செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ராஜஸ்தானின் சூரியவன்ஷி 29 பந்துகளில் குவித்த 97 ஓட்டங்கள் ஹைதராபாத்தை நொக் அவுட் செய்தது

ராஜஸ்தானின் சூரியவன்ஷி 29 பந்துகளில் குவித்த 97 ஓட்டங்கள் ஹைதராபாத்தை நொக் அவுட் செய்தது

2 minutes read

நியூ சண்டிகார் சர்வதேச விளையாட்டரங்கில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ஐபிஎல் நீக்கல் போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் இளம் புயல் வைபவப் சூரியவன்ஷி சில சாதனைகளுடன் 29 பந்துகளில் குவித்த 97 ஓட்டங்கள் சன்ரைசர்ஸ் ஹைதராபத் அணியை நொக் அவுட் செய்தது.

அப் போட்டியில் 47 ஓட்டங்களால் வெற்றியீட்டிய ராஜஸ்தான் றோயல்ஸ்  அணி   வெள்ளிக்கிழமை (29) நடைபெறவுள்ள இரண்டாவது தகுதிகாண் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்தாடவுள்ளது.

 

நீக்கல் போட்டியில் 12 சிக்ஸ்களை விளாசிய 15 வயதான வைபவ் சூரியவன்ஷி, ஜபிஎல் வரலாற்றில் தனி ஒரு அத்தியாயத்தில் அதிக சிக்ஸ்கள் குவித்த வீரர் என்ற அரிய சாதனை ஒன்றை நிலைநாட்டினார்.

இந்த வருட ஐபிஎல் இல் இதுவரை 15 போட்டிகளில் விளையாடிய வைபவ் சூரியவன்ஷி மொத்தமாக 65 சிக்ஸ்களை விளாசி, ஒரு  அத்தியாயத்தில் அதிக சிக்ஸ்கள் குவித்த வீரர் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரரானார்.

2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் அத்தியாயத்தில் கிறிஸ் கேல் மொத்தமாக குவித்த 59 சிக்ஸ்களே ஒரு அத்தியாயத்தில் தனி ஒருவரால் குவிக்கப்பட்ட அதிகூடிய சிக்ஸ்களுக்கான முந்தைய சாதனையாக இருந்தது.

கிறிஸ் கேல் 456 பந்துகளில் இந்த சாதனையை நிலைநாட்டினார். ஆனால். சூரியவன்ஷிக்கு 65 சிக்ஸ்களை விளாச வெறும் 266 பந்துகளே தேவைப்பட்டது.

அத்துடன் இந்த வருட ஐபிஎல் இல் மொத்தமாக 680 ஓட்டங்களைக் குவித்த சூரியவன்ஷி, ஒரு அத்தியாயத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற சாதனையை நிலைநாட்டியதுடன் அவரது ஸ்ட்ரைக் ரேட் வியத்தகு 242.85ஆக இருந்தது.

அத்துடன் ப்ளே ஓவ் போட்டி ஒன்றில் அதிக சிக்ஸ்கள் (12) விளாசிய வீரர் என்ற மற்றொரு சாதனையையும் அவர் நிலைநாட்டினார். மும்பை இண்டியன்ஸுக்கு எதிராக 2023இல் நடைபெற்ற ப்ளே ஓவ் போட்டியில் ஷுப்மான் கில் குவித்த 10 சிக்ஸ்களே ப்ளே ஓவ்வில் தனி ஒருவரால் விளாசப்பட்ட அதிகூடிய சிக்ஸ்களுக்கான முந்தைய சாதனையாக இருந்தது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ராஜஸ்தான் றோயல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 243 ஓட்டங்களைக் குவித்தது.

ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியவன்ஷி 97 ஓட்டங்களை விளாசியதுடன் யஷஸ்வி ஜய்ஸ்வாலுடன் 42 பந்துகளில் 125 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தார். சூரியவன்ஷியின் இன்னிங்ஸில் 5 பவுண்டறிகளும் அடங்கி இருந்தன.

ஜய்ஸ்வால் 29  ஓட்டங்களைப் பெற்றார்.

 

 

தொடர்ந்து த்ருவ் ஜுரெல் (21 பந்துகளில் 50), அணித் தலைவர் ரியான் பரக் (26) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மேலும் பலப்படுத்தினர்.

மத்திய வரிசையில் ரவிந்த்ர ஜடேஜா 12 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ப்ராபுல் ஹங்கே 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நிட்டிஷ் குமார் ரெட்டி 12 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ஷிவங் குமார் 19 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ஏஷான் மாலிங்க 40 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

244 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்த 196 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

முதல் 3 ஓவர்களுக்குள் ஜொவ்ரா ஆச்சரின் பந்துவீச்சில் அபிஷேக் ஷர்மா (0), இஷான் கிஷான் (33) ஆகிய இருவரும் ஆட்டம் இழந்ததால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பெரும் நெருக்கடிக்குள்ளானது.

தொடர்ந்து ரவிச்சந்த்ரன் சிம்ரன் (1), ட்ரவிஸ் ஹெட் (17), ஹென்றிச் க்ளாசன் (18) ஆகிய மூவரும் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர். (81 – 5 விக்.)

இந் நிலையில் மத்திய வரிசையில் நிட்டிஷ் குமார் ரெட்டி (38), சலில் அரேரா (35) ஆகிய  இருவரும் பொறுப்புடன் துடுப்பெடுத்தாடி அணியை மீட்டெடுக்க முயற்சித்தனர். ஆனால், அவர்களது முயற்சி கைகூடவில்லை.

பின்வரிசையில் ஷிவங் குமார் 27 ஒட்டங்களைப் பெற்றார்.

 

பந்துவீச்சில் ஜொவ்ரா ஆச்சர் 58 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரவிந்த்ர ஜடேஜா, சுஷாந்த் மிஷ்ரா ஆகிய இருவரும் தலா 21 ஓட்டங்களுக்கு தலா 2 விக்கெட்களையும் நண்ட்றே பேர்கர் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: வைபவ் சூரியவன்ஷி.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.