Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நாட்டை இரண்டாக பிரிக்கும் வகையில் செயற்படுவது நாமில்லை! விக்னேஸ்வரன்

நாட்டை இரண்டாக பிரிக்கும் வகையில் செயற்படுவது நாமில்லை! விக்னேஸ்வரன்

4 minutes read

இலங்கைத் தீவை இரண்டாக பிரிக்கும் வகையில் உண்மையாகவே செயற்படுவது யார்? என வடமாகாண முள்ளாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

இது தொடர்பாக அவர் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், “முள்ளிவாய்க்கால் நினைவுதினம் மே 18 அன்று எனது பேச்சின்போது பின்வருமாறு கூறியிருந்தேன், “ஐ. நா மனித உரிமைகள் சபையினூடான பொறுப்புக்கூறல் முன்னெடுப்புக்கள் இதுவரையில் தோல்வியை அடைந்துள்ள நிலையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

ஐ. நா மனித உரிமைகள் சபையினை இலங்கை அரசாங்கம் முற்றாக ஏமாற்றி உதாசீனம் செய்துள்ள நிலையில், ஐ. நா பொதுச் சபையில் இருந்து இலங்கையின் உறுப்புரிமையை ரத்து செய்வதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி வைக்கின்றேன்.

இந்த நிலைமை மிக விரைவில் ஏற்படப்போகின்றது என்று நினைத்தாரோ என்னவோ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இம்மாதம் 19ம் திகதி நடைபெற்ற யுத்த வெற்றிவிழா கொண்டாட்டத்தில் பத்திரிகையில் பின்வருமாறு கூறியுள்ளார்.

“எமது நாட்டுக்கு அநீதியான வகையில் ஏதேனும் ஒரு சர்வதேச நிறுவனம் அல்லது சர்வதேச அமைப்பு தொடர்ந்தும் செயற்படுமாக இருந்தால் அந்த நிறுவனத்தின் அல்லது அமைப்பின் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்கிக் கொள்ள நான் ஒரு போதும் பின்நிற்கப் போவதில்லை.”

எனவே இலங்கை குற்றம் புரிந்து கொண்டிருப்பதை உலகம் அறிந்துள்ளது என்று கண்டே வீராப்பாகக் கதைக்கத் தொடங்கியுள்ளார் ஜனாதிபதி என்று புலப்படுகிறது. வரப் போவதைத் தடுக்க அவருக்கு வேறு வழி தெரியவில்லை போலும். அவர் ஆற்றிய உரை போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்ற எத்தகைய துன்பத்துக்குள்ளும் இலங்கையை கொண்டு போக அவர் துணிந்துவிட்டார் என்பதை எடுத்துக் காட்டுகின்றது. முள்ளிவாய்க்கால் இறுதிக் கட்டத்தில் அப்பாவித் தமிழ் மக்கள் சம்பந்தமாக இடப்பட்ட கட்டளை பீல்ட் மார்ஷல் பொன்சேகாவினால் இடப்பட்டிருந்தால் இவ்வாறான வீராப்பு வெளிவந்திருக்குமோ தெரியாது.

யுத்த வெற்றிவிழா கொண்டாட்டத்தில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஆற்றியுள்ள உரை வரலாற்றின் அடிப்படையில் புரையோடிப்போயிருக்கும் இந்த நாட்டின் இன முரண்பாட்டை கிஞ்சித்தும் கவனத்தில் எடுக்காமல் அலட்சியம் செய்து, வெற்றிக் கோஷம் எழுப்பி, படையினருக்கு எதிராக செயற்பட்டால் சர்வதேச நிறுவனங்களில் இருந்து வெளியேற போவதாகவும் எச்சரிக்கை செய்துள்ளமை எத்தகைய ஒரு துன்பத்துக்குள் இலங்கை எதிர்காலத்தில் சிக்கி தவிக்கப்போகின்றது என்பதையே காட்டுகின்றது.

ஆனால் போர் குற்றவாளிகளே இன்றைய இலங்கையின் ஆட்சியாளர்கள். அவர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக இனவாதத்தையும் போலி தேசியவாதத்தையும் மூலோபாயமாக பயன்படுத்தி வருவதன் ஒரு எதிரொலி தான் இது. இந்த சிந்தனையுடன் செயற்படும் அவர்களினால், ஒருபோதும் நாட்டைப்பற்றி சிந்தித்து, வளமான ஒரு நாட்டை தூர நோக்க சிந்தனையுடன் ஏற்படுத்தி கொடுக்க முடியாது. அத்தகையவர்களிடம் இருந்து இவ்வாறான கருத்துக்கள் வெளிவருவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமேயில்லை.

பாதிக்கப்பட்ட நாம் கூட இலங்கையை சர்வதேசத்தில் இருந்து தனிமைப்படுத்துவதனுடாக சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைக்கான அழுத்தங்களை ஏற்படுத்த முடியும் என்ற அடிப்படையிலேயே அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றோம். அதனால் தான், இலங்கையை ஜ. நா உறுப்புரிமையை இருந்து நீக்கும்படி சர்வதேச சமூகம் மற்றும் ஐ. நா வை நான் வலியுறுத்தி வருகின்றேன்.

ஆனால், இலங்கையை சர்வதேச அரங்கில் இருந்து தனிமைப்படுத்துமாறு நாம் கோரும் நிகழ்ச்சி நிரலுக்கும் அரசாங்கம் சர்வதேச அமைப்புக்களில் இருந்து விலக நேரிடும் என்று விடுத்துள்ள எச்சரிக்கையின் பின்னால் இருக்கக்கூடிய நிகழ்ச்சி நிரலுக்கும் இடையில் பெரும் வித்தியாசம் இருக்கிறது.

எமது மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு நீதியை பெற்று அதன் மூலம் ஒரு நிலையான சமாதானத்தை இலங்கையில் ஏற்படுத்த நாம் முயற்சிக்கிறோம். ஆனால், தாம் நிகழ்த்திய இனப்படுகொலையில் இருந்து தப்புவதற்கும் தொடர்ந்து எமக்கு எதிராக கட்டமைப்பு சார் இனப்படுகொலையை நிகழ்த்துவதற்கும் அரசாங்கம் முயலுகின்றது. சர்வதேச அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை கடப்பாடுகளில் இருந்து விலகுவன் மூலம் இவற்றை அடையலாம் என்பது ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்பு.

சர்வதேச அமைப்புக்களில் இருந்து விலக நேரிடும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளமை 2008 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் கடும் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது சர்வதேச அமைப்புக்கள் மற்றும் மனிதாபிமான அமைப்புக்களை வன்னியில் இருந்து வெளியேறுமாறு அரசாங்கம் பணித்தமை நினைவுக்கு வருகின்றது. சர்வதேச அமைப்புக்களை வன்னியில் இருந்து வெளியேற்றிவிட்டு சாட்சி இல்லா யுத்தம் ஒன்றை நடத்தி எமது மக்களை அரசாங்கம் இன அழிப்புக்கு உள்ளாக்கியது. அரசாங்கம், அப்போது சர்வதேச அமைப்புக்களை வன்னியில் இருந்து வெளியேற்றியபோது பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெறும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும் ஐ. நா மற்றும் சர்வதேச சமூகம் ஆகியவை Responsibility to Protect (R2P) கோட்பாடுகளுக்கு அமைவாக உரிய முன் ஏற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமையே இன அழிப்பு நடைபெறுவதற்கு வழிகோலியது.

இன அழிப்பின் பின்னரும் தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிவரும் நிலையில், எதிர்காலத்தில் மிக மோசமான கட்டமைப்பு சார் இனப்படுகொலை ஒன்றும் ஏனைய மனித உரிமை மீறல்களும் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெறப்போவதற்கான ஒரு முன் அறிகுறியாகக் கூட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் போர் வெற்றி நாள் அறிவிப்புக்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

ஆகவே, முன்னர் போல அல்லாமல் ஐ. நா மற்றும் சர்வதேச சமூகம் இந்த அறிவிப்பு குறித்து தீவிரமான கவனம் செலுத்தவேண்டும். இதனை அலட்சியம் செய்யாமல் தமிழ் மக்களை பாதுகாக்கும் முன் ஏற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அதேவேளை, நடைபெற்ற இனப்படுகொலையை சர்வதேச ரீதியில் சுயாதீனமாக விசாரணை செய்வதற்கும் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று நடைபெறுமானால் எமது அப்பாவி சிங்களச் சகோதரர்களுக்கு இறுதியுத்தத்தில் என்ன நடந்தது என்பதை உணர்த்தி அவர்களின் பௌத்த தர்மம் காட்டும் வழியில் எமக்கான பரிகார நீதியை பெற்று இணைந்த வடக்கு கிழக்கில் சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு ஒன்றினை காணமுடியும் என்று நம்புகின்றேன்.

இதன் மூலம், சுபீட்சமான இலங்கையை கட்டியெழுப்பலாம். ஆனால், எமது சில சிங்களச் சகோதரர்கள் நாம் தனிநாட்டை உருவாக்க எத்தனித்து வருவதாக போலி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். உண்மையில் சிங்கள ஆட்சியாளர்களே வட-கிழக்கிற்கு ஒன்றும் தெற்கிற்கு ஒன்றுமாக இருவேறு ஆட்சி நிர்வாகங்களை நடத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் வட-கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுதினத்திற்கும் தெற்கில் நடைபெற்ற போர் வெற்றி தினத்திற்கும் இடையேயான முரண்நிலையினுடாக தெட்டத்தெளிவாக இதனை புரிந்துகொள்ளலாம்.

தெற்கில் இரண்டு தடவைகள் இளைஞர் கிளர்ச்சிகள் நடைபெற்றிருப்பதுடன் இராணுவத்தினால் மூர்கத்தனமாக கொடூரமான முறையில் பல்லாயிரம் இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு அவை முடிவுக்கு கொண்டுவரப்பட்டன. இதன்போது உயிர்நீத்த இளைஞர்கள் இன்றுவரை வருடாவருடம் தென் இலங்கையில் நினைவு கூரப்படுகின்றார்கள். ஆனால், போர் வெற்றி விழாக்கள் நடைபெறுவதில்லை. ஆனால், தமிழ் மக்களின் யுத்தத்தை பொறுத்தவரையில், நினைவுகூரல் நிகழ்வுகள் தடுக்கப்படுவதுடன் யுத்த வெற்றி விழா தென் இலங்கையில் அதே காலகட்டத்தில் கொண்டாடப்படுகின்றது.

நீதித்துறையின் சட்டம் கூட இருவேறாக தென் இலங்கைக்கும் வடக்கு கிழக்கிற்கும் பிரயோகிக்கப்படுகின்றது. நினைவு கூரல் நிகழ்வுகளில் கலந்துகொண்டவர்கள் மீது கொறோனா தனிமைப்படுத்தல் விதி முறைகள் பாய்கின்றன. ஆனால், தென் இலங்கையில் யுத்த வெற்றி விழா கொண்டாடுபவர்கள் மீது எந்த சட்டமும் பாய்வதில்லை. ஆகவே, இலங்கைத் தீவை இரண்டாக பிரிக்கும் வகையில் உண்மையாகவே செயற்படுவது யார் என்று கேள்வி கேட்க விரும்புகிறேன்.

ஜனாதிபதி தற்போது தாம் இராணுவத்தில் இல்லை என்பதையும் இந்த நாடு முழுவதற்கும் அதில் வாழும் மக்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டிய ஒரு உன்னத பதவியை அவர் வகிக்கின்றார் என்பதையும் தயவுசெய்து இனியாவது மனதில் நிலை நிறுத்துவாராக.” என குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More