செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 3ஆவது ஆசிய இளையோர் விளையாட்டு விழாவுக்காக அதிளவிலான வீரர்களை இலங்கை களம் இறக்குகிறது

3ஆவது ஆசிய இளையோர் விளையாட்டு விழாவுக்காக அதிளவிலான வீரர்களை இலங்கை களம் இறக்குகிறது

2 minutes read

பாஹ்ரெய்னில் இந்த மாதம் நடைபெறவுள்ள 3ஆவது ஆசிய இளையோர் விளையாட்டு விழாவில் அதிகளவிலான பதக்கங்களை வென்று இலங்கைக்கு பெருமை தேடிக்கொடுக்கும் குறிக்கொளுடன் 100 வீர, வீராங்கனைகள் பங்குபற்றவுள்ளனர்.

பாஹ்ரெய்னின், மனாமா நகரில் அக்டோபர் 22ஆம் திகதி முதல் 31ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இவ் விளையாட்டுவிழாவில் இலங்கை உட்பட 42 ஆசிய நாடுகளைச் சேர்ந்த வீர, வீராங்கனைகள் தங்களது ஆற்றல்களை வெளிப்படுத்தவுள்ளனர்.

இலங்கை சார்பாக 56 வீரர்களும் 44 வீராங்கனைகளும் 12 வகையான விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர்.

மெய்வல்லுநர், பட்மின்டன், 3 x 3 கூடைப்பந்தாட்டம், குத்துச்சண்டை, ஈஸ்போர்ட்ஸ், கோல்வ், கபடி, நீச்சல், டய்க்வொண்டோ, கடற்கரை கரப்பந்தாட்டம், பளுதூக்குதல், மல்யுத்தம் ஆகிய 12 போட்டிகளிலேயே இலங்கை வீர, வீராங்கனைகள் போட்டியிடவுள்ளனர்.

இப் போட்டிகளில் பங்குபற்றும் 100 பேரும் பதக்கங்கள் வெல்லக்கூடியவர்கள் என இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் தெரிவித்தார்.

ஆசிய இளையோர் விளையாட்டு விழாவில் பங்குபற்றும் இலங்கை குழாம் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடக மாநாடு விளையாட்டுத்துறை அமைச்சின் டன்கன் வைட் கேட்போர்கூடத்தில் நேற்று சனிக்கிழமை (11) முற்பகல் நடைபெற்றது.

ஊடக சந்திப்பில் பேசிய தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் சுரேந்திரன் (சுரேஷ்) சுப்ரமணியம், ‘ஆசிய இளையோர் விளையாட்டு  விழா  12 வருடங்களுக்குப் பின்னர் ஆசிய ஒலிம்பிக் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் இந்த விழா முழு ஆசியாவுக்கும் குறிப்பாக இலங்கைக்கு மிகவும் பெறுமதிவாய்ந்த நிகழ்ச்சியாக அமையவுள்ளது. ஏனெனில்  பங்குபற்றும் வீரர்களுக்கு   முன்னேற்றப்பாதையில் செல்வதற்கான அடித்தளமாக இந்த விளையாட்டு விழா அமையும் என்பது நிச்சயம். மேலும் அடுத்த வருடம் இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழா நடைபெறவுள்ளதால் அவ் விளையாட்டு விழாவில் பங்குபற்றுவதற்கான தகுதியைப் பெறுவதற்கு ஆசிய இளையோர் விளையாட்டு விழா அத்தளமாக அமையவுள்ளது. எனவே இலங்கை வீர, வீராங்கனைகள் இதனைக் கருத்தில் கொண்டு அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்துவார்கள் என நம்புகிறேன். அதனைத் தொடர்ந்து ஆசிய விளையாட்டு விழா, பொதுநலவாய விளையாட்டு விழா என்பன அடுத்த வருடம் நடைபெறவுள்ளது. அவற்றை குறிவைத்து இளம் விளையாட்டு வீரர்கள் ஆற்றல்களை வெளிப்படுத்தி முன்னோக்கி நகரவேண்டும்.

‘இளம் வீரர்கள் தங்களிடம் உள்ள குறைகளை திருத்திக்கொண்டு படிப்படியாக முன்னேற முயற்சிக்க வேண்டும். இளம் வீரர்களை சிறந்த குணாம்சங்களைக் கொண்டவர்களாக வளர்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம். வெற்றிபெறுவது முக்கியம் அல்ல. ஆனால், எவ்வளவு நேர்மையாக பங்குபற்றி வெற்றிபெறுகிறோம் என்பதுதான் முக்கியம். இந்தப் போட்டியில் பங்குபற்றும் நாங்கள் அனைவரும் ஒரே இலங்கை அணியினர் என்ற சிந்தையுடன் பங்குபற்றி தாய்நாட்டிற்கு பெருமை தேடிக்கொடுக்கவேண்டும். ஒவ்வொருவரும் அரங்கிலும் சரி அரங்குக்கு வெளியேயேயும் சரி ஒருவருக்கொருவர் உதவியாகவும் ஒத்தாசையாகவும் இருந்து ஊக்குவிக்கவேண்டும்’ என்றார்.

மூன்றாவது ஆசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றும் விளையாட்டு விரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான முழுச் செலவையும் விளையாட்டுத்துறை அமைச்சு ஏற்றுள்ளதாகத் நன்றிப் பெருக்குடன் தெரிவித்த சுரேஷ் சுப்ரமணியம், ஆடை அனுசரணையாளர்களான லொவி மற்றும் கார்னேஜ் நிறுவனங்களுக்கும் தனது நன்றிகளை வெளியிட்டார்.

இம்முறை ஆசிய இளையோர் விளையாட்டு விழாவில் இலங்கைக்கு எத்தனை பதக்கங்கள் வெல்லக்கூடியதாக இருக்கும் என ஒலிம்பிக் குழுத் தலைவர் சுரேஷ் சுப்ரமணியத்திடம் ‘வீரகேசரி’ வினவியபோது,

‘100 பதக்கங்களுக்காகவே நாங்கள் 100 பேரை அனுப்புகிறோம். யாரையும் தனித்து குறிப்பிட்டு அவர்களுக்கு அழுத்தங்களைக் கொடுக்க விரும்பவில்லை. அனைவரும் பதக்கங்கள் வெல்லக்கூடியவர்களே. போட்டிகள் நடைபெறும் தினங்களில் அவர்கள் அர்ப்பணிப்புடனும் விடாமுயற்சியுடனும் பங்குபற்றினால் அவர்களால் பதக்கங்களை வென்று இலங்கைக்கு பேருமை சேர்த்துக்கொடுக்கமுடியும் என நம்புகின்றேன்’ என பதிலளித்தார்.

இது இவ்வாறிருக்க, ஆசிய இளையோர் விளையாட்டு விழாவில் இலங்கையின் தேசிய கொடியை ஏந்திச் செல்லும் பாக்கியம் வித்யார்த்த பல்கலைக்கழக கல்லூரியைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் ஜனிந்து தனஞ்சய, வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையைச் செர்ந்த நீளம் பாய்தல் மற்றும் முப்பாய்ச்சல் வீராங்கனை டிலினி நெத்சலா ராஜபக்ச ஆகியோருக்கு கிடைத்துள்ளது.

வீரர்கள், பயிற்றுநர்கள், வைத்தியர்கள், அதிகாரிகள் அடங்கலாக இலங்கை குழாத்தினர்  இன்னும் சில தினங்களில் பாஹ்ரெய்ன் நோக்கிப் பயணமாகவுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More