செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஐரோப்பா இரு தலைமுறைகளின் மிகுதிறன் | ஜெர்மனியில் தந்தை மகனின் ஓவியக் கண்காட்சி

இரு தலைமுறைகளின் மிகுதிறன் | ஜெர்மனியில் தந்தை மகனின் ஓவியக் கண்காட்சி

3 minutes read

ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தில் அமைந்துள்ள எகிங் (Eching) நகரில் 09.06.2026 முதல் 26.08.2026 வரை ஓவியக் கண்காட்சி ஒன்று நடைபெற்று வருகிறது. “தமிழர் விழுமியங்களும் வாழிட நகர பிரதிபலிப்பும்” என்ற தலைப்பில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் தந்தையும் மகனும் ஆகிய இரு தலைமுறையினரின் 55 ஓவியப் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கண்காட்சியின் தொடக்க விழாவில், கண்காட்சி நடைபெறும் ASZ நிலையத்தின் துணை நிர்வாகி Barbara Hammcich உரையாற்றுகையில், தந்தையும் மகனும் இணைந்து ஓவியக் கண்காட்சி நடத்துவது மிகவும் அரிதான ஒன்றாகும் என்றும், இத்தகைய கண்காட்சியை தங்களது நிலையத்தில் நடத்துவதில் பெருமை அடைவதாகவும் தெரிவித்தார். மேலும், எல்லா வயதினரும் பார்வையாளர்களாகக் கலந்து கொண்டிருப்பது இக்கண்காட்சியின் சிறப்பம்சமாகும் என்றும் குறிப்பிட்டார். இந்த நிகழ்வை எகிங் கலாசார மையம் ஏற்பாடு செய்திருந்தது.

எகிங் கலாசார மையத்தின் ஆணையர் Sybille Schmidtchen தனது உரையில் ஜெர்மன் மொழியில் ஒரு பழமொழியைக் குறிப்பிட்டார். அதன் பொருள், “பிள்ளைகள் பெரும்பாலும் பெற்றோரின் திறமைகளைப் பெறுகின்றனர்” என்பதாகும். அதுபோலவே, இந்த ஓவியக் கலைத்திறனும் இக்குடும்பத்தில் மூன்றாவது தலைமுறையாகத் தொடர்ந்து வருவதாகவும் அவர் பாராட்டினார். எகிங் நகர மேயர் Michael Steigerwald அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்.

இந்த ஆரம்ப நிகழ்வில், உகாஷின் மழலையர் பள்ளி (Kindergarten) நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள், ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள், வகுப்பாசிரியர்கள், இதுவரை உகாஷிற்கு கால்பந்து பயிற்சி வழங்கிய அனைத்து பயிற்றுவிப்பாளர்களும், கால்பந்து கழக நிர்வாகிகள், பிரதிநிதிகள், தற்போதைய பாடசாலையின் ஓவிய ஆசிரியர், வகுப்பாசிரியர், தடகள விளையாட்டுக் கழக நிர்வாகிகள், பயிற்றுவிப்பாளர்கள், அப்பகுதி மக்கள், முன்சன் தமிழாலய நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தது நிகழ்வின் மற்றொரு சிறப்பாக அமைந்தது.

மீசாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற ஓவியர் கலாபூஷணம் பொன்னையா இராசகுலசிங்கம் (தேவர், மீசாலை) பல விருதுகளைப் பெற்ற புகழ்பெற்ற ஓவியர் ஆவார். அவரின் வழித்தோன்றலாக இந்த ஓவியக் கலைத்திறன் குடும்ப மரபாகத் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அவரது மகன் யுகேதர் இராசகுலசிங்கம் , இந்தியாவில் ஓவிய நுண்கலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர். 2009ஆம் ஆண்டு ஜெர்மனிக்குக் குடிபெயர்ந்த அவர், அந்நாட்டில் ஊடக வடிவமைப்புத் துறையில் பயிற்சி பெற்று, ஓவிய ஆசிரியராகவும் பல கண்காட்சிகளில் பங்கேற்கும் கலைஞராகவும் செயற்பட்டு வருகிறார்.

அவருடைய 14 வயது மூத்த மகன் யுகாஷ் யுகேதர் சிறுவயதிலிருந்தே ஓவியம் வரையத் தொடங்கினார். தந்தையின் வழிகாட்டுதலால் அவரது திறமை வேகமாக வளர்ந்தது. ஜெர்மனியில் சிறுவயதிலிருந்தே பல ஓவியப் போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ளார். வெறும் 11 வயதிலேயே தமிழர் பண்பாட்டை மையமாகக் கொண்ட ஓவியக் கண்காட்சியை முன்சன் தமிழாலயத்தின் தமிழர் திருநாள் விழாவில் நடத்தி பாராட்டைப் பெற்றிருந்தார்.

ஓவியத்துடன் இணைந்து, அவர் பியானோ இசைக் கலைஞராகவும், கால்பந்து மற்றும் தடகள வீரராகவும், வாசிப்புத் திறனும் எழுத்தாற்றலும் கொண்டவராகவும், தமிழ் மற்றும் ஜெர்மன் ஆகிய இரு மொழிகளிலும் சிறந்த ஆளுமையாக வளர்ந்து வருகின்றார்.

கண்காட்சியின் தொடக்க விழாவில் நிகழ்வைத் தொடங்கி வைக்க, யுகாஷின் இளைய சகோதரர் யுதிஷ் யுகேதர் திறமையான இசைக்கருவி வாசிப்பை வழங்கினார். தொடர்ந்து யுகாஷ் யுகேதர் பியானோ இசை நிகழ்ச்சியையும் வழங்கினார். அவர்களுடன் இணைந்து உறவினர் அக்சரன் ஜீவன் கிட்டார் இசையையும் வழங்கி நிகழ்வை மேலும் சிறப்பித்தார்.

கண்காட்சியில் எகிங் நகரின் முக்கியப் பகுதிகள், நீர்நிலைகள், பாரம்பரிய அடையாளங்கள் ஆகியவை இடம்பெற்றிருந்தன. அதேவேளை தமிழர் பண்பாட்டு அடையாளங்கள், கிராமங்களின் அழகு, கற்பக மரங்களான பனைத்தோப்புகள், விவசாய வாழ்க்கை, கடலோரக் காட்சிகள், காளையடக்கம், தைப்பொங்கல் போன்ற தமிழர் வாழ்வியலை பிரதிபலிக்கும் ஓவியங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

தந்தையும் மகனும் இணைந்து தமிழர் பாரம்பரியத்தையும் ஜெர்மனியில் வாழும் நகர வாழ்க்கையின் பிரதிபலிப்புகளையும் ஓவியங்கள் மூலம் வெளிப்படுத்தியிருந்தனர். யுகாஷ் யுகேதர் தனது உரையில், தன் ஓவியங்கள் தாயகத்திலும் வாழிட நகரத்திலும் கால ஓட்டத்தில் மாறிவரும் இயற்கை தோற்றங்களை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளன என்று குறிப்பிட்டார்.

கண்காட்சியின் முக்கிய நிகழ்வாக நேரடி ஓவிய ஆற்றுகையும் நடைபெற்றது. பார்வையாளர்களின் விருப்பத்திற்கேற்ப, அவர்களின் முன்னிலையில் ஆல்ப்ஸ் பனிமலைத் தோற்றத்தை வரைந்து காட்டினர். அந்த ஓவியம் பின்னர் ஏலத்தில் வைக்கப்பட்டு 1000 யூரோ பெறுமதிக்கு விற்கப்பட்டது.

அந்த ஓவியத்தை SpicyBayer நிறுவனத்தின் குலதீபன் குலசேகரம் அவர்கள் வாங்கினார். கிடைத்த தொகையில் 500 யூரோ யுகாஷ் யுகேதர் உறுப்பினராக உள்ள TSV எகிங் இளைஞர் கால்பந்து கழகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

மீதமுள்ள 500 யூரோ எகிங் கலாசார மையத்திற்கும் நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த செயல், கலை சமூகத்திற்கும் இளைஞர் வளர்ச்சிக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகப் பாராட்டப்பட்டது.

இவ்வோவியக் கண்காட்சி இரு தலைமுறைகளின் கலைத்திறனை மட்டுமல்லாது, தமிழர் விழுமியங்களையும் பவேரியாவில் வாழும் தமிழர்களின் புதிய வாழ்வியல் அனுபவங்களையும் இணைக்கும் ஒரு பண்பாட்டு பாலமாக அமைந்துள்ளது.

கண்காட்சி குறித்து ஜெர்மனியின் ‘மெர்கூர்’ (Merkur) நாளிதழின் பிரைசிங் (Freising) பிராந்தியப் பதிப்பில் சிறப்புச் செய்தி வெளியாகியுள்ளது. மேலும், இரண்டு உள்ளூர் நாளிதழ்களிலும் இந்தக் கண்காட்சி தொடர்பான செய்திகளும் பாராட்டுக் குறிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.

கலைஞர்களின் படைப்பாற்றல் மட்டுமன்றி, தமிழர் பண்பாட்டு மரபுகளையும் ஜெர்மனிய சமூகத்தின் வாழ்வியலுடனும் இணைத்துக் காட்டிய முயற்சியாக இந்தக் கண்காட்சி மதிப்பிடப்பட்டுள்ளது. பவேரியாவில் வாழும் தமிழ் சமூகத்தின் பண்பாட்டு அடையாளத்தையும், புதிய தலைமுறையின் கலைத் திறமையையும் உலக அரங்கில் அறிமுகப்படுத்திய நிகழ்வாக இது அமைந்துள்ளது.

இந்தக் கண்காட்சி, தந்தை–மகன் என்ற இரு தலைமுறைகளின் கலைப் பயணத்தை ஒரே மேடையில் இணைத்ததன் மூலம், கலை என்பது தலைமுறைகளைத் தாண்டி தொடரும் ஒரு மரபு என்பதையும், அது பண்பாடு, நினைவு மற்றும் அடையாளங்களைப் பாதுகாக்கும் வலிமையான ஊடகமாகவும் விளங்குகிறது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.

குறிப்பாக, தமிழர் பாரம்பரியக் கூறுகளும், ஜெர்மனியின் இயற்கைக் காட்சிகளும், நகர வாழ்க்கையின் பிரதிபலிப்புகளும் ஒரே ஓவிய மொழியில் இணைக்கப்பட்டிருப்பது பார்வையாளர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கலை வழியாக பல்வேறு பண்பாடுகளுக்கிடையில் உரையாடலை உருவாக்கும் இந்த முயற்சி, ஜெர்மனிய கலைச் சமூகத்தினராலும் பாராட்டப்பட்டுள்ளது.

நேரடி ஓவிய ஆற்றுகை, இசை நிகழ்ச்சிகள், ஓவிய ஏலம் மற்றும் அதன் மூலம் சமூக அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் ஆகியவை இந்தக் கண்காட்சியை ஒரு சாதாரண கலை நிகழ்வாக அல்லாமல், சமூகப் பொறுப்புணர்வும் பண்பாட்டு பரிமாற்றமும் கொண்ட நிகழ்வாக மாற்றியுள்ளன.

இந்த ஓவிய ஆற்றுகை நிகழ்வு மீண்டும் ஒரு அமர்வாக, தமிழ் உறவுகளுடன் இணைந்து எதிர்வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் புதிய ஓவியங்கள், நேரடி கலை நிகழ்வுகள் மற்றும் பார்வையாளர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.