எட்டு பிரபல கழகங்கள் பங்குபற்றும் ஐ லீக் கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் அரை இறுதிகளில் விளையாடுவதற்கு சோண்டர்ஸ் கழகமும் றினோன் கழகமும் முதல் இரண்டு அணிகளாக தகுதிபெற்றுக்கொண்டன.
இந் நிலையில் அரை இறுதிக்கு தெரிவாகப் போகும் அடுத்த இரண்டு அணிகள் எவை என்பதைத் தீர்மானிக்கும் இரண்டு முக்கிய போட்டிகள் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெறவுள்ளன.
இரண்டாவது குழுவுக்கான தீர்மானம் மிக்க போட்டியில் ரெட் ஸ்டார் கழகமும் ஜாவா லேன் கழகமும் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள போட்டியில் விளையாடவுள்ளன. இப் போட்டியில் வெற்றிபெறும் அணி அரை இறுதிக்கு முன்னேறும். இப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தால் ரெட் ஸ்டார் அரை இறுதியில் விளையாட தகுதிபெறும்.
அதனைத் தொடர்ந்து சோண்டர்ஸ் கழகத்துக்கும் நியூ ஸ்டார் கழகத்துக்கும் இடையிலான முதலாம் குழுவுக்கான போட்டி நடைபெறவுள்ளது.
சோண்டர்ஸ் கழகம் ஏற்கனவே அரை இறுதிக்கு தெரிவாகிவிட்டதால் இந்தப் போட்டி முடிவு அக் கழகத்திற்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
நியூ ஸ்டார் கழகம் வெற்றிபெற்றால் இக் குழுவிலிருந்து இரண்டாவது அணியாக அரை இறுதிக்கு முன்னேறும். நியூ ஸ்டாருக்கு பாதகமான முடிவு கிட்டினால் மாளிகாவத்தை யூத் கழகம் அரை இறுதிக்கு முன்னேறும்.
ஐ லீக் கால்பந்தாட்டப் போட்டியை கொட்டாஞ்சேனை செலஞ்சர்ஸ் கழகத்தின் தலைவர் எம்.ஐ. அன்தனி மணிவண்ணன் ஏற்பாடு செய்துள்ளதுடன் அவரது தலைமையிலான ஏற்பாட்டுக் குழுவினர் போட்டிகளை மிகச் சிறப்பாக நடத்திவருகின்றனர்.
இப் போட்டியில் சம்பியனாகும் அணிக்கு மொத்தம் 9 இலட்சம் ரூபாவும் இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு மொத்தம் 7 இலட்சம் ரூபாவும் பணப்பரிசாக கிடைக்கும்.
அரை இறுதியுடன் வெளியேறும் இரண்டு அணிகளுக்கு தலா 4 இலட்சம் ரூபாவும் முதல் சுற்றுடன் வெளியேறும் அணிகளுக்கு 3 இலட்சம் ரூபாவும் போட்டி கட்டணமாக வழங்கப்படுகிறது.