செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா அனோமி | திரைவிமர்சனம்

அனோமி | திரைவிமர்சனம்

2 minutes read

தயாரிப்பு : பாவனா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் – பனோரமா ஸ்டுடியோஸ் –  ப்ளீட்ஸ்க்ரீக் பிலிம்ஸ் – டி சிரீஸ்-  ஏபிகே சினிமாஸ்

நடிகர்கள் : பாவனா, ரகுமான், ஷெபின் பென்சன், பினு பப்பு, அர்ஜுன் லால் , விஷ்ணு அகஸ்தியா, சுமித் நாவல் மற்றும் பலர்.

இயக்கம் : ரியாஸ் மரத்

மதிப்பீடு : 3.5/5

சிறிய இடைவெளிக்குப் பிறகு நடிகை பாவனா நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘அனோமி’. கிரைம் திரில்லர் ஜேனரிலான இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

தடயவியல் துறையில் நிபுணத்துவம் பெற்றவராக பணியாற்றும் ஜாரா பிலிப்( பாவனா)- எதிர்பாராத தருணத்தில் பெற்றோரை இழந்ததால் மன அழுத்த பாதிப்பிற்கு ஆளாகி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, உளவியல் சிகிச்சையை பெற்று வரும் தன் இளைய சகோதரரான ஜியான் பிலிப்( ஷெபின் பென்சன்) பை அக்கறையுடன் பேணி பராமரித்து வருகிறார்.

ஒரு நாள் அவன் காணாமல் போகிறார். அவனை காணாது தவிக்கும் சகோதரியான ஜாரா பிலிப் காவல் துறையில் புகார் அளித்து தேடும் பணியில் தீவிரமாக ஈடுபடுகிறார். இந்நிலையில் ஜியான் ஓரிடத்தில் இறந்து கிடக்கிறார் என தகவல் வருகிறது. அதிர்ச்சி அடையும் ஜாரா இது தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையை பெற்று அது ஜியான் சுயமாக மேற்கொண்ட அகால மரணமா? அல்லது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அகால மரணமா? என விசாரிக்க தொடங்குகிறார்.

காவல் துறை அதிகாரியான ஜிப்ரான்( ரகுமான் ) ஜியானின் மரணம் தற்கொலை என்று வழக்கை நிறைவு செய்ய திட்டமிடுகிறார். ஆனால் இது தற்கொலை அல்ல திட்டமிட்ட கொலையாக இருக்கக்கூடும் என்றும், அதற்கான தடயவியல் ஆதாரத்தின் அடிப்படையில் முகாந்திரம் இருக்கிறது என்றும் சொல்கிறார். இதற்கு வலுவூட்டுவது போல் நீரஜ்- ஷாகினா ஆகியோர்களின் மரணமும் நிகழ்கிறது.

நீதிமன்றம், காவல்துறை உயர் அதிகாரியான ஜிப்ரானிடம் இது தொடர்பான புலன் விசாரணையை மேற்கொள்ளுமாறு உத்தரவிடுகிறது. அதே தருணத்தில் ஜாரா பிலிப்பும் இதன் பின்னணி குறித்து தடயவியல் துறை ரீதியான விசாரணையை பிரத்யேகமாக மேற்கொள்கிறார். இறுதியில் உண்மையான குற்றவாளியை கண்டறிந்தார்களா? இல்லையா? குற்றத்தின் பின்னணி என்ன? என்பதை சுவராசியமாகவும் விறுவிறுப்பாகவும் விவரிப்பது தான் இப்படத்தின் கதை.

‘ஈக்குவேசன் ஆஃப் டெத் ‘ எனும் சுகாதார துறையினர் மரணத்திற்கு பின்னரான தருணங்கள் குறித்த ஆய்வு பற்றியும் அதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட விரோதமான ஆய்வு குறித்தும் ரசிகர்கள் புரிந்து கொள்ளும் வகையில் காட்சிகளாகவும், உரையாடல்களாகவும் விவரித்து ரசிகர்களிடம் பாராட்டை பெறுகிறார்கள். அதிலும் குறிப்பாக இன்வெஸ்டிகேட்டட் ஜேனரிலான படைப்புகளை விரும்பி பார்த்து ரசிக்கும் ரசிகர்களை படக் குழு பல தருணங்களில் வியப்பில் ஆழ்த்துகிறது.

இது போன்ற புலனாய்வு வகைமையிலான படைப்புகளில் காவல்துறையின் விசாரணையின் போது திசை திருப்பல் என்பது முதன்மையானது. முக்கியமானது. அந்த விடயத்தில் இயக்குநர் ஜாரா பிலிப்பின் கணவராக போகும் ஆல்பி( அர்ஜுன் லால்) யின் மரணத்தை நிகழ்த்தி ரசிகர்களை மேலும் ஆர்வத்தை உண்டாக்குகிறார்கள்.

காவல்துறையினரின் தேடலில் பிரசாத்( விஷ்ணு அகத்தியா)  எனும் கதாபாத்திரம் சிக்கிய பிறகும் வழக்கு மேலும் வேறு திசையில் பயணிப்பது ரசிகர்களுக்கு கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

இறுதியாக சஞ்சய் ஹெக்டே ( சுமித் நாவல்) எனும் கதாபாத்திரத்தை காவல்துறையினரும், ஜாரா பிலிப்பும் ஒரே தருணத்தில் இருமுனை தாக்குதலை நிகழ்த்தி நெருங்குவது வரை விறுவிறுப்பு குறையாமல் பயணிக்கிறது. அதன் பிறகு படம் விவாதிக்கும் விடயம் மனித உரிமை மீறல் பற்றியதாக இருப்பதும், வைத்திய ரீதியிலான ஆய்வின் ஒரு நிலைப்பாடு என்பதுமாக விவரித்திருப்பது சிலரால் ஏற்றுக் கொள்ள முடியாதது. இருப்பினும் இதனூடாக அற்புதமான திரை அனுபவத்தை வழங்கிய படக் குழுவினரை தாராளமாக பாராட்டலாம்.

ஜாரா பிலிப் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாவனா சிறிய இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றி ரசிகர்களை அனுபவம் மிக்க நடிப்பால் ரசிக்க வைக்கிறார்.

ஜிப்ரான் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரகுமான் வழக்கம்போல் காவல்துறை சீருடையில் மிடுக்கான நடிப்பில் மிளிர்கிறார்.

ஏனைய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் தமிழ் ரசிகர்களுக்கு பழக்கம் இல்லாத அந்நிய முகமாக தோன்றுகிறார்கள். ஆனால் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு அவர்களின் பங்களிப்பு நிறைவு.

ஒளிப்பதிவு – பின்னணி இசை-  படத்தொகுப்பு – கலை இயக்கம் – என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இயக்குநரின் கற்பனைக்கு முழுமையான அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கி பாராட்டை பெறுகிறார்கள்.

‘ஈக்வேஷன் ஆஃப் டெத்’ எனும் விடயத்தை ஆய்வு செய்வதற்காக தற்கொலை எண்ணங்களுடன் வாழும் நபர்களை மட்டும் தெரிவு செய்யப்படுவது ஏன்? என்பதற்கான நம்பகத் தன்மையுடன் கூடிய விளக்கத்தை இயக்குநர் வழங்கி இருந்தால்… இந்தப் படைப்பு மேலும் சிறப்பான கவனத்தை ஈர்த்திருக்கும்.

அனோமி – பிரபஞ்ச புதிர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.