செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை யாழ்ப்பாணக் கோட்டையிலே போர்த்துக்கேயர் | ஜூட் பிரகாஷ்

யாழ்ப்பாணக் கோட்டையிலே போர்த்துக்கேயர் | ஜூட் பிரகாஷ்

3 minutes read


“இந்த யாழ்ப்பாணக் கோட்டையிலே சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழனின் கொடி பறந்தது. அந்த கொடியை போர்த்துக்கேயர் பறித்தெடுத்தனர். ….. போர்த்துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தரும் ஒல்லாந்தரிடமிருந்தும் ஆங்கிலேயரும் கைப்பற்றிக் கொண்டனர். ஆங்கிலேயரிடமிருத்து சிங்களவர் கடைசியில் கைப்பற்றினர். அதாவது புலிக்கொடி பறக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை..” என்று திலீபன் 1987 வாக்கில் யாழ்ப்பாண கோட்டையின் வாசலடியில் கையில் மைக்கை பிடித்துக் கொண்டு முழங்கிய முழக்கம் எங்கள் வரலாற்றில் இடம்பிடித்துள்ள முக்கிய பேச்சுக்களில் ஒன்றாகும்.

1990 செப்டெம்பர் 26 இல், திலீபன் தியாகியான மூன்றாம் ஆண்டு நினைவுநாளில், திலீபன் கண்ட கோட்டையில் புலிக்கொடி பறக்கும் கனவு நனவாகியது.

1990 செப்டெம்பர் 26 இல், திலீபன் தியாகியான மூன்றாம் ஆண்டு நினைவுநாளில், திலீபன் கண்ட கோட்டையில் புலிக்கொடி பறக்கும் கனவு நனவாகியது. 1990 செப்டெம்பர் 26 இற்கு சில நாட்களிற்கு முன்னரே நான்கு மாதங்களாக முற்றுகைக்குள் சிக்குண்டிருந்த ஆமி, கோட்டையை விட்டு மண்டைதீவு பக்கமாக தப்பியோடி விட்டது என்றும், திலீபனின் நினைவு நாளை நினைவில் வைத்தே இயக்கம் கோட்டையில் கொடியேற்ற செப்டெம்பர் 26 வரை காத்திருந்ததாகவும் ஒரு கதை இருக்கிறது.

யாழ்ப்பாணக் கோட்டை இருக்கும் பண்ணைத்துறையில் தமிழ் மன்னர்களின் கோட்டை இருந்ததற்கான வரலாற்று சான்றுகள் இருந்ததாக தெரியவில்லை. யாழ்ப்பாண கோட்டையின் கதை 1619 இல் தமிழ் மன்னர்களின் கடைசி இராசதானியான நல்லூரை போர்த்துக்கேயர் முழுமையாக கைப்பற்றியதோடே தொடங்குகிறது.

1619 மே – ஜூன் காலப்பகுதியில் நல்லூர் இராசதானியை கைப்பற்றி நல்லூர் கந்தசுவாமி கோயில் இருந்த இடத்தில் தனது படை முகாமையும் நிர்வாக மையத்தையும் போர்த்துக்கேய தளபதி ஒலிவேரா அமைத்துக் கொள்கிறான். 1620-1621 காலத்தில், தோற்கடிக்கப்பட்டு கடல் கடந்து ஓடிய யாழ்ப்பாண மன்னனின் படைகள், தஞ்சாவூர் அரசனின் படைகளின் உதவியுடன் படையெடுத்து வந்து, போர்த்துக்கேயப் படைகளைத் தாக்கியும் கலவரங்களை ஏற்படுத்தியும் ஒலிவேராவிற்கு அலுப்பு தந்து கொண்டிருக்கிறான்.

யாழ்ப்பாண மன்னனின் தாக்குதல்களை முறியடித்திருந்தாலும், நல்லூரின் பாதுகாப்பின்மையை போர்த்துக்கேயர் உணருகின்றனர். அதனால், 1591 இல் நல்லூர் இராசதானியை கைப்பற்ற தங்களது படைகள் புறப்பட்ட பண்ணைத்துறையில் தாங்கள் அமைத்த புதுமை மாதா கோயிலைச் சுற்றி தங்களது தலைமையகத்தை இடம்மாற்ற போர்த்துக்கேயர் முடிவெடுத்தார்கள்.

மன்னாரில் இருந்து கிளாலி வழியாக தரைவழியாக படையெடுத்து வந்தே போர்த்துக்கேயரின் கோட்டையை முற்றுகையிட்டு யாழ்ப்பாணக் கோட்டையை கைப்பற்றினார்கள்.

யாழ்ப்பாணக் கோட்டை கட்ட முதல் போர்த்துக்கேயர் கட்டியிருந்த கோவா, கொழும்பு, திருகோணமலை, மட்டக்களப்பு, காலி, கோட்டைகள் நிலத்தில் இருந்து சற்று தள்ளியிருந்த சிறு தீவுகளிலோ, ஆறு அல்லது கடல் நீரேரிகளால் சூழப்பட்ட பகுதிகளிலோ அமைந்திருந்தது. யாழ்ப்பாணத்தில் கோட்டை கட்ட கோவாவில் இருந்த போர்த்துக்கேய தலைமைபீடத்தால் அனுமதி வழங்கப்பட்டதும், ஊர்காவற்றுரையில் கோட்டை கட்டுவதா பண்ணைத்துறையில் கட்டுவதா என்று ஆலோசிக்கப்பட்டே, இறுதியில் பண்ணைத்துறையில் கோட்டை கட்ட போர்த்துக்கேயர் முடிவெடுத்தார்கள்.

யாழ்ப்பாணத்தார் மிருதுவானவர்கள், கீழ்படிவானவர்கள், ஆனபடியால் யாழ்ப்பாணத்தார் தரைவழியாக படையெடுத்து வந்து தங்களை தாக்க மாட்டார்கள் என்று நம்பியே ஒரு பக்கம் மட்டும் கடலால் சூழப்பட்ட பண்ணைத்துறையில் போர்த்துக்கேயர் கோட்டை கட்டினார்கள் என்றும் கருதப்படுகிறது. யாழ்ப்பாணத்தார் மிருதுவானவர்கள், கீழ்படிவானவர்கள் என்பதால் தானோ என்னவோ 1619 இல் யாழ்ப்பாணத்தில் கோட்டை கட்ட போர்த்துக்கேயரின் கோவா பிராந்திய தலைமையகத்தில் இருந்து அனுமதி கிடைத்தும், 1625 இல் தான் ஆற அமர யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த போர்த்துக்கேயர் பண்ணைத்துறையில் கோட்டை கட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.

1625 இல் யாழ்ப்பாணக் கோட்டை கட்டுமாணம் தொடங்கி, பன்னிரெண்டு ஆண்டுகள் கடந்தும் வேலை முழுமையாக முடிவடையாமல் இழுபட்டு கொண்டு இருந்ததற்கும் மிருதுவான, கீழ்படிவான யாழ்ப்பாணத்தாரின் சுபாவமே பிரதான காரணமாகவும் இருந்திருக்கலாம்.ஆனால் இதில் ஆகப் பெரிய பகிடி என்னவென்றால், 1658 இல் ஒல்லாந்தர், மன்னாரில் இருந்து கிளாலி வழியாக தரைவழியாக படையெடுத்து வந்தே போர்த்துக்கேயரின் கோட்டையை முற்றுகையிட்டு யாழ்ப்பாணக் கோட்டையை கைப்பற்றினார்கள்.

யாழ்ப்பாணக் கோட்டை வெறும் கரும் கற்சுவர்களின் கட்டமைப்பு மட்டுமல்ல; அது தமிழ் மண்ணில் அந்நிய ஆக்கிரமிப்புக்களின் வடுவாய் நின்ற, நிற்கும் வரலாற்று சாட்சி.

கொழும்பு, காலி போன்ற நகரங்களில் பொருளாதார செயற்பாடுகளை பாதுகாக்கும் நோக்கில், இராணுவ, நிர்வாக மையங்களோடு வணிக மையங்களையும் உள்ளடக்கியே போர்த்துக்கேயரின் கோட்டை அரண்கள் கட்டப்பட்டன. ஆனால், யாழ்ப்பாணம் வணிக முக்கியத்துவம் கொண்டதல்ல என்று கருதப்பட்டதால், போர்த்துக்கேயரின் யாழ்ப்பாண கோட்டை மதில்களிற்குள் இராணுவ மற்றும் நிர்வாக மையங்கள் மட்டுமே இருந்தன.

போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தை ஆக்கிரமித்திருந்த காலப்பகுதியில் நடந்த மகா கொடுமை என்னவென்றால், பெப்ரவரி 1621 இல் பண்ணைத்துறைக்கு தங்களது முகாம்களை போர்த்துக்கேயர் இடம்மாற்றியதும், அதுவரை தாங்கள் தங்கியிருந்த நல்லூர் கந்தசுவாமி கோயிலை போர்த்துக்கேய தளபதி ஒலிவேரா இடித்து தரைமட்டமாக்கியது தான். தரைமட்டமாக்கப்பட்ட நல்லூர் கந்தசுவாமி கோயிலினதும், இடிக்கப்பட்ட பிற சைவக் கோயில்களினதும் கருங்கற்களை பாவித்தும் போர்த்துக்கேயர் யாழ்ப்பாணக் கோட்டையை கட்டியதாகவும் கருதப்படுகிறது.

யாழ்ப்பாணக் கோட்டை வெறும் கரும் கற்சுவர்களின் கட்டமைப்பு மட்டுமல்ல; அது தமிழ் மண்ணில் அந்நிய ஆக்கிரமிப்புக்களின் வடுவாய் நின்ற, நிற்கும் வரலாற்று சாட்சி. போர்த்துக்கேயரின் படைபலத்தால் எழுந்த கோட்டை மதில்கள், நல்லூர் கந்தசுவாமி கோயிலின் இடிபாடுகளின் மீதான வலியையும் சுமந்தே நிற்கின்றன. நூற்றாண்டுகளாக மாறி மாறி அந்நியரிடம் கைமாறிய யாழ்ப்பாண கோட்டையில் 1990 செப்டெம்பர் 26 இல் பறந்த கொடி, திலீபனின் வார்த்தைகளுக்கு வரலாறு தந்த பதிலாய் அமைந்தது. ஆனால், யாழ்ப்பாண கோட்டையின் கதை இன்னும் முடியவில்லை. யாழ்ப்பாண கோட்டையின் கதை இன்றும் எங்கள் நினைவிலும் நிலத்திலும் பதிலற்ற பல கேள்விகளை தாங்கிய வரலாற்றின் சுவராகவே நிமிர்ந்து நிற்கிறது.​​​​​​​​​​​​​​​​

(தற்போது வாசிப்பில் இருக்கும் மயூரநாதனின் “யாழ்ப்பாண நகரத்தின் வளர்ச்சி வரலாறு (1621 – 1948)” புத்தகத்தில் இருக்கும் தரவுகளையும் படத்தையும் மையமாக வைத்து எழுதப்பட்டது.)

ஜூட் பிரகாஷ்
மெல்பேர்ண்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.