் பல லட்ச மதிப்புள்ள உடைகளையும் அணிகலன்களையும் அணிந்து கொண்டு, சிரிக்க வேண்டிய இடத்தில சிரிக்காமல், முகத்தை ஏழுக்கோனத்திற்கு ‘உம்’ என்று வைத்துக்கொண்டால் பார்க்கவே சகிக்காது. நம்மை சூழ்ந்துள்ள சில நபர்களின் எதிர்மறையான எண்ணங்களையும் ஆற்றலையும் கூட நேர்மறையானதாக மாற்றியமைக்ககூடும் சக்தியைக் கொண்ட ஒரே முக வெளிப்பாடு ‘சிரிப்பு’ மட்டுமே ஆகும். இவை நம்மையும் நம்மை சுற்றி உள்ளவர்களையும் மகிழ்விப்பது மட்டும் அல்லாமல் நம் உடல் நலத்தையும் பேணி பாதுகாக்கிறது.
பல ஆராய்ச்சிகளில் இவை உறுதி செய்யப்பட்டு, ‘சிரிப்பு சிகிச்சை’ என்று கூட தொடங்கப்பட்டுவிட்ட நிலையை பெற்றுள்ளது. பல ஹார்மோன் செயல்பாட்டிற்கு உகந்த சிகிச்சை அளிக்கும் திறனைப் பெற்றுள்ளது. முக வசீகரத்தை மெருகேற்றி சுமாராக இருப்பவர்களைக் கூட மிகவும் அழகுடையவர்களாக காட்சி அளிக்கிறது. தற்போது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை, பல கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டோர்களையே மிஞ்சும் அளவிற்கு உள்ளது. இதற்கு காரணம், போதிய அளவிற்கான சந்தோஷ சூழ்நிலை குறைபாடே ஆகும்.
மகிழ்ச்சி நம்மை தேடி வரும் என்று நின்று கொண்டு இருக்காமல், அத்தகைய சூழலை நாம் ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள், செல்லப் பிராணிகள், வயதானவர்கள் போன்றவர்களுடைய செயல்களை மிகவும் உண்ணிப்பாக ஒரு ஐந்து நிமிடம் கவனித்தால், நம்மை அறியாமலையே நம்முள் சிரிப்பும்., பூரிப்பும் வந்து அடையும். குழந்தைகளின் சிரிப்பு சத்தமும் அவர்களுடைய குறு குறு பார்வையும், செல்லப் பிராணிகளின் சேட்டையும், வயதானவர்கள் வெற்றிலையை இடித்துக் கொண்டே பேசும் வம்புக் கதைகளையும் பார்த்தால் வயிறு வலிக்கும் அளவிற்கான சிரிப்பும் சந்தோஷமும் நம்மை தேடி வரும்.
உலகிலையே மிகவும் கடினமாகக் கருதப்படும் செயல் மற்றவர்களை சிரிக்க வைப்பதுதான். ஒரு திரைப்படத்தை எடுத்துக்கொண்டால், நகைச்சுவை பகுதி என்பது மிகவும் முக்கியமானதாக ஒன்றானதாக உள்ளது. மக்களை சிரிக்க வைப்பதற்க்காக, நகைச்சுவை நடிகர்கள் தங்களின் முழு படைப்பாற்றலையும் பயன்படுத்துகின்றனர். சிரிப்புக்கு இவ்வளவு முக்கியத்துவமும் மகத்துவமும் இருக்கின்றபடியால்தான் இவை அனைத்தும் மேற்ற்கொள்ளப் படுகின்றன.
“வாய் விட்டு சிரி, நோய் விட்டுப் போகும்” என்ற பழமொழி ஏதோ வாய்ப்போக்கில் சொன்ன ஒரு வாக்கியம் இல்லை. சிரிப்பின் மதிப்பை அறிந்து, உணர்ந்து, புரிந்து கொண்டவர்களால் மட்டுமே இதை கூறி இருக்க முடியும். ஒரு சிறு புன்னகை புரிதல், வாய் விட்டு சிரித்தல் போன்றவை நம் வாழ்கைத் தரத்தை மேம்படுத்தி நோய் நொடி இல்லாத நாட்களை நமக்கு அளித்து மகிழ்விக்கும் என்பதே இதன் பொருளாகும்.
“சிரிப்போம் சிரிப்போம் சிரித்துக்கொண்டே இருப்போம்”.
நன்றி விகாஷ்பீடியா