செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் தடுமாறிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு முதலாவது தோல்வி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் தடுமாறிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு முதலாவது தோல்வி

2 minutes read

ஹைதராபாத் உப்பல், ரஜிவ் காந்தி சர்வதேச விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (13) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை 56 ஓட்டங்களால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இலகுவாக வெற்றிகொண்டது.

அணித் தலைவர் இஷான் கிஷான் குவித்த அதிரடி அரைச் சதம், ஹென்றி க்ளாசனின் திறமையான துடுப்பாட்டம், நிட்டிஷ் குமார் ரெட்டி, சலில் அரோரா ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்கள், ப்ராஃபுல் ஹிங்கே, சக்கிப் ஹுசெய்ன் ஆகியொரின் அற்புதமான பந்துவீச்சுகள் என்பன சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

 

 

இந்த வருட ஐபிஎல் இல் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் வெற்றியீட்டிய ராஜஸ்தான் றோயல்ஸ் 5ஆவது போட்டியில் முதலாவது தோல்வியைத் தழுவியது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 216 ஓட்டங்களைக் குவித்தது.

அபிஷேக் ஷர்மா (0), டிம் டெவிட் (18) ஆகிய இருவரும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு நெருக்கடியைக் கொடுத்தது.

ஆனால், இஷான் கிஷான், ஹென்றிச் க்ளாசன் ஆகிய இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 3ஆவது விக்கெட்டில் 39 பந்துகளில் 98 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர்.

இஷான் கிஷான் 44 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 91 ஓட்டங்களையும் ஹென்றிச் க்ளாசன் 28 பந்துகளில் ஒரு பவுண்டறி, 3 சிக்ஸ்களுடன் 40 ஓட்டங்களையும் விளாசினர்.

தொடர்ந்து நிட்டிஷ் குமார் ரெட்டி 4 சிக்ஸ்களுடன் 28 ஓட்டங்களையும் சலில் அரோரா 2 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

மேலும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கடைசி 5 ஓவர்களில் 62 ஓட்டங்களைக் குவித்து தன்னைப் பலப்படுத்திக்கொண்டது. இது ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

பந்துவீச்சில் ஜொவ்ரா ஆச்சர் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் மிக மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 19 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 159 ஓட்டங்ளைப் பெற்று தோல்வி அடைந்தது.

அதரடிக்கு பெயர்பெற்ற வீரர்களைக் கொண்ட ராஜஸ்தான் றோயல்ஸ் முதல் 3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து வெறும் 9 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

ப்ராஃபுல் ஹிங்கே தனது முதல் இரண்டு ஓவர்களில் 6 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தி ராஜஸ்தான் றோயல்ஸ் அணியைத் திக்குமுக்காட வைத்தார்.

தனது கன்னி ஐபிஎல் போட்டியில் விளையாடும் ப்ராஃபுல் ஹிங்கே முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் வைபவப் சூரியவன்ஷியையும் 4ஆவது  பந்தில்   த்ருவ் ஜுரெல்லையும் கடைசிப் பந்தில் ஹுவான் ட்றே ப்ரிட்டோரியஸையும் களம் விட்டகழச் செய்தார். அவர்கள் மூவரும் ஓட்டம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் 18 வருட  ஐபிஎல்  வரலாற்றில் ஆரம்ப ஓவரில் 3 விக்கெட்களை வீழ்த்திய முதலாவது வீரர் என்ற சாதனையை ப்ராஃபுல் ஹிங்கே படைத்தார்.

இரண்டாவது ஓவரில் யஷஸ்வி ஜய்ஸ்வால் ஒரு ஓட்டத்துடன் சக்கிப் ஹுசெய்னின் பந்து விச்சில் ஆட்டம் இழந்தார்.

ப்ராஃபுல் ஹிங்கேயின் இரண்டாவது ஓவரின் கடைசிப் பந்தில் ரியான் பரக் 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (9 – 5 விக்.)

ரவிந்த்ர ஜடேஜா, டொனவன் ஃபெரெய்ரா ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி ஐபிஎல் வரலாற்றில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கையான 49 ஓட்டங்களைக் கடக்க ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு உதவினர்.

தொடர்ந்து றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக ராஜஸ்தான் றோயல்ஸ் பெற்ற 58 ஓட்டங்கள் என்ற குறைந்த மொத்த எண்ணிக்கையையும் கடக்க அவர்கள் இருவரும் உதவினர்.

அவர்கள் இருவரும் 6ஆவது விக்கெட்டில் 72 பந்துகளில் 122 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது டொனவன் ஃபெரெய்ராவின் விக்கெட்டை ஷக்கிப் ஹுசெய்ன் வீழ்த்தினார்.

டொனவன் ஃபெரெய்ரா 44 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 69 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரை தொடர்ந்து ரவிந்த்ர ஜடேஜா 45 ஓட்டங்களுடன் ஏஷான் மாலிங்கவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

பின்வரசையில் துஷார் தேஷ்பாண்டே அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 3 சிக்ஸ்களுடன் 25 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கடைசியாக ஆட்டம் இழந்தார்.

அவரது விக்கெட்டையும் ஏஷான் மாலிங்க வீழ்த்தினார்.

 

 

பந்து வீச்சில் ப்ராஃபுல் ஹிங்கே 34 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் சக்கிப் ஹுசெய்ன் 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஏஷான் மாலிங்க 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.