Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு

3 minutes read


பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்குமாறு கோரி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உட்பட அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர்கள் இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கைக்கு அமைய, கிழக்கு பல்கலைக்கழக போதனை சாரா ஊழியர்கள் நடாத்திய ஆர்ப்பாட்ட நிகழ்வு வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழக பிரதான வளாக முன்றலில் இன்று காலை நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகம் மற்றும் சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவக ஊழியர்கள் அத்துடன் பல்கலைக்கழக நிருவாக உத்தியோகத்தர்களும் இணைந்து கொண்டனர்.

சம்பள முரண்பாடுகளை நீக்குதல், ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய நலன்களைப் பெற்றுக் கொள்ளுதல் தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்து 2019.07.30ஆம் திகதியன்று ஒரு நாள் அடையாள பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டிருந்த போதிலும் உரிய தீர்வுகளை அரசாங்கம் வழங்கத் தவறியதையடுத்து இந்த இருநாள் தொழிற்சங்க நடவடிக்கை இடம்பெறுகின்றது.

இன்றைய நாள், அந்ததந்த பல்கலைக்கழகங்களில் ஆர்பாட்ட நிகழ்வுகள் நடைபெறுவதுடன் நாடெங்கிலும் உள்ள அனைத்துப் பல்கலைகழகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊழியர்கள் கலந்து கொள்ளும் பாரிய ஆர்பாட்டத்தை நாளை உயர்கல்வி அமைச்சின் முன்னால் நடாத்த பல்கலைக்கழக தொழிற் சங்கங்களின் கூட்டுக்குழு தயாராகி வருகின்றது.

இந்த இருநாள் பணி பகிஷ்கரிப்புக்கும் தீர்வுகள் வழங்காது அரசாங்கம் கால தாமதிப்புச் செய்யுமாயின் நாடளாவிய ரீதியில் உள்ள 16000 பல்கலைக்கழக ஊழியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எதிர்காலத்தில் தொடர் பணிப் புறக்கணிப்பு செயற்பாடுகளில் ஈடுபடுவது குறித்தும் பல்கலைக்கழக தொழிற் சங்கங்களின் கூட்டுக்குழு கலந்தாலோசித்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

1. 2020 ஜனவரியில் பல்கலைக்கழக சமூகத்தினரின் அடிப்படை சம்பளத்தை 2015 டிசம்பர் அடிப்படைச் சம்பளத்தின் 107% ஆல் அதிகரிக்க தேவையான சுற்றுநிருபத்தை வெளியிடல்.

2. 45% மாதாந்த இழப்பீட்டுக் கொடுப்பவை 75% வரை உயர்த்துவதற்கு அவசியமான சுற்றுநிருபத்தை வெளியிடுதல்.

3. பல்கலைக்கழக முறைமைக்கு செலுத்தப்படுகின்ற ஓய்வூதியத்தை பயனுள்ளதாக தயாரித்துக் கொள்ளல்.

4. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மொழித் தேர்ச்சி கொடுப்பனவை செலுத்துவதற்கான சுற்றுநிருபத்தை வெளியிடுதல்.

5. அனைத்து பல்கலைக்கழக சமூகத்தினருக்கும் பொதுக் காப்புறுதி முறையொன்றை நடைமுறைப்படுத்தல்.

6. கொடுப்பனவுகள் மற்றும் சகல கடன் எல்லைகளையும் அதிகரித்தல்.

7. கல்விசாரா ஊழியர்களை நேரடியாக பாதித்துள்ள ஆட்சேர்ப்பு மற்றும் பதவியுயர்வு நடைமுறையை சரியானதாக தயாரித்துக் கொள்ளல் மற்றும் ஊழியர் எண்ணிக்கை அறிக்கையை சரியானதாக தயாரித்துக் கொள்ளல்.

8. உதவிச் செயலாளர்/உதவிப் பதிவாளர்/உதவி கணக்காளர்/உதவி நிதியாளர் மற்றும் உதவி உள்ளக கணக்காய்வாளரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடைமுறையை திருத்தியமைத்து வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தை இரத்துச் செய்து முன்னர் காணப்பட்ட வழிமுறைக்கேற்ப மேற்குறிப்பிடப்பட்டுள்ள பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவென சுற்றுநிருபத்தை வெளியிடுதல்.

9. பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் 876ம் இலக்க சுற்றுநிருபத்தை இல்லாதொழித்து நாடு பூராகவும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகளுக்கு போட்டிப் பரீட்சை நடாத்தி பல்கலைக்கழக முறைமையின் மேம்படுத்தலுக்காக ஊழியர்களை ஆட்சேர்ப்புச் செய்ய நடவடிக்கை எடுத்தல்.

10. கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் பிள்ளைகளை பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு சேர்க்கும்போது முன்னுரிமையை பெற்றுக்கொள்ளல்.

11. கல்விசாரா ஊழியர்கள் என்ற பதத்தினை மாற்றுதல்.

ஆகிய கோரிக்கைகளை முன்னிறுத்தியே இந்த பணிபகிஷ்கரிப்பு இன்று நடைபெறுகின்றமை கவனத்திற் கொள்ளத்தக்கது.

செய்தியாளர் – நூருல் ஹுதா உமர், எம்.ஐ.எம்.சர்ஜுன் 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More