Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் விவசாயி தோற்றால் அந்த நாடே தோற்றுப்போகும் | விவசாயத்துறை விரிவுரையாளர் ரஜிதன்

விவசாயி தோற்றால் அந்த நாடே தோற்றுப்போகும் | விவசாயத்துறை விரிவுரையாளர் ரஜிதன்

11 minutes read

விவசாயத்துறையை கற்று, அதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, விவசாயிகளுக்கும் பெரும் பண்ணையாளர்களுக்கும் பண்ணை முதலீட்டாளர்களுக்கும் விவசாய ஆலோசனைகளை வழங்கிவரும் இளம் விவசாயியும், இந்திரா க்ரூப் நிறுவனத்தின் இயக்குநரும், பரந்தன் – இலங்கை விவசாய கல்லூரியின் விவசாயத்துறை விரிவுரையாளருமான கிளிநொச்சியை சேர்ந்த திரு. ரஜிதன் மகேஸ்வரன் வழங்கிய செவ்வியின்போது தெரிவித்ததாவது:-

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் விவசாயத்துறையின் பாதிப்பு…

இந்த பாதிப்பு என்பது விதையிலிருந்து ஆரம்பிக்கிறது. பாரம்பரிய விவசாய முறைகளில் விவசாயிகளே விதைகளை தயாரித்து அவற்றை பயன்படுத்தினர். இப்போது நாங்கள் வணிக வேளாண்மை எனும் பெயரில் விதைகள் முதலிய விவசாய உள்ளீடுகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து விவசாயம் செய்ய பழகியிருக்கிறோம். இது நல்லதா, கெட்டதா என்ற விவாதங்கள் வேறு விடயம்.

மண் பண்படுத்தலுக்கு எரிபொருள் வேண்டும். நீர் இறைத்தலுக்கு எரிபொருள் அல்லது மின்சாரம் தேவைப்படுகிறது.

மின்சாரம் இல்லாதபோது மண்ணெண்ணெய் நீர் இறைக்கும் இயந்திரம் வழமையான பயன்பாட்டுக்கு இருக்கும். எனினும், அதற்கு வேண்டிய மண்ணெண்ணெய்யும் இப்போது இல்லை. கையால் நீர் இறைத்துக்கொள்வதாக இருப்பினும், எமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு தேவையான எரிபொருள் இல்லை.

உள்ளூர் சந்தைகளுக்கு உற்பத்திப் பொருட்களை சைக்கிளிலேனும் கொண்டு செல்லலாம். எனினும், பெரும் வியாபார நோக்கம் கருதி பொருட்களை தம்புள்ளை போன்ற பெரிய சந்தைகளுக்கு கொண்டு செல்லவும், அங்கிருந்து வேறு சந்தைகளுக்கு இடம் மாற்றவும் எரிபொருள் இல்லாதது பாரிய பிரச்சினையாக உள்ளது.

உண்மையிலேயே, பொருளாதாரம் வீழ்ந்துள்ள நிலையில் பொருட்களின் இறக்குமதி இல்லாமை, உணவு உற்பத்திக்கான தேவை அதிகரித்துள்ளமை, பஞ்சம்… இதுபோன்ற சூழலில் விவசாயத்துறைக்கே அதிக வாய்ப்புகள் காணப்படுகிறது. ஏனென்றால், எல்லோரும் சாப்பிட வேண்டுமே!

எனினும், விதை முதலான விவசாய உள்ளீடுகளின் இறக்குமதியை நம்பி வாழும் நாம், அந்த உள்ளீடுகளின் பற்றாக்குறை, விலை அதிகரிப்பு, எரிபொருள் நெருக்கடியினால் மிக மோசமான உணவு நெருக்கடியையும் சந்தித்து வருகிறோம்.

முன்னதாக வணிக வேளாண்மைக்கென அறிமுகப்படுத்தப்பட்ட பயிர்ச்செய்கை முறைகள், சக்தி மூலங்கள் இன்றைய பொருளாதார நெருக்கடியில் இல்லாமல் போயுள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உணவுப் பற்றாக்குறைக்கு பொறுப்பு கூறவேண்டியது விவசாயத்துறையே என்றாலும், ஏனைய சக்திகளின் பங்களிப்பு இத்துறைக்கு வழங்கப்படவில்லையெனில், இன்னும் பாரதூரமான விளைவுகள் நேரலாம்.

வீட்டுத் தோட்டங்கள் தீர்வாகுமா?

வீட்டுத் தோட்டங்கள் தற்காலிக உணவுத் தேடல்களுக்கு உகந்ததாக அமைந்தாலும், அது நிரந்தர தீர்வாகாது. ஏனெனில், எல்லா உணவுகளையும் வீட்டுத் தோட்ட முறையில் உற்பத்தி செய்ய முடியாது. உதாரணமாக நெல் போன்றவற்றை வீட்டுத் தோட்டத்தில் பயிரிட இயலாது.

முழுவதுமாக உணவே கிடைக்காது என்றொரு கட்டத்தில் குறைந்தபட்சம் வீட்டுத் தோட்ட உணவுகள் நமக்கு கைகொடுக்கலாம்.

இந்நிலையில் வீட்டுத் தோட்ட பராமரிப்பில் மக்கள் ஆர்வம் காட்டுவது மிகவும் குறைந்துவிட்டது என்பது பெருங்குறையாகத் தான் தெரிகிறது.

எனினும், வீட்டுத் தோட்டத்தையே நாம் வணிக வேளாண்மையாக கொண்டு செல்வதோ அல்லது வணிக வேளாண்மையை ஒதுக்கிவிட்டு வீட்டுத் தோட்ட முறையிலான உணவுப் பாதுகாப்பில் 100 வீத வெற்றி கொள்வதோ சாத்தியமில்லை.

“சேமிப்புகள் இல்லாதபோதும் கூடமண்ணையும் நீரையும் வீண்விரயம் செய்யக்கூடாது என்பதற்காக நகைகளை அடகு வைத்து விவசாயம் செய்கின்றனர்…”

வீட்டுத்தோட்ட பராமரிப்பினை எவ்விதம் திருப்திகரமாக கையாள்வது?

வீட்டுத்தோட்டத்தில் பயிரிடப்படும் சிறிதளவு தாவரங்கள், கிழங்கு வகைகள், மரக்கறிகளை பராமரிப்பதில் சிரமங்கள் பெரிதாக இல்லை. எரிபொருள் பிரச்சினை இருக்காது. தொழில்நுட்ப முறைகளும் அவசியமல்ல.

வீட்டு உபயோகத்துக்கு உள்ள நீரை பயன்படுத்திக்கொள்ளலாம். சாணம், குப்பைகள், கூட்டெரு, பயிர் பாதுகாப்பு திரவங்கள், உயிர் உரங்கள் என்பன குறைந்த விலையில் பெற்று பயன்படுத்திக்கொள்ளலாம். எனவே, வீட்டுத் தோட்ட முறையானது, அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து ஈடுபடக்கூ‍டிய மக்களுக்கு கைக்கொள்ள இலகுவானது.

பொதுவாக விவசாயத்துறை எதிர்நோக்கும் தற்கால பிரச்சினைகள்…

 விவசாய உள்ளீடுகளின் விலை அதிகரிப்பு
 உள்ளீடுகளின் இறக்குமதி குறைந்துவிட்ட நிலையில் அவற்றை பெற்றுக்கொள்வது கடினமாக உள்ளது.
 உணவுப் பொருட்களின் தேவை அதிகமாக உள்ளபோதும், அவற்றை எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சந்தைப்படுத்த முடியாதுள்ளது.
 ஓரிரு நாட்களில் பழுதாகிவிடக்கூடிய மரக்கறி வகைகளை களஞ்சியப்படுத்தும் வசதிகள் இந்நாட்டில் போதியளவு இல்லை. குறிப்பாக, கிளிநொச்சியில் மரக்கறிகளை களஞ்சியப்படுத்துவதற்கான இடங்களோ வசதிகளோ அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலோ கூட இல்லை. வடக்கில் கிளிநொச்சி, மன்னாரில் நெல் களஞ்சியசாலைகள் மாத்திரமே இருக்கின்றன.

விவசாயிகளின் வாழ்வாதார நிலை

மாலைத்தீவுக்கு அடுத்து காலநிலையால் பாதிக்கப்படும் நாடு இலங்கையே. அதிலும் குறிப்பாக விவசாயத்துக்கே பாதிப்பு அதிகம்.

வறட்சி, வெள்ளம், சூறாவளியோடு போராடி விவசாயிகள் எப்படியோ விவசாயம் செய்தாலும், உற்பத்திகளை சந்தைப்படுத்தலில் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். ஆகையால், காலநிலைக்கு உகந்த விவசாய முறைகளை (Climate Smart Agriculture – CSA) விவசாயிகள் கடைபிடிக்க வேண்டியது மிக அவசியமாகும். அதற்காக சமூக, பொருளாதார, சந்தை கட்டமைப்புகளில் நிறைய மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது.

கொவிட் 19க்குப் பிறகே பிரதேச சபையின் கட்டுப்பாட்டில் உள்ள பல சேவைச் சந்தைகளிலும் ‘10% கழிவு’ என்கிற எழுதப்படாத சட்டமும் நிறுத்தப்பட்டது. அதற்கு முன்பு வரையிலும் கூட அந்த நடைமுறையை யாராலும் அகற்ற முடியவில்லை. அந்தளவுக்கு நாடு இயல்பு நிலையில் இருந்தபோதே விவசாயிகள் விளிம்பு நிலை வாழ்க்கையை வாழ்ந்தனர்.

இப்போதோ அந்த நிலை இன்னும் மோசமாகியுள்ளது. வேறு தொழில் செய்யத் தெரியாத விவசாயிகள் தொழிலை கைவிடவும் இயலாமல், தொடரவும் முடியாமல் பரிதவிக்கின்றனர்.

சேமிப்புகள் இல்லாதபோதும் கூட, மண்ணையும் நீரையும் வீண்விரயம் செய்யக்கூடாது என்பதற்காக நகைகளை அடகு வைத்து விவசாயம் செய்கின்றனர்.

அதுமட்டுமன்றி, விவசாயிகள் உற்பத்திகளை அறுவடை செய்யும் வரை பொருட்களின் விலை இயல்பாக இருக்கிறது. அறுவடை செய்கிற நாட்களில் வெங்காயம், உளுந்து, பயறு போன்ற உள்நாட்டு உற்பத்திப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுவிடுவது கூட சிலர் திட்டமிட்ட செயலாக தோன்றுகிறது. இதனாலும் ஏற்கெனவே நொந்துபோன விவசாயிகள் தற்போது அதை விட பெரிதாய் அடிபட்டுள்ளனர்.

ஒரு நாட்டில் விவசாயி தோற்றுப்போனால், அந்த நாடே தோற்றுப்போகும் என்பதே உண்மை.

எரிபொருள் உள்ளிட்ட தட்டுப்பாடுகளை சமாளிக்க மாற்று வழிகள்…

இன்றைய நெருக்கடி நிலைகளில் விவசாய செயற்பாடுகள் சார்ந்த பிரச்சினைகளை தவிர்க்க சோலார் தண்ணீர் பம்பிகள், எரிபொருளில் இயங்காத மின்சார வாகனங்கள் போன்ற தொழில்நுட்பம் சார்ந்த பாவனைகளுக்கு நகர்ந்திருக்கலாம்.

கிளிநொச்சியில் இரணைமடுவிலிருந்து தோட்டப் பயிர்களுக்கு ஏற்று நீர்ப்பாசன முறையில் சூரிய சக்தியில் உற்பத்தியாகும் மின்சாரத்தை பயன்படுத்தி, மின் மோட்டார்களை இயக்கி, நீரை வழங்கக்கூடியதாக உள்ளது. இதில் தொழில்நுட்ப கோளாறுகளும் இருக்கின்றன. இவ்விடங்களில் மின்துண்டிப்பு இடம்பெறாமல் மோட்டார்கள் இயங்கச் செய்தாலே  நீர்ப்பாசன சிக்கல்களை குறைத்துக்கொள்ளலாம்.

மக்களின் வாழ்வாதாரத்தை சீரமைப்பதில் விவசாயத்துறையின் பங்கு…..

இலங்கை ஒரு விவசாய நாடாகும். இங்கே விவசாயத்துக்கு தேவையான மூலப்பொருட்கள், எரிபொருட்கள் என அனைத்தையும் நாம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து, உள்நாட்டு உற்பத்தியை பெருக்கிக்கொள்கிறோம்.

இந்நிலையில் விவசாயத்துறையில் சடுதியான அதிகரிப்புகளை காட்டவேண்டிய ஒரு காலகட்டத்தில், அந்த அந்நிய நாடுகள் எமக்கான மூலப்பொருட்களை வழங்கவில்லையாயின், விவசாயமே செய்ய முடியாத நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிடுவோம் என்பதை இந்த எரிபொருள், டொலர் பிரச்சினையின்போதே நாம் உணர்ந்துள்ளோம்.

விதை, உரம், எரிபொருள் என எல்லாவற்றுக்கும் நாம் பிற நாட்டினரை சார்ந்துள்ளதால் ஏற்படுகின்ற, ஏற்படப்போகும் விளைவுகளை நமது விவசாயிகளுக்கு விவசாய திணைக்களங்கள், விவசாய பட்டதாரிகள் என பலரும் புரியவைத்து, விவசாயிகளோடு இணைந்து வேலை செய்து, அவர்களுக்கு நிறைய மாதிரிப் பண்ணைகளை உருவாக்கித் தரவேண்டும்.

எமக்கான உரங்களையும் விதைகளையும் நாமே உற்பத்தி செய்து, விதை இனங்களையும், குறைந்தளவு பசளைகளைக் கொண்டு நிறைய விளைச்சல்களை பெறும்படியான பயிர் இனங்களை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

எரிபொருள்களின் தேவையின்றி இயங்கும் நவீன சாதனங்களை பயன்பாட்டுக்கு வழங்க வேண்டும். இவற்றுக்கு மானியம் வழங்கப்பட வேண்டும். இத்தகைய நடைமுறைகளின் மூலம் விவசாயிகள் சுயாதீனமாய் செயற்பட்டால் உணவுப் பாதுகாப்பினை எமது மக்களுக்கு உறுதிப்படுத்தலாம்.

தலைமுறைகள் கடந்த துயரம்…

தட்டுப்பாடுகளிலேயே மிக கொடூரமானது உணவுப்பஞ்சம். அந்த பஞ்ச காலத்தில் ஆரோக்கியமான, சத்தான உணவுகளை பெரியவர்களுக்கு மட்டுமன்றி பிள்ளைகளுக்கும் வழங்குவதில் பெரும் பிரச்சினை உண்டாகும்.

இப்போது நிலவும் ஏனைய சிக்கல்களை, கடுமையாக உழைத்தால், இன்னும் சில வருடங்களில் நிவர்த்தி செய்துவிட முடியும். டொலருக்கு நிகராக இந்நாட்டு பணப் பெறுமதியையும் உயர்த்திவிடலாம். பழைய இயல்பு நிலையை நம்மால் கொண்டுவர முடியும்.

ஆனால், நாம் இழந்த ஆரோக்கியத்தை, சத்தான தேகத்தை திரும்பவும் மீட்டெடுப்பது கடினம். அதற்கு பல தசாப்தங்கள் கூட செல்லலாம். அதற்கிடையில் ஒரு தலைமுறையே கடந்து போகலாம்.

இன்றைக்கு போசாக்கு மிகுந்த ‘திரிபோசா’ நமக்கு கிடைக்கப்பெறாத நிலைமை வந்திருக்கிறது. திரிபோசாவில் உள்ள தானியங்கள் அனைத்தும் நம்மால் உற்பத்தி செய்யக்கூடியவையே. எனினும், அவற்றின் இறக்குமதியை எதிர்பார்த்து நாம் அந்த உணவையே இன்று இழந்திருக்கிறோம்.

அதனை உற்பத்தி செய்ய முடியாமற் போனமைக்கும் விவசாயிகளான நாம் ஒவ்வொருவரும் பொறுப்பேற்க வேண்டும்.

எவ்விதமான விவசாயத்தை கையாள்வது…?

இதுவரை நாம் பேசிவந்த இயற்கை விவசாயம், செயற்கை விவசாயம் என்ற வகைகளை முன்னிறுத்தி குழம்ப தேவையில்லை. இப்போது உலக நாடுகளிலும் ‘நீடித்து நிலைத்திருக்கும் விவசாயம்’ என்கிற பதமே பேசுபொருளாக உள்ளது. இதுவே சிறந்த விவசாய முறையாக தற்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது இயற்கை முறையோடு தொடர்புடையது. எனினும், செயற்கை முறைக்கு முற்றிலும் எதிரானதல்ல. கைமீறிப் போகும் கட்டத்தில் குறைந்தளவு இரசாயனங்கள் பயன்படுத்துவதை இந்த விவசாய முறையில் காணலாம்.

இலங்கையில் கூட கடந்த காலங்களில் திடீரென பூரண இயற்கை முறை விவசாயம் கொண்டுவரப்பட்டிருந்தது. இதன் விளைவாக நெல் விளைச்சல் 50 வீதத்தை விட குறைந்துள்ளது.

இது, வளர்ச்சி அடைந்த நாடுகளே எடுக்க தயங்கும் சாத்தியமில்லாத தீர்மானம்.

இயற்கை விவசாயம் தேவைதான். எனினும், விவசாயிகளுக்கு படிப்படியாக அது பற்றிய அறிவை  ஊட்‍டி, இந்த விவசாயத்தை அறிமுகப்படுத்துவதே சரியான முறை.

ஆகவே, இதற்கு யாரையும் குற்றம் கூறுவதை விட்டு விட்டு, எங்களிடம் உள்ள வளங்களை பயன்படுத்தி, நாமே உரங்களை உற்பத்தி செய்து, தொழில்நுட்ப முறைகளை கையாண்டு குறைந்தது 80 வீத விளைச்சலையேனும் பெற வேண்டும்.

நெல் விவசாயத்தை பார்த்தால் விதைப்பதை விட நாற்று நடுவது உற்பத்திச் செலவை குறைத்து விளைச்சலை அதிகரித்துவிடுகிறது. அதேபோல் குறைந்த உரப் பாவனையிலும் விளைச்சலை பெருக்கலாம். இதை நாம் உணர்ந்தாலே விவசாயத்துறையால் மக்கள் நீடித்த நிலையான நற்பலனை பெறுவர்.

உரம் முதலான வளங்களை பெறுவதில் சிக்கல்

உரம் முதலிய விவசாய உள்ளீடுகளை இறக்குமதி செய்து, உற்பத்தியில் ஈடுபடும் கொள்கையை முதலில் மாற்ற வேண்டும்.

இறக்குமதிக்கு பணமில்லை என்று கூறுவதை நிறுத்தி, மேலதிகமாக கொஞ்சம் பணத்தை செலவழித்து, எமது வளங்களை பயன்படுத்தி உள்நாட்டு உர உற்பத்தியை (யூரியா) வினைத்திறனான முறையில் மேற்கொள்ளலாம்.

அத்தோடு கூட்டெரு, உயிர் உரங்களை உருவாக்கலாம். வேறு தொழில்நுட்பங்களால் களைகளை குறைத்து, நோய்களை குறைத்தால் விளைச்சல் கூடும். இது சம்பந்தமான தெளிவூட்டல்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

விவசாயத்தில் நிலைபெறுவது இலகுவானது. இங்கே எத்தனையோ பேரின் இரத்தத்தில் விவசாயம் ஊறிப்போயுள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக சில நன்மைகளையும் பெற்றுள்ள விவசாயத்துறை 

* எரிபொருள் இல்லாமல் எப்படி விவசாயம் செய்வது, ட்ரக்டர் இல்லாமல் எப்படி உழுதலில் ஈடுபடுவது என்பதை புரிந்துகொண்டுள்ளோம்.

* இதுவரை சுமார் 50 கிலோ யூரியாவை ஒரு ஏக்கருக்கு மட்டுமே ‍மொத்தமாய் பயன்படுத்தி வந்த நாம், ஏக்கருக்கு 10 கிலோ யூரியாவே போதும்… அதை கொண்டே நல்ல விளைச்சலை பெறலாம் என்பது அறிந்துகொள்ள முடிகிறது.

* குறைந்தளவு பசளைகளை பயன்படுத்துவதால் பயிர்களின் நோய்த் தாக்கமும் குறைந்திருக்கிறது.

* பொருளாதார தடை காரணமாக ஏனைய துறைகளில் பலர் தொழிலை இழந்துள்ள நிலை ஏற்பட்டது. அவ்வாறு தொழிலை இழந்தவர்களில் பெருமளவினர் விவசாயத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இதனால் உணவு உற்பத்தி தொடர்பான வேலைகளில் ஈடுபடுவதற்கு வருகை தருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அரசிடம் சில கோரிக்கைகள்…

சுயாதீன முறையில் நாம் விவசாயம் செய்வதற்கான கொள்கைகளை அரசு உருவாக்க வேண்டும்.

சூரிய படலங்கள் மூலம் நீர் இறைக்கும் இயந்திரங்கள், அதன் தொகுதிகளை கையாள்பவர்களுக்கு மானியம் வழங்கலாம்.

நெல்லை வீசி விதைப்பதை விட நெல் நாற்று நடுவதில் விதை நெல் சேமிக்கப்படுகிறது. பூச்சி பீடைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. சூரிய ஒளி பயிரின் அடி வரை செல்வதால் நோய்கள், பூச்சிகள் அண்டாது. அப்படியே வந்தாலும், மருந்துப் பாவனை குறைவு. இரசாயன களை நாசினிகள் பயன்படுத்த தேவையில்லை. களையெடுத்தல் இலகு. 20-30 வீதம் விளைச்சல் அதிகம். இவற்றுக்கெல்லாம் காரணமான நாற்று நடுகையை செய்பவர்களுக்கு உதவிகளை வழங்கி ஊக்குவிக்க வேண்டும். அவர்களுக்கு உர மானியங்களையும் வழங்கலாம்.

தேவையான தொழில்நுட்பங்களை, இயந்திரங்களை அறிமுகப்படுத்தலாம்.

நெல் நாற்று நடும் இயந்திரங்களை நிலத்தில் இறக்கி வேலை செய்வோருக்கு மானியம் வழங்கலாம்.

எரிபொருளில் இயங்கும் இயந்திரங்களுக்கு மாற்றீடாக சூரிய படலத்தில் இயங்கும் இயந்திரங்களுக்கு மானியங்களை வழங்கலாம்.

விவசாயிகளுக்கு சோலார் மற்றும் மின்கலங்கள் மூலம் இயங்கும் இயந்திர வசதிகளை பெற்றுத் தரலாம்.

எமது நாட்டு மக்களின் உற்பத்திகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

தானிய மற்றும் மரக்கறி களஞ்சியங்களை பெருக்க வேண்டும்.

முக்கியமாக, விவசாயத்துறையை கற்பிக்கும் அரசு மற்றும் அரசு சாரா கல்வி நிறுவனங்களை இந்த நெருக்கடியான நாட்களில் மூடும் முயற்சிகளை தவிர்க்க வேண்டும். பல்கலைக்கழக விவசாய பீடங்கள் தொடர்ந்து இயங்க வேண்டும். இந்நிறுவனங்கள் மூலம் விவசாய பட்டதாரிகளும் மாணவர்களும் உருவாகி, உழவுச் சேவையில் ஈடுபட்டு, விவசாயத்தினை மேம்படுத்த வேண்டும். விவசாயம் கற்றறிந்த மாணவர்களின் புதிய திட்டங்கள், ஆலோசனைகள் விவசாயத்துறையின் வளர்ச்சிக்குத் தேவை.

அரசாங்கம் மாறிய பின்னரேனும் விவசாயிகளின் நிலைமை மாறும் என கருதுகிறீர்களா?

அரசாங்கம் மாறினால் எல்லாம் மாறும் என்று நாம் நம்புவது கூட ஒருவிதத்தில் மக்களான நம் ஒவ்வொருவரின் பொறுப்பின்மையை காட்டுகிறது.

அரசின் பிழைகளை சுட்டுக்காட்டும் அதேவேளை நாம் நமது வேலைகளை சரியாக செய்தோமா என்பதையும் கவனிக்க வேண்டும்.

நீடித்து நிலைக்கக்கூடிய விவசாயத்தை கட்டியெழுப்ப நமது வளங்களை நாம் பயன்படுத்தினால் மட்டுமே நிலைமை மாறும். இந்த வளங்களை அரசு பெற்றுக்கொடுத்து நாம் அவற்றை சரிவர பயன்படுத்தாவிட்டாலும், தவறு நம்முடையதே.

எனவே, நீர்வளமும் நில வளமும் நிறைந்துள்ள இந்நாட்டில் புதிய சிறந்த கொள்கைகளை நிறுவி, அவற்றை தொடர்ச்சியாக கடைபிடித்து, விவசாயத்துறையில் உணவு உற்பத்தித் துறையில் ஏற்றுமதி நாடாக எமது நாடு திகழ்வதே எமக்கான வெற்றியாகவும், நலிந்த விவசாயிகளை மீண்டெழ வைப்பதற்கான நிரந்தர தீர்வாகவும் அமையும்.

நன்றி – வீரகேசரி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More