செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலங்கை – சைனீஸ் தாய்ப்பே மோதும் AFC ஆசிய கிண்ணம் – சவூதி அரேபியா 2026 தகுதிகாண் நாளை

இலங்கை – சைனீஸ் தாய்ப்பே மோதும் AFC ஆசிய கிண்ணம் – சவூதி அரேபியா 2026 தகுதிகாண் நாளை

3 minutes read

இலங்கை அணிக்கும் சைனீஸ் தாய்ப்பே அணிக்கும் இடையிலான டி குழுவுக்கான AFC ஆசிய கிண்ணம் – சவூதி அரேபியா 2026 மூன்றாவது தகுதிகாண் கால்பந்தாட்டப் போட்டி கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில்  செவ்வாய்க்கிழமை (10) பிற்பகல் 3.45 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் போட்டியில் வெற்றிபெற்று தேசத்திற்கு பெயரையும் புகழையும் ஈட்டிக்கொடுப்பதே தமது பிரதான நோக்கம் என கால்பந்தாட்ட இல்லத்தில் இன்று திங்கட்கிழமை (09) முற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுநர் அப்துல்லா அல் முத்தய்ரி தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தாய்லாந்துக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி நடைபெற்ற போட்டியின்போது மத்தியஸ்தரின் சிவப்பு அட்டைக்கு இலக்கான பயிற்றுநர் அப்துல்லா அல் முத்தய்ரி வெறும் பார்வையாளராக  நாளைய போட்டியை  கண்டு களிக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக குவைத் கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஒத்துழைப்புடன் அந் நாட்டைச் சேர்ந்த உதவிப் பயிற்றுநராக நாளைய போட்டியின்போது இலங்கை அணியை வழிநடத்தவுள்ளார்.

இது தொடர்பாக அப்துல்லா அல் முத்தய்ரியிடம் ‘வீரகேசரி ஒன்லைன்’ கேள்வி எழுப்பியபோது,

‘யார் அணியைப் பயிற்றுவிக்கிறார்கள் என்பது முக்கிமல்லை. வீரர்கள் திறமையாக விளையாடி வெற்றிபெறுவதே முக்கியம். உதவி பயற்றுநர் ஒருவரை குவைத் கால்பந்தாட்ட சம்மேளனம் எங்களுக்கு தந்துள்ளது. அவர் எனக்கு பதிலாக அணியை வழிநடத்துவார். எவ்வாறாயினும் எமது அணியில் இடம்பெறும் 23 வீரர்களையும் நான் பயிற்றநர்களாகவே கருதுகிறேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் கடந்த 10 மாதங்களாக தொடர்ந்து ஒன்றாக விளையாடி வருகின்றனர். ஒருவரை ஒருவர்நன்கு அறிந்தவர்களாக சிறந்த புரிந்துணர்வுடன் விளையாடி வருகின்றனர். எனவே அவர்களுக்கு புதிதாக ஒன்றும் பயிற்றுவிக்கத் தேவையில்லை.

‘இந்த பத்து மாதங்களில் இலங்கை விளையாடிய 9 சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளில் நான்கில் வெற்றிபெற்றுள்ளதுடன் 2 போட்டிகளை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டுள்ளது. தரவரிசையில் உயரிய நிலையில் உள்ள அணிகளுடனேயே இலங்கை தோல்வி அடைந்துள்ளது. உலக கால்பந்தாட்ட தரவரிசையில் 97ஆம் இடத்தில் இருந்த தாய்லாந்துக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஆசிய தகுதிகாண் போட்டியில் கடும் சவால் விடுத்தே இலங்கை 0 – 1 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இலங்கையை விட தரவரிசையில் 103 இடங்கள் முன்னிலையில் இருந்த தாய்லாந்துடனான போட்டியில் எமது வீரர்கள் மிகத் திறமையாக விளையாடி அந்த அணியை அதிர்ச்சியில் ஆழ்த்தினர். இந்தப் பெறுபேறைப் பார்க்கும்போது சைனீஸ் தாய்ப்பே உடனான போட்டியில் இலங்கை வெற்றிபெறும் என்றே எனக்கு கூறத்தோன்றுகிறது.

‘இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட வீரர்களை இணைத்துக்கொண்டு உலக தரவரிசையில் தற்போது முன்னேறிவருகிறோம். எமது தற்போதைய இலக்கு தெற்காசிய கால்பந்தாட்டத்தில் சம்பியனாவதாகும். இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஒத்துழைப்புடன் அதற்காக அணியைத் தயார்படுத்தி வருகிறோம். எமது அடுத்த இலக்கு 2031 ஆசிய கிண்ணப் போட்டிக்கு தகுதிபெறுவதாகும். இதனிடையே இலங்கை கால்பந்தாட்ட அணியின் சிறந்த பெறுபேறுகளைக் கொண்டு இலங்கையை பெருமை அடையச் செய்வதில் நானும் எனது வீரர்களும் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம்’ என்றார்.

சைனீஸ் தாய்ப்பே போட்டிக்கு முன்பதாக தாய்லாந்தில் நடைபெற்ற புருணையுடனான சர்வதேச சிநேகபூர்வ போட்டியின்போது சுஜான் பெரேராவுக்கு பதிலாக கவீஷ பெர்னாண்டோ கோல்காப்பாளராக விளையாடி இருந்தார். அத்துடன்  அணியின் தலைவர் பதவி ஜெக் ஹிங்கேர்ட்டிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இது குறித்து வழமையான அணித் தலைவர் சுஜான் பெரேராவிடம் கேட்டபோது,

‘இலங்கை குழாத்தில் இடம்பெறும் 23 வீரர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என எண்ணினோம். அதற்கு அமையயே புருணையுடனான போட்டியின்போது எமது அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. கவீஷ பெர்னாண்டோ சிறப்பாக புகளிடையே செயற்பட்டதுடன் ஜெக் ஹிங்கேர்ட் அணியை செவ்வணே வழிநடத்தி வெற்றிபெறச் செய்தார்.

இது எமக்கு மிகுந்த திருப்தியையும் நம்பிக்கையையும் கொடுத்துள்ளது. டி குழுவில் இடம்பெறும் மிகவும் பலம்வாய்ந்த தாய்லாந்துடனான போட்டியில் நாங்கள் திறமையாக விளையாடினோம்.

ஆனால், துரதிர்ஷ்டவமசாக ஒரு கோல் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தோம். தரவரிசையில் 166ஆவது இடத்தில் இருக்கும் சைனீஸ் தாய்ப்பே அணிக்கு எதிரான போட்டி எமது சொந்த மண்ணில், எமது இரசிகர்கள் முன்னிலையில் நடைபெறுவதால் எம்மால் சாதிக்க முடியும் என நம்புகிறேன்’ என்றார்.

இது இவ்வாறிருக்கு, இலங்கையுடனான போட்டி சவால் மிக்கதாக அமையும் எனவும் அப் போட்டியில் வெற்றிபெறுவதாக இருந்தால் கடுமையாக போராட வேண்டி வரும் எனவும் சைனீஸ் தாய்ப்பே பயிற்றுநர் செங் சிங் ஆன் தெரிவித்தார்.

‘அணிகளின் தரவரிசைகள் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அந்தந்த போட்டிகளில் திறமையாக விளையாடும் அணிகளே வெற்றிபெறும். கொழும்பில் விளையாடுவது எங்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால், எந்தவொரு சவாலையும் எம்மால் முறியடிக்க முடியும் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்’ என அவர் மேலும் கூறினார்.

இக் குழுவில் நான்காவது அணியாக இடம்பெறும் துர்க்மேனிஸ்தானை கடந்த மார்ச் மாதம் சந்தித்த சைனீஸ் தாய்ப்பே அப் போட்டியில் 1 – 2 என தோல்வி அடைந்தது. துர்க்மேனிஸ்தானை எதிர்வரும் அக்டோபர் மாதம் 9ஆம் திகதி இலங்கை சந்திக்கவுள்ளது.

இலங்கை குழாம்

சுஜான் பெரேரா (தலைவர்), கவீஷ பெர்னாண்டோ, மொஹமத் முர்சித், கெரத் கெலி, டிலொன் டி சில்வா, பரத் சுரேஷ் அன்தனி, ராகுல் சுரேஷ் அன்தனி, அனுஜன் ராஜேந்திரம், ராமையன் முத்துக்குமாரு, சமுவெல் டுரன்ட், ஜேசன் தயாபரன், வேட் டெக்கர், லியோன் பெரெரா, ஜெக் ஹிங்கர்ட், குளோடியோ கமேர்க்னெச், மொஹமத் தில்ஹம், மொஹம்மத் ஹஸ்மீர், பைஸர் மொஹமத் அமான், சலன சமீர, ஸ்டீவன் சகாயராஜி, வசீம் ராஸீக், ஒலிவர் கெலார்ட், ஆதவன் ராஜமோகன்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More