இண்டியன் பிறீமியர் லீக்கின் 18ஆவது அத்தியாயத்தில் புதிய அணி ஒன்று சம்பியானவது உறுதியாகியுள்ளது. அதற்கான அதிர்ஷ்டம் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருக்கா அல்லது பஞ்சாப் கிங்ஸுக்கா என்பதற்கான விடை நாளை இரவு கிடைக்கவுள்ளது.
இந்த இரண்டு அணிகள் மோதும் இறுதிப் போட்டி அஹமதாபாத், நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் நாளை செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) நடைபெறவுள்ளது.
2009, 2011, 2016 ஆகிய வருடங்களில் இரண்டாம் இடத்தைப் பெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 4ஆவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது.
அதேவேளை, 2014இல் கிங்ஸ் இலவன் பஞ்சாப் என்ற முந்தைய பெயரில் இரண்டாம் இடத்தைப் பெற்ற பஞ்சாப் கிங்ஸ் இரண்டாவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.
இந்த இரண்டு அணிகளும் 18 அத்தியாயங்களிலும் விளையாடியுள்ளமை விசேட அம்சமாகும்.
இந்த வருடம் நடைபெற்ற முதலாவது தகுதிகாண் போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 101 ஓட்டங்களுக்கு சுருட்டிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 8 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிபெற்றிருந்தது.
அப் போட்டியில் சுயாஷ் ஷர்மா, ஜொஷ் ஹேஸ்ல்வூட், யாஷ் தயாள் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகள், பில் சொல்டின் ஆட்டம் இழக்காத அதிரடி அரைச் சதம் என்பன றோயல் செலஞ்சர் பெங்களூரு அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.
முதலாவது தகுதிகாணில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வி அடைந்தபோதிலும் தனக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பில் (இரண்டாவது தகுதிகாண்) முன்னாள் சம்பியன் மும்பை இண்டியன்ஸை 5 விக்கெட்களால் வெற்றிகொண்டு இறுதிப் போட்டியில் விளையாட பஞ்சாப் கிங்ஸ் தகுதிபெற்றுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணித் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 41 பந்துகளில் 5 பவுண்டறிகள், 8 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 81 ஓட்டங்களைப் பெற்று தனது அணி இலகவாக வெற்றிபெறுவதை உறுதிசெய்தார்.
அவருக்கு பக்கபலமாக நெஹால் வதேரா 48 ஓட்டங்களைப் பெற்றதுடன் ஷ்ரேயஸ் ஐயருடன் 4ஆவது விக்கெட்டில் 84 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு நம்பிக்கையை ஊட்டினார்.
ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) இரவு கடும் மழை காரணமாக 2 மணித்தியாலங்கள் தாமதித்து ஆரம்பமான இரண்டாவது தகுதிகாண் போட்டியில் பலம்வாய்ந்த மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 207 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ப்ளே ஓவ் சுற்றுகளைத் தொடர்ந்து இப்போது றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் இறுதிப் போட்டியில் மீண்டும் விளையாடவுள்ளன.
இந்த இரண்டு அணிகளும் ஐபிஎல் வரராற்றில் 36 தடவைகள் ஒன்றையொன்று எதிர்த்தாடியுள்ளதுடன் அவை இரண்டும் தலா 18 தடவைகள் வெற்றிபெற்று சம நிலையில் உள்ளன.
விராத் கோஹ்லி (8 அரைச் சதங்களுடன் 614 ஓட்டங்கள்), பில் சோல்ட் (4 அரைச் சதங்களுடன் 387 ஓட்டங்கள்), அணித் தலைவர் ரஜாத் பட்டிதார் (2 அரைச் சதங்களுடன் 286 ஓட்டங்கள்), தேவ்டத் படிக்கல் (2 அரைச் சதங்களுடன் 247 ஓட்டங்கள்), ஜிட்டேஷ் ஷர்மா (ஒரு அரைச் சதத்துடன் 237 ஓட்டங்கள்) ஆகியோர் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் துடுப்பாட்ட வரிசையில் முக்கிய வீரர்களாக இடம்பெறுகின்றனர்.
அந்த அணியின் பந்துவீச்சானது ஜொஷ் ஹேஸ்ல்வூட் (21 விக்கெட்கள்), க்ருணல் பாண்டியா (15 விக்கெட்கள்), புவ்ணேவ்வர் குமார் (15 விக்கெட்கள்), யாஷ் தயாள் (12 விக்கெட்கள்), இம்பெக்ட் வீரர் சுயாஷ் ஷர்மா (8 விக்கெட்கள்) ஆகியோரில் பெரிதும் தங்கி இருக்கிறது.
மறுபுறத்தில் ஷ்ரேயஸ் ஐயர் (6 அரைச் சதங்களுடன் 603 ஓட்டங்கள்), ப்ரம்சிம்ரன் சிங் (4 அரைச் சதங்களுடன் 523 ஓட்டங்கள்), ப்ரியான்ஷ் ஆரியா (ஒரு சதம், 2 அரைச் சதங்களுடன் 451 ஓட்டங்கள்), நெஹால் வதேரா (2 அரைச் சதங்களுடன் 354 ஓட்டங்கள்), ஷஷாங் சிங் (2 அரைச் சதங்களுடன் 289 ஓட்டங்கள்) ஆகியோர் பஞ்சாப் கிங்ஸ் அணியில் முக்கிய துடுப்பாட்ட வீரர்களாக இடம்பெறுகின்றனர்.
அர்ஷ்திப் சிங் (18 விக்கெட்கள்), யுஷ்வேந்த்ர சஹால் (15 விக்கெட்கள்), ஹார்ப்ரீட் ப்ரார் (10 விக்கெட்கள்) ஆகிய மூவரே பிரதான பந்துவீச்சாளர்களாக அணியில் இடம்பெறுகின்றனர்.
16 விக்கெட்களைக் கைப்பற்றிய மார்க்கோ ஜென்சன், ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை முன்னிட்டு தென் ஆபிரிக்க அணியுடன் இணைந்துகொண்டுள்ளதால் பஞ்சாப் அணிக்கு பெரும் நெருக்கடியைத் தோற்றுவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த இரண்டு அணிகளினதும் தரவுகளை ஒப்பிடும் போது பஞ்சாப் கிங்ஸ் துடுப்பாட்டத்திலும் றோயல் செலஞ்சர்ஸ் பந்துவிச்சிலும் பலம் கொண்டவையாகத் தென்படுகின்றன. ஆனால், ஒட்டுமொத்த நிலையை நோக்கும்போது இரண்டு அணிகளும் சமபலம் வாய்ந்தவையாக உள்ளன.
எனவே, இந்த வருட ஐபிஎல் இறுதிப் போட்டி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.