செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் டெஸ்ட் அணியில் பசிந்து, பவன், தினால், தரிந்து ஆகியோரில் இருவர் அறிமுகமாகலாம்

டெஸ்ட் அணியில் பசிந்து, பவன், தினால், தரிந்து ஆகியோரில் இருவர் அறிமுகமாகலாம்

2 minutes read

இலங்கையின் முன்னாள் தலைவரும் ஆரம்ப வீரருமான திமுத் கருணாரட்ன, மற்றொரு முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் ஆகியோஆகியோருக்குப் பதிலாக தகுதியான புதிய வீரர்களை டெஸ்ட் அணியில் இணைப்பதற்கு உப்புல் தரங்க தலைமையிலான தெரிவுக் குழுவினர் பெரும்பாலும் ஒரு தீர்மானத்திற்கு வந்துள்ளதாக அறிய கிடைக்கிறது.

முதல் தர உள்ளூர் போட்டிகளிலும் இலங்கை ஏ அணி பங்குபற்றிய போட்டிகளிலும் பிரகாசித்த ஓரிரு வீரர்களை டெஸ்ட் அணியில் இணைக்க எண்ணியுள்ளதாக தெரிவுக் குழுத் தலைவர் உப்புல் தரங்க தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக காலியில் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியுடன் திமுத் கருணாரட்ன ஓய்வு பெற்றார்.

அவரைத் தொடர்ந்து மற்றொரு சிரேஷ்ட வீரரான ஏஞ்சலோ மெத்யூஸ், காலியில் பங்களாதேஷுக்கு எதிராக நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வுபெறவுள்ளார்.

22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஓஷத பெர்னாண்டோவை திமுத் கருணாரட்னவுக்குப் பதிலாக ஆரம்ப வீரராக இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக ‘வீரகேசரி’ ஒன்லைனுக்கு உப்புல் தரங்க தெரிவித்தார்.

இதேவேளை பசிந்து சூரியபண்டார, பவன் ரத்நாயக்க, சொனால் தினுஷ, தரிந்து ரத்நாயக்க ஆகிய நால்வரில் இருவர் பங்களாதேஷுக்கு எதிரான தொடரில் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏஞ்சலோ மெத்யூஸ் முதலாவது டெஸ்ட் முடிவில் ஓய்வு பெற்ற பின்னர் அவரது இடத்தை பெரும்பாலும் பசிந்து சூரியபண்டார அல்லது சுழல்பந்துவீச்சு சகலதுறை வீரர் சொனால் தினுஷ நிரப்புவார் எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, பவன் ரத்நாயக்கவுக்கும் சுழல்பந்துவீச்சாளர் தரிந்து ரத்நாயக்கவுக்கு கும்   வாய்ப்பு வழங்குவது குறித்து கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

ரமேஷ் மெண்டிஸ், நிஷான் பீரிஸ் ஆகிய இருவரும் சுழல்பந்துவீச்சில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்காதததால் தரிந்து ரத்நாயக்க பெரும்பாலும், பிரதான சுழல்பந்துவீச்சாளர் பிரபாத் ஜயசூரியவின் சுழல்பந்துவீச்சு ஜோடியாக இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பசிந்து சூரயபண்டார

25 வயதான சூரியபண்டார 53 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் 12 சதங்கள், 19 அரைச் சதங்களுடன் 3981 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ளார். றோயல் கல்லூரியின் முன்னாள் வீரரான பசிந்து சூரியபண்டார ஓர் இன்னிங்ஸில் பெற்ற அதிகூடிய எண்ணிக்கை 242 ஓட்டங்களாகும். இவர் முவர்ஸ் கழகத்திற்காக விளையாடி வருகிறார்.

பவன் ரத்நாயக்க

மஹநாம கல்லூரியின் முன்னாள் வீரர் 22 வயதான பவன் ரத்நாயக்க, ஒரு சிறந்த மத்திய வரிசை துடுப்பாட்டக்காரர் ஆவார். அவர் 49 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் 10 சதங்கள், 9 அரைச் சதங்களுடன் 3068 ஓட்டங்களைப் மொத்தமாக பெற்றுள்ளார். ஒரு இன்னிங்ஸில் அவர் பெற்ற அதிகூடிய எண்ணிக்கை 240 ஓட்டங்களாகும். அவர் தற்போது சிசிசி அணிக்காக விளையாடி வருகிறார்.

சொனால் தினுஷ

மஹாநாம கல்லூரியின் மற்றொரு முன்னாள் வீரரான சொனால் தினுஷ ஒரு சிறந்த சுழல்பந்துவீச்சு சகலதுறை ஆட்டக்காரர் ஆவார். சிசிசி அணியில் இடம்பெறும் இடது கை துடுப்பாட்டக்காரரான தினுஷ, இதுவரை 48 முதல்தர போட்டிகளில் 7 சதங்கள், 12 அரைச் சதங்களுடன் 2478 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ளார். இடதுகை சுழல்பந்துவீச்சாளரான தினுஷ 99 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.

தரிந்து ரத்நாயக்க

கல்கிஸ்ஸை தூய தோமையார் கல்லூரியின் முன்னாள் வீரரான தரிந்து ரத்நாயக்கவும் சிறந்த சுழல்பந்துவீச்சு சகலதுறை வீரராவார். தமிழ் யூனியன் கழகத்திற்காக தற்போது விளையாடிவரும் தரிந்து ரத்நாயக்க, 73 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 337 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார். தரிந்து ரத்நாயக்க இரண்டு கைகளாலும் பந்துவீசக்கூடியவர். 25 வயதான தரிந்து ரத்நாயக்க, துடுப்பாட்டத்திலும் சிறப்பாக செயற்பட்டு 9 அரைச் சதங்கள் உட்பட மொத்தமாக 1761 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

தசுஷ் ஷானவுக்கு ரி20 அணியில் மீண்டும் வாய்ப்பு

சர்வதேச ரி20 கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான தசுன் ஷானக்கவுக்கு ஒரு வருடத்துக்குப் பின்னர் மீண்டும் ரி20 அணியில் வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

34 வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் தசுன் ஷானக்க, 102 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 1456 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன் 33 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.

அவர் உள்ளூர் ரி20 போட்டிகளிலும் துபாய் கெப்பிட்டல்ஸ் சார்பாக ஐக்கிய அரபு இராச்சிய ரி20 போட்டிகளிலும் திறமையை வெளிப்படுத்தியதால் அவரை இலங்கையின் ரி20 அணியில் இணைப்பது குறித்து தெரிவாளர்கள் கவனம் செலுத்திவருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More