இந்து கல்லூரி கொழும்பு, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி ஆகிய வரலாற்றுப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான 15ஆவது இந்துக்களின் சமர் என அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டி கொழும்பு பி. சரவணமுத்து ஓவல் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை (13) காலை வெகு விமரிசையாக ஆரம்பமானது.
இந்து கல்லூரி கொழும்புவின் 75ஆவது ஆண்டு வைர விழாவை சிறப்பிக்கும் வகையில் இம்முறை போட்டி மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்து கல்லூரி கொழும்புவின் அதிபர் இளையதம்பி இளங்கேஸ்வரன், யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் அதிபர் ரத்தினம் செந்தில்மாறன் ஆகியோரின் இணைத் தலைமையில் இந்த ஆரம்ப நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இன்றைய ஆரம்ப நிகழ்வில் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ். அச்சுதன் பிரதம விருந்தினராகவும் இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் அரவிந்த டி சில்வா, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் கௌரவ பொருளாளர் சுஜீவ கொடலியத்த ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.
காலை 08:30 மணி அளவில் ஆரம்பமான இந் நிகழ்வில், பாடசாலை வாத்திய இசைக் குழுக்களின் அணிவகுப்புடன் விருந்தினர்கள் மற்றும் இரு அணி வீரர்களும் மைதானத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
இந் நிகழ்வின்போது தேசியக் கொடி, இரண்டு பாடசாலைகளின் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டு, தேசியக் கீதம் மற்றும் பாடசாலைக் கீதங்கள் இசைக்கப்பட்டு போட்டிகள் சம்பிரதாயபூர்வமாக தொடக்கி வைக்கப்பட்டது.

ஜனசக்தி லைஃப் நிறுவனத்தின் பிரதான அனுசரணையுடன் இந்துக்களின் சமர் இரண்டு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.
பொட்டி தொடங்குவதற்கு முன்னர் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா, இரண்டு அணிகளினது வீரர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்
இந்தப் போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 102 ஓட்டங்களைப் பெற்றது.
ரவிந்திரன் ஆதித்தியன் 31 ஓட்டங்களையும் தினேஸ்ரேமன் பிரீத்திகன் 26 ஓட்ங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் விஸ்வநாதன் யுவராஜ் 33 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் அணித் தலைவர் ராமநாதன் தேஷ்கர் 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் திவாகரன் யாதவ் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இப் போட்டியைக் கண்டுகளிக்க இரண்டு பாடசாலைகளினதும் பழைய மாணவர்கள், தற்போதைய மாணவர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் பெருமளவில் திரண்டு தமது அணிகளை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.



