நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியான போர்னோ மாநிலம் மீண்டும் பயங்கரவாத தாக்குதலால் அதிர்ச்சியடைந்துள்ளது.
மைதுகுரி நகரின் மையப்பகுதியில் அமைந்த தபால் நிலையம் அருகே முதல் மனித வெடிகுண்டு வெடித்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிர்ச்சியடைந்த மக்கள் ஓடிக்கொண்டிருந்த சூழலில், சில நிமிடங்களுக்குள் நகரின் கூட்டம் கூடிய சந்தை பகுதியில் இரண்டாவது வெடிப்பு நிகழ்ந்தது.
இதில் முடிவடையாமல், காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட மைதுகுரி பல்கலைக்கழக மருத்துவமனை நுழைவாயிலில் மூன்றாவது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதே நேரத்தில் கலேரி எனப்படும் குடியிருப்பு பகுதியில் மேலும் ஒரு வெடிப்பு நிகழ்ந்தது.
ஒரே நாளில் நான்கு இடங்களில் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த தொடர் தாக்குதல்கள் நகரின் பாதுகாப்பு அமைப்பை கடுமையாக சவாலுக்கு உள்ளாக்கியுள்ளன.
இந்த தாக்குதல்களில் குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்தவர்களில் பலரது நிலைமை ஆபத்தானதாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த கொடூரத் தாக்குதலுக்கு பின்னால் ‘போகோ ஹரம்’ பயங்கரவாத அமைப்பின் கை இருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து மைதுகுரி நகரம் முழுவதும் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இந்த அமைப்பை ஒடுக்க சர்வதேச அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய தாக்குதல் பாதுகாப்பு சவால்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.