சூழ்நிலை கைதியாக ஜனாதிபதி ரணில் | வே.இராதாகிருஷ்ணன் செவ்வி

நேர்காணல் : சிவலிங்கம் சிவகுமாரன்

இன்றைய அரசாங்கத்தின் சகல விடயங்களிலும் பொதுஜன பெரமுன உறுப்பினர்களே அதிகாரம் செலுத்துகின்றனர். அவர்களே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பாராளுமன்றம் மூலம் தெரிவு செய்தவர்கள். அவர் மக்களால் தெரிவு செய்யப்படவில்லையென்பதே இங்குள்ள பிரச்சினை. அது தான் அவரிடமுள்ள பலவீனம். 

இதை பயன்படுத்திக்கொண்ட மொட்டு கட்சியினர் தாம் நினைத்தப்படி ஜனாதிபதி நடக்க வேண்டும் என நினைக்கின்றனர். 

அவரை ஆட்டுவிக்கப்பார்க்கின்றனர். ரணில் நல்ல மனிதர் ஆனால் இப்போது அவர் சூழ்நிலைக் கைதியாகவே இருக்கின்றார். 

ஆகவே ஸ்திரமற்ற இந்த அரசாங்கம் எத்தனை நாட்களுக்கு இப்படி இயங்கப்போகின்றதோ தெரியவில்லையென மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

மேலும் ஸ்திரமான அரசாங்கம் என்றால் நாட்டை நெருக்கடி நிலைமைகளிலிருந்து மீட்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கலாம். 

அதற்காக கொள்கையை மாற்றிக்கொண்டு அமைச்சுப்பதவிகளைப் பெறுவதால் ஆகப்போவதொன்றுமில்லை என்றும் அவர் கூறுகிறார். வீரகேசரி வாரவெளியீட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணல் இங்கு தரப்படுகின்றது.

கேள்வி: சர்வ கட்சி ஆட்சியோ தேசிய அரசாங்கமோ  எது அமைந்தாலும் ஆதரவளிப்பதா இல்லையா என்பதை இன்னும் தமிழ் முற்போக்குக் கூட்டணி அறிவிக்கவே இல்லையே?

பதில்:   ஜனாதிபதியிடம் பேச்சு நடத்திய எந்தத் தரப்பினரும் இன்னும் உறுதியான பதில்களை வழங்கவில்லை. ஏனென்றால் இந்த அரசாங்கம் இன்னும் எத்தனை காலங்களுக்கு இருக்கப்போகின்றது என்ற சந்தேகம் தான். அதே வேளை கூட்டணியில் அங்கம் வகிக்கும் மலையக மக்கள் முன்னணியாகிய நாம் உறுதியாக எமது நிலைப்பாட்டை உத்தியோகபூர்வமாக கூறி விட்டோம். ரணில் ஜனாதிபதியாகக் கூடாது என்ற கொள்கையில் ஒருமித்து டலஸ் அழகபெருமவுக்கு ஆதரவளித்தோம். இப்போது அதை மாற்றிக்கொண்டு அவர் அழைக்கின்றாரே என ஓடோடிப் போய் அமைச்சுப்பதவிகளைப் பெற்றுக்கொண்டால் அது நியாயமாகாது. மலையக மக்கள் முன்னணி தனது கொள்கையில் என்றும் உறுதியாகவே இருக்கின்றது.

கேள்வி: அமைச்சுப்பதவிகள் வழங்கப்பட்டால் ஏற்றுக்கொள்வீர்களா?

பதில்: உறுப்பினர்களை வசீகரிக்க அல்லது தம்பக்கம் இழுக்க வேண்டுமானால் அரசாங்கம் அமைச்சுப்பதவிகளை ஏலம் விடலாம். ஆனால் அதனால் ஆகப்போவது ஒன்றுமில்லை. திறைசேரியிலேயே நிதி இல்லை. பின்பு எப்படி அமைச்சுக்களுக்கு நிதி ஒதுக்குவர்? மிகுதியாக உள்ள காலங்களில் மக்களுக்கு பயன்படக்கூடிய வண்ணம் ஏதாவது செய்ய முடியும் என   அரசாங்கத்தின் பக்கமிருப்போர்  அல்லது அவர்களுக்கு ஆதரவளிக்கக் காத்திருப்போர்  நினைத்தால் தாராளமாக சென்று அமைச்சுப்பொறுப்பை ஏற்கலாம். ஆனால் அதன் பிறகு மக்களின் கேள்விகளுக்கு பதில் கூற வேண்டும். மக்களின் என்ன பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமைச்சுப்பதவியை பொறுப்பேற்றோம் என அமைச்சுப்பதவியை பெற்றுக்கொள்வதற்கு முன்பு அவர்கள் வாக்குறுதி அளிப்பார்களா? 

கேள்வி: நல்லாட்சி காலத்தில் இப்போதைய ஜனாதிபதியுடன் தானே அமைச்சுப்பதவிகளைப்பெற்று அரசியல் பயணம் செய்தீர்கள்?

பதில்: ஆம் .அதில் எந்த சந்தேகங்களும் இல்லை. ஆனால் மக்களின் அமோக ஆதரவுடன் அவர்களின் வாக்குகளைப்பெற்று நாம் நல்லாட்சியை உருவாக்கினோம். அமைச்சுப்பதவிகளைப் பெற்று எம்மால் இயன்ற அளவுக்கு எமது சமூகத்துக்கு குறுகிய காலத்தில் தனி வீட்டுத்திட்டங்கள், பாடசாலை கட்டிடங்கள் ,உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினோம். அதற்கு சகல வழிகளிலும் பிரதமர் ரணில் ஒத்துழைப்பு நல்கினார். ஆனால் இப்போது இருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேறு. அவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் பாராளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதியானவர். அவரை இயக்குபவர்கள் மொட்டு கட்சி உறுப்பினர்கள். நல்ல திறமைசாலியான ரணிலை தனித்து இயங்க விட முடியாது அவர்கள் கட்டிப்போட்டு வைத்திருக்கின்றனர். இது தான் அவர்களின் இயல்பு. நாட்டை எப்போதும் குழப்ப நிலையில் வைத்திருக்கவே அவர்கள் விரும்புகின்றனர். அவர்களின் அரசியல் இருப்பு குறித்து அச்சப்படுகின்றனர். நாட்டை குட்டிச்சுவராக்கிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாவை மீண்டும் வரவழைத்து அரசியல் செய்யப்பார்க்கின்றனர். பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும் என நல்லாட்சி காலத்தில் கூறிய ரணில் இப்போது அதைப் பயன்படுத்தி போராட்டங்களை ஒடுக்கி வருகிறார். இதை அவர் செய்யவில்லை. பின்புலத்திலிருந்து அவரை செய்ய வைக்கின்றனர். எனவே இடியப்ப சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கும் ரணில் ஒரு சூழ்நிலை கைதியாகவே இருக்கின்றார். இப்போது அவருடன் சென்று இணைந்து அரசியல் செய்ய முடியாது. தேர்தல் ஒன்று வரும் பட்சத்தில் மக்கள் தெரிவு செய்யும் ஜனாதிபதியே அழுத்தங்கள் இல்லாது செயற்பட முடியும்.

கேள்வி: அப்படியானால் மலையக சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்க எந்த அரசாங்கத்தாலும் முடியாதா? 

பதில்: அப்படியில்லை. எல்லா அரசாங்கத்துக்கும் மலையக சமூகத்தின் மீது அனுதாபங்களே  உள்ளன. எவருக்கும் இந்த சமூகத்தின் பிரச்சினைகளை முழுமையாக தீர்க்க அக்கறையில்லை. ஏனென்றால் இந்த மக்களின் பிரச்சினைகள் இன்று நேற்று உருவானதில்லை. சுதந்திரத்துக்குப்பிறகு 30 வருடங்கள் நாம் நாடற்றவர்களாக இருந்தோம். 1977 இற்குப்பிறகே முதல் பாராளுமன்ற உறுப்பினரைப் பெற்றோம். 80 களுக்குப்பிறகே இலவச கல்வியின் பயனை முழுமையாக அனுபவித்தோம். சுமார் 50 வருட பிரச்சினைகளை ஒரே இரவில் தீர்த்து விட முடியாது தான். இதில் குடியிருப்பு, கல்வி ,சுகாதாரம் என எம்முன்னே பல சவால்கள் எழுந்து நிற்கின்றன. தட்டுத்தடுமாறி தான் இந்த நிலையை அடைந்துள்ளோம். 45 வருட பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் ஒரு தடவை 10 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டிருந்தோம். ஆனால் எல்லா அரசாங்கங்களும் இந்த மக்களின் பிரச்சினைகளை நிரந்தரமாக தீர்க்க முன் வரவில்லை என்பதே உண்மை.

கேள்வி: தொழிலாளர்களின் வேதனப் பிரச்சினையும் தீர்க்கப்படவில்லையே?

பதில்: முழு நாடுமே பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் போது ஏற்கனவே வறுமை கோட்டுக்குக்கீழ் தவித்து வரும் தொழிலாளர்கள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என நீதிமன்றம் கூறினாலும் தற்போதுள்ள வாழ்க்கை செலவுக்கு அது எந்த வகையிலும் போதாது என்பதை அனைவரும் அறிவோம். ஆகவே தற்போது 3,250 ரூபாவை நாட்சம்பளமாக கேட்டு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதை அரசாங்கமே வழங்க வேண்டும். ஏனென்றால் சம்பள நிர்ணய சபையின் மூலமே தற்போது தொழிலாளர்களுக்கு வேதனம் வழங்கப்பட்டு வருகின்றது. வாழ்க்கைச் செலவு எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதை அரசாங்கம் அறியும் தானே? கோட்டாபாயவின் அரசாங்கம் விவசாயத்துறையை படுபாதாளத்துக்குள் தள்ளியது. இரசாயன  பசளைகளை முட்டாள்த்தனமாக நிறுத்தியதால் இன்று தேயிலை துறையும் 30 வீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஆகவே இதற்கான பொறுப்பை அவர்களே ஏற்க வேண்டும்/ 

கேள்வி: இடைக்கால வரவு செலவு திட்டத்திலும் இந்த மக்களுக்கு ஒரு நிவாரணமும் இல்லையே? 

பதில்: பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நிவாரணங்கள் கிடைக்கும் என்று பார்த்தால், அவர்களை மேலும் துன்பத்தில் தள்ளி அவர்களிடம் இருப்பதை முழுவதுமாக கறந்து விட்டு மீண்டும் அவர்களுக்கு எவ்வாறு உதவுவது? வட் வரி 15 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  மேலதிகமாக அறவிடப்படும் அந்த 3 வீதத்தை யார் கொடுக்கப்போகின்றார்கள்? மக்களிடமிருந்து தானே அரசாங்கம் அதை வாங்கப்போகின்றது? இது அநியாயம் இல்லையா?  எந்த அரசாங்கமும் வெளிநாடுகளிடம் கடன் பெறுவதில் சளைத்ததல்ல. மஹிந்த ராஜபக்ச தனது ஆட்சி காலத்தில் 2009 இலிருந்து 2015 வரை  வெளிநாடுகளிடமிருந்து  31 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப்பெற்றார். அதே வேளை நல்லாட்சி காலத்தில் அந்த கடனை திருப்பி செலுத்த வழிகளை தேடாமல் ரணில் விக்ரமசிங்க 21 பில்லியன் டொலர்களை கடனாக பெற்றிருக்கிறார். இப்போது அதுவே 52 பில்லியன்களாக வந்து நிற்கின்றது. இப்படி இருக்கும் போது வரவு செலவு திட்டத்தில் எவ்வாறு நிவாரணம் வழங்குவது? யோசனைகளை யார் வேண்டுமானாலும் முன்வைக்கலாம் ஆனால் இங்கு தீர்வுகளே முக்கியம். இடைக்கால வரவு செலவு திட்டத்தில் வருமானம் வரத்தக்கதாக ஒன்றுமே இல்லை. உல்லாசப்பயணத்துறை வீழ்ச்சியடைந்து விட்டது. எரிபொருள் விலையேற்றம் காரணமாக உல்லாசப்பயணிகள் உள்ளூரில் பயணம் செய்ய முடியாதுள்ளது. இதன் காரணமாக ஹோட்டல்துறை முற்றிலுமாக வீழ்ந்து விட்டது. நாம் என்ன செய்வது? 

கேள்வி: அரசாங்க ஊழியர்களுக்கு 5 வருட விடுமுறை வழங்கி அந்நிய செலாவணியை பெறுவது குறித்து?

பதில்: இதில்  முழுவதுமாகப் பாதிக்கப்படப்போவது கல்வி சமூகம். அதிலும் மலையக சமூகம். அரச ஊழியர்களில்  ஆசிரியர்களும் இருக்கின்றனர். சிறந்த ஊதியத்துடன் வெளிநாட்டு வேலை வாய்ப்பை  பட்டதாரி ஆசிரியர்களே பெறக்கூடியதாக இருக்கும். அவர்களும் போய் விட்டால் இங்கு மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பது யார்? ஏற்கனவே எமது சமூகத்துக்கு ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. அவர்களும் போய் விட்டால் ஓரளவுக்கு வளர்ச்சி பெற்று வந்த எமது கல்வித்துறையும் வீழ்ச்சியை நோக்கி செல்வதை எவரும் தடுக்க முடியாது. இங்கு அனைத்துமே குழப்பகரமாக இருக்கும் அதே வேளை விவேகமில்லாத முடிவுகளாக உள்ளன. இப்படியாக குழப்பம் நிலவும் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப்பதவிகளைப் பெற்றால்  எதிர்த்தரப்பும் இல்லாது ஆளும் தரப்புமில்லாத நிலையில் மக்களின் கோபம் தான் எம்மேல் அதிகரிக்கும். 

நன்றி – வீரகேசரி

ஆசிரியர்