செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை தமிழர்களின் பிரச்சினையை 1965இல் ஏற்றுக்கொண்ட டட்லி செல்வா ஒப்பந்தம் | தீபச்செல்வன்

தமிழர்களின் பிரச்சினையை 1965இல் ஏற்றுக்கொண்ட டட்லி செல்வா ஒப்பந்தம் | தீபச்செல்வன்

3 minutes read

இலங்கை அரசியலில் வடக்கு கிழக்கில் தமிழ் மொழிப் பயன்பாட்டை ஏதுவாக்குதல் மற்றும் வட கிழக்கில் அரச நில பகிர்ந்தளிப்பில் தமிழ் மொழிபேசுவோருக்கே முன்னுரிமை வழங்குதல் என்பன  1965இல் முக்கிய பேசுபொருள் ஆனது ஏன் என்பதை நினைவுகொள்ளுவதற்கு மாத்திரமல்ல, நியாயப்படுத்துவதற்கும் டட்லி செல்வா ஒப்பந்தம் நடந்த நாள் உதவுகிறது.மீறப்பட்ட ஒரு ஒப்பந்தமாக, தோல்வியடைந்த ஒரு ஒப்பந்தமாக இருந்தாலும் அக் காலத்திலேயே ஈழ மக்கள் தங்கள் தேசம் குறித்துச் சிந்தித்தார்கள் என்ற வரலாற்றை இடித்துரைக்க உதவுகிறது.

இலங்கை 1948 இல் சுதந்திரம் அடைந்தபின்னர், பெரும்பான்மை இன ஆதிக்க அரசியல் மெதுவாக தலையெடுத்து, தமிழ் இனத்தின்  உரிமைகள் ஒடுக்கப்பட்டன. குறிப்பாக 1956 ஆம் ஆண்டு “சிங்களம் மட்டும்” சட்டம் கொண்டு வரப்பட்டபோது, தமிழ் மொழி அரசியல் மற்றும் நிர்வாகப் பயன்பாட்டிலிருந்து புறக்கணிக்கப்பட்டது.

திருப்புமுனையான நாள்

1965 மார்ச் 24 — இலங்கை அரசியல் வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக நினைவுகொள்ள வேண்டிய நாள். அன்றைய தினம் பிரதமராக இருந்த ட்ட்லி சேனநாயக்கவுக்கும் மற்றும் தமிழர் அரசியல் தலைவரான எஸ்.ஜே.வி. செல்வநாயகத்திற்கும் ஆகியோருக்கிடையில் நடந்தது தான் “டட்லி – செல்வா ஒப்பந்தம்”. இவ்வொப்பந்தம், நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட தமிழர் அரசியல், மொழி மற்றும் நில உரிமைக் கோரிக்கைகளுக்கு ஒரு அரசியல் அங்கீகாரமாக அமைந்தது என்பது நாம் நினைவுபடுத்த வேண்டிய வரலாறு.

இலங்கை 1948 இல் சுதந்திரம் அடைந்தபின்னர், பெரும்பான்மை இன ஆதிக்க அரசியல் மெதுவாக தலையெடுத்து, தமிழ் இனத்தின்  உரிமைகள் ஒடுக்கப்பட்டன. குறிப்பாக 1956 ஆம் ஆண்டு “சிங்களம் மட்டும்” சட்டம் கொண்டு வரப்பட்டபோது, தமிழ் மொழி அரசியல் மற்றும் நிர்வாகப் பயன்பாட்டிலிருந்து புறக்கணிக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட அதிருப்தி, தமிழர் அரசியல் இயக்கங்களை வலுப்படுத்தியது. இந்நிலையில், சமரசத்தை நோக்கி முன்னேற வேண்டிய அவசியம் சிங்கள தேசத்திற்கு ஏற்பட்டது.

ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்

அந்தத் தேவைக்கான ஒரு முயற்சியாகவே டட்லி – செல்வா ஒப்பந்தம் உருவானது. இவ்வொப்பந்தத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழியின் நிர்வாகப் பயன்பாட்டை உறுதிசெய்வது இருந்தது. அதாவது, அப்பகுதிகளில் வாழும் தமிழ் மக்களுக்கு தங்கள் மொழியில் அரசு சேவைகளைப் பெறும் உரிமை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இது மொழி சமத்துவமின்மை மற்றும் ஒடுக்குமுறை நிலவிய நிலையில், அச் சமத்துவத்தை நோக்கிய ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்பட்டது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழியே நிர்வாக மொழியாகவும் ஆவணங்கள் பதிவு செய்யும் மொழியாகவும் ஏற்கப்பட்டமை, வடக்கு – கிழக்கு நீதிமன்றங்களில் தமிழ் மொழி பாவிக்கப்பட உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவாதம் தரப்பட்டமை, பிரதேச ஆட்சிமுறை மன்றங்கள் தாபிக்கப்பட வேண்டும் என்று ஏற்கப்பட்டது. அவற்றிற்கடங்கலான விடயங்கள் இரு தலைவர்களாலும் பின்னர் நிர்ணயிக்கப்படவிருந்தமை, காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் காணிப்பங்கீடு சம்பந்தமாகப் பின்வரும் விடயங்கள் முக்கியமாகக் கருத்துக்கெடுக்க உடன்பாடு ஏற்பட்டமை ஆகிய விடயங்களும் அடங்கியிருந்தன.

நில உரிமை தொடர்பான பிரச்சினைகளிலும் இந்த ஒப்பந்தம் முக்கிய தீர்வுகளை முன்வைத்தது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் அரச நிலங்களை பகிர்ந்தளிக்கும் போது, அப்பகுதிகளில் வாழும் தமிழ் மொழி பேசும் மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டமை அக் காலத்தின் கொதி நிலைப் பிரச்சினைக்கு தீர்வு எட்டும் முயற்சியாக இருந்தது

காணி ஆக்கிரமிப்பும் தீர்மானமும்

அத்துடன், வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இருக்கும் அரசாங்க நிலங்கள் முதற்கண் அப்பிரதேசக் காணியில்லா குடியானவர்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும் என்றும் இரண்டாவதாக அவ்வாறு காணிபெற ஏற்றவர்கள் இல்லாத பட்சத்தில் வடக்கு – கிழக்கு வாழ் மக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றும்  மூன்றாவதாக நாட்டின் மற்றைய குடிமக்களுக்கு ஒதுக்கப்படலாம். ஆனால், முன்னுரித்து நாட்டில் வாழ் தமிழ் பேசும் மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்றும் முக்கிய அம்சங்கள் அதில் உள்ளடக்கப்பட்டன.

இதில், நில உரிமை தொடர்பான பிரச்சினைகளிலும் இந்த ஒப்பந்தம் முக்கிய தீர்வுகளை முன்வைத்தது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் அரச நிலங்களை பகிர்ந்தளிக்கும் போது, அப்பகுதிகளில் வாழும் தமிழ் மொழி பேசும் மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டமை அக் காலத்தின் கொதி நிலைப் பிரச்சினைக்கு தீர்வு எட்டும் முயற்சியாக இருந்தது. அத்துடன் இகவிகிதாசாரத்தை மாற்றும் அரசின் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிரான ஒரு பாதுகாப்பு முயற்சியாக இருந்தது. தமிழர் நில உரிமைகளை காக்கும் நோக்கத்துடன் உருவான இந்த விதி, அந்த காலகட்டத்தில் மிகுந்த அரசியல் முக்கியத்துவம் பெற்றது.

கிழித்தெறியப்பட்ட ஒப்பந்தம்

ஆனால், துரதிஸ்டவசமாக இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரவில்லை. பெரும்பான்மைப் பேரினவாத அரசியல் சக்திகளின் எதிர்ப்பால், இது செயல்படுத்தப்படாமல் கைவிடப்பட்டது. ஒப்பந்தம் கிழிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், தமிழர் உரிமைகள் மீதான நம்பிக்கையும் மேலும் சிதைந்தது. இதன் விளைவாக, தமிழர் இளைஞர்களிடையே அரசியல் ஏமாற்றம் பெருகியது. அதனால் அவர்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு அது வித்திட்டது.

இன்றுள்ள ஆட்சியாளர்கள், அதற்கு முன்பு இலங்கையில் ஆட்சி புரிந்த ஆட்சியாளர்கள் இந்த நிலையைக்கூட சிந்திக்க தயாரில்லை என்பது மிகப் பெரிய ஏமாற்றம் மட்டுமல்ல, ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்காமல் இன்னமும் இந்த நாட்டை பின்னோக்கித் தள்ளுகின்ற செயற்பாடும் ஆகும்.

டட்லி – செல்வா ஒப்பந்தம் நடைமுறைக்கு வராமை, இலங்கையின் பின்னைய காலத்தில் மோசமான அடக்குமுறைகளுக்கு இன்னமும் வழிவிட்டது. இலங்கைப் பேரினவாதிகள் அமைதியான வழியில் பேசி உரிமைகளைப் பகிர ஒருபோதும் இடமளிக்க மட்டார்கள் என்ற நம்பிக்கையற்ற சூழல் உருவாகிற்று. அத்துடன் தமிழ் மக்களை ஒப்பந்தங்கள் என்ற பெயரில் மாறி மாறி ஆட்சி செய்த சிங்கள அரசாங்கள் ஏமாற்றி வந்த மோசமான வரலாற்று அனுபவத்தைச் சந்திக்க வேண்டியதாகவும் இருந்தது. இவைகளும் ஈழத் தமிழ் மக்கள் தனிநாடு குறித்து வலுவாகச் சிந்திக்க காரணமாயின.

இன்றுள்ள ஆட்சியாளர்கள்…

இப்போது இந்த ஒப்பந்தத்தை நினைவுகொள்வது என்பது, தமிழ் மக்களின் உரிமைகள் அரசியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முக்கிய தருணமாக இது அமைந்தது என்பதால். ஆனால் இன்றுள்ள ஆட்சியாளர்கள், அதற்கு முன்பு இலங்கையில் ஆட்சி புரிந்த ஆட்சியாளர்கள் இந்த நிலையைக்கூட சிந்திக்க தயாரில்லை என்பது மிகப் பெரிய ஏமாற்றம் மட்டுமல்ல, ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்காமல் இன்னமும் இந்த நாட்டை பின்னோக்கித் தள்ளுகின்ற செயற்பாடும் ஆகும். இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கான தீர்வும் இனப்பிரச்சினைக்கான தீர்வும் ஒன்றுதான். அதுவே இலங்கையின் அமைதிக்கான வழியுமாகும்.

Courtesy: தீபச்செல்வன்

நன்றி – ஐபிசி தமிழ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.