June 2, 2023 12:04 pm

ரணிலின் ஆக்கிரமிப்பு முகம்தான் ஆபத்தானது | தீபச்செல்வன்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

 

கட்டுரையாளர் – தீபச்செல்வன்

ரணில் ஆட்சிக்கு வந்தால் தேனும் பாலும் ஓடும் என்று நம்புகிற ஒரு அப்பாவித் தனத்தை அரசியலில் காண்கிறோம். அதைப் போலவே ரணில் மிகவும் நல்லவர், எந்த கேடும் செய்ய மாட்டார் என்று நம்புகிற நிலைமையும் இருக்கிறது. இது வடிவேலு பாணியில் சொன்னால், வெள்ளையாய் இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்று நம்புகிற அப்பாவிக் கணக்கு மாதிரித்தான். ஆனால் ரணிலின் வெள்ளை சிரிப்புக்கு பின்னால் பல குருதி படிந்த கதைகள் மறைந்திருக்கின்றன. அது கோத்தபாய ராஜபக்ச அல்லது மகிந்த ராஜபக்சவுக்கு பின்னால் உள்ள கதைகளுக்கும் கறைகளுக்கும் சற்று குறைந்தவையாகவோ, கூடியவையாகவோ இருக்கலாம். ஆனால் தமிழர் தேசத்தைப் பொறுத்த வரையில் ராஜபக்சகளின் அநீதிகளைவிட ரணில்களின் அநீதிகள் குறைந்தவையல்ல.

பசுவைக் கொன்ற கொடுமை

கடந்த வாரம் மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனை பகுதியில் பசுக்கன்று ஒன்று சுட்டுக் கொல்லப்பட்டுக் கிடந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் தமது கால்நடைகளுக்காக வைத்திருந்த மேய்ச்சல் தரைப் பகுதியில் சிங்களக் குடியேற்றம் ஒன்று முன்னெடுப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. அதன் ஒரு அங்கமாகக்தான் இந்தப் பசுக்கன்று கொல்லப்பட்டுள்ளது. தாய் இல்லாத குழந்தைக்கு பால் கொடுக்கும் பசுவைக் கொல்வது மனிதரைக் கொல்வதைவிட பாவம் என்று சைவர்கள் நம்புகின்றனர். பசுவை கொல்வது மனிதர்களை அழிப்பதற்கு முந்தைய ஒடுக்குமுறை ஒன்றும் சொல்லப்படுவதுண்டு. அத்துடன் பசுவதை என்பது தமிழ் சமூகத்தில் தெய்வ நிந்தனைக்கு ஒப்பான பாவமாக கருதப்படுகிறது.

இந்த விடயம் குறித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனத்தை ஏற்படுத்தி உள்ளனர். மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனை பகுதியில் தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து அங்கு சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ள ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் ஒரு அங்குலம் நிலத்தையும்  இழக்க இடமளிக்க முடியாது என்று மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறி இருக்கிறார். அத்துடன் சமாதான முகத்தை காட்டும் ரணிலின் ஆக்கிரமிப்பு முகம்தான் இதுவென்று அவர் பேசியிருப்பது இங்கு முக்கியமானது.

தமிழ் மக்களின் இனப்படுகொலை வரலாற்றில் அதிக கேடுகளை நிகழ்த்துவதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் போட்டி போட்டு அநியாங்களை அரங்கேற்றி இருக்கிறது. அதில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில்தான் ஈழத் தமிழ் மக்களின் நிலங்கள் அதிகளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக கிழக்கு மாகாணத்தை சூறையாடுவதில் ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் மூத்த தலைவரான ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் கடும் ஆக்கிரமிப்பு திட்டம் கொண்டு செயலாற்றியவர்கள். அந்த வழியைத்தான் ஜே.ஆரின் பேரன் ரணில் தொடர்கின்றார்.

எல்லைமீதான ஆக்கிரமிப்பு

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளை திட்டமிட்டு சிங்கள மயப்படுத்தும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. நாளும் பொழுதும் அங்கு மெல்ல மெல்ல குடியேற்றங்கள் செய்யப்படுகின்றன. மெல்ல மெல்ல தமிழ் நிலத்தின் வனங்கள் அழிக்கப்பட்டு குடும்பங்கள் குடியேறப்படுகின்றன. வடக்கு கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றத்தை ராஜபக்சவினரின் படங்களுடன் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பை நிறைவேற்றும் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கள செயற்படுகின்றமைதான் இன்றைய அதிர்ச்சி தகவலாகும்.

ஸ்ரீலங்கா அரசு பொருளாதார நெருக்கடியில் சிக்கி இப்போதுதான் இலேசாக மூச்செடுத்து வருகின்றது. தமிழ் மக்கள்மீதான ஒடுக்குமுறைகளை தவிர்க்க வேண்டும் என்பது சர்வதேசத்தின் மறைமுக நிபந்தனையாக இருக்கிறது. அத்துடன் தமிழர் விடயங்கள் சார்ந்து பல பரிந்துரைகளை சர்வதேச நாடுகள் முன் வைத்தும் இருக்கின்றன. அதேவேளை ஐக்கிய நாடுகள் சபையில் 52ஆவது கூட்டத் தொடர் நடந்து வருகின்றது. அதில் இலங்கை விவகாரங்களும் பேசு பொருள் ஆகியிருக்கும் நிலையில், இலங்கை மீண்டும் பொறுப்புக் கூறுவோம் என்றும் சர்வதேசத்தின் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்றும் கதைவிட்டுக் கொண்டிருக்கும் தருவாயில்தான் இந்த ஆக்கிரமிப்பு நடக்கிறது.

அகலாத ஆக்கிரமிப்பும் தணியாத தாகமும்

கடந்த சில மாதங்களின் முன்னர் வடக்கிற்கு வந்த ரணில் விக்கிரமசிங்க வடக்கின் பிரச்சினையை தீர்ப்பேன் என்று பேசி இருந்தார். அதில் தமிழ் அரசியல் தலைவர்களையும் அழைத்திருந்தார். வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பிரச்சினையை வடக்குடன் சுருக்குவது ரணிலின் தந்திரம் என்பதை அன்றைய சூழலில் சுட்டிக்காட்டினோம். ஸ்ரீலங்கா பாரிய பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்த சமயத்தில்கூட தமிழர்களின் அரசியல், தமிழர்களின் தாயக விடயத்தில் மிகவும் கூர்மையான ஆக்கிரமிப்பையும் ஒடுக்குமுறையையும் சிங்கள அரசு பின்பற்றித் தொடர்கிறது என்பதற்கு அந்த நிகழ்வு ஒரு சாட்சி.

அதேபோல அன்று வடக்கு கிழக்கில் தமிழர்களின் பிரச்சினையை தீர்ப்போம் என்றும் அதில் அக்கறை கொண்டுள்ளோம் என்றும் சொல்லுகின்ற ரணில் அரசு, வடக்கு கிழக்கில் இருந்து தமிழர்களை இல்லாமல் தீர்ப்பதையும் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்து தீர்ப்பதையும்தான் தீர்வாகக் கொண்டுள்ளார். இது கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச முன்னெடுத்த தமிழர் தேச ஒடுக்குமுறைக்கு ஒப்பானது. குருந்தூர் மலையில் கோத்தபாய ராஜபக்ச ஆட்சியில் வைக்கப்பட்ட அடிக்கல்லுக்கு ஸ்ரீலங்கா காவல்துறை இராணுவத்தின் பாதுகாப்பில் விகாரை அமைக்கப்பட்டுள்ளமைதான் ரணிலின் ஆட்சியின் ஆக்கிரமிப்பு முகமாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 52ஆவது கூட்டத் தொடர் நடக்கும் இந்த சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா அரசினது ஆக்கிரமிப்புக்களையும் குறிப்பாக ரணிலின் சிரித்த முகத்தின் பின்னால் உள்ள ஆக்கிரமிப்பு, அடையாள அழிப்பு மற்றும் ஒடுக்குமுறைகளை குறித்து கவனப்படுத்த வேண்டிய தேவை எமக்குள்ளது. இல்லையேல் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் ஈழத் தமிழ் மக்கள் இலங்கைத் தீவில் ஒடுக்கி அழிக்கப்பட்டு இல்லாமல் ஆக்கப்படுவார்கள். ராஜபக்சவினரின் அந்தக் கனவுகளை நிறைவேற்றுகிற அரசனாக ரணில் விக்கிரமசிங்க இருப்பார். இந்த ஆபத்தினை குறித்து உரத்தும் பரந்தும்  ஒன்றுபட்டும் குரல் எழுப்புவதே எம் இருப்புக்கும் அடையாளத்திற்கும் போராட்டத்திற்கும் அவசியம்.

நன்றி- உரிமை மின்னிதழ்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்