மனிதர்கள் – திரைப்பட விமர்சனம்
தயாரிப்பு : ஸ்டூடியோ மூவிங் டர்டில் & ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ்
நடிகர்கள் : கபில் வேலவன், தக்ஷா,, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம் மற்றும் பலர்.
இயக்கம் : இராம் இந்திரா
மதிப்பீடு : 2/5
திரள் நிதி மூலம் முதலீட்டை ஈர்த்து இந்த திரைப்படத்தை புதுமுக கலைஞர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். கிரைம் திரில்லர் ஜேனரிலான இந்த படைப்பு மீது படக்குழுவினர் வைத்த நம்பிக்கை திரையிலும், பார்வையாளர்களிடத்திலும் எதிரொலித்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
ஆறு நண்பர்கள் நள்ளிரவில் மது அருந்துகிறார்கள். போதை அதிகமானதும் அவர்களுக்குள் நடைபெறும் உரையாடல் வாக்குவாதமாக மாறுகிறது. இது கைகலப்பிலும் நீள்கிறது.
இதனால் நண்பர்களின் ஒருவர் இறந்து விடுகிறார். அதிர்ச்சியில் உறையும் மற்றவர்கள் கடினமான – எதிர்பார்க்காத அந்த சூழலை எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பது தான் இப்படத்தின் கதை.
படத்தின் தொடக்கத்தில் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உற்சாகப்படுத்தும் இயக்குநர் – ஒளிப்பதிவாளர் -புது முக நடிகர்கள் – .செல்லச் செல்ல திரைக்கதை ஒரே இடத்தில் சிக்கிக் கொள்வதால் பார்வையாளர்களுக்கு ஏற்பட்ட புது அனுபவம் நீர்க்குமிழியின் ஆயுள் போல் உடைந்து விடுகிறது.
இடைவேளை தருணத்தில் இயக்குநர் விவரித்திருக்கும் சுவாரசியமான திருப்பம் இரண்டாம் பாதியை எதிர்பார்க்க வைக்கிறது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை படக் குழுவினர் உடைத்து விடுகிறார்கள்.
இறுதியில் வழக்கமான சினிமாவை விட சற்று குறைவான குறையான படைப்பாகவே ‘மனிதர்கள்: இருக்கிறது.
புதுமுக நடிகர்களின் கபில் வேலவன் மட்டும் தான் வகை வகையான உணர்வுகளை வெளிப்படுத்தி ரசிகர்களை ஆசுவாச படுத்துகிறார். சில டார்க் கொமடி ரசிக்கும் வகையில் இருக்கிறது.
படத்தில் பாராட்டப்பட வேண்டிய பிரதான மற்றும் முதன்மையான அம்சம் ஒளிப்பதிவு. நள்ளிரவு பின்னணியில் கதைக் களமும், கதை சம்பவமும் நடைபெறுவதால் அதனை இயல்பு மாறாமல் ரசிகர்களுக்கு கடத்தி தன் இருப்பை உறுதி செய்து, பாராட்டைப் பெறுகிறார் ஒளிப்பதிவாளர். இவரைத் தொடர்ந்து பின்னணி இசையும் பரவாயில்லை என சொல்ல வைக்கிறது.
மனிதர்கள் – அவலட்சணமானவர்கள்.