Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை காணாமல் ஆக்கப்பட்டோர் என்றொரு இனம் ஆவோம்: தீபச்செல்வன்

காணாமல் ஆக்கப்பட்டோர் என்றொரு இனம் ஆவோம்: தீபச்செல்வன்

4 minutes read

ஈழத் தமிழர்களின் இன விடுதலைப் போராட்டத்தை சிதைக்க நினைத்த சிங்கள அரசு அவர்களுக்கு இனப் பேரழிவை உண்டு பண்ணி, வரலாறு முழுதும் மீள முடியாத இனமாக ஆக்க நினைத்தது. ஈழப் போரின் இறுதியில் சிறிதும், தயக்கமின்றி ஈழத் தமிழ் இனத்தை வேட்டையாடியது சிங்கள அரசு. அதற்கான உலகின் இடமளிப்புத்தான் சரணடைந்தவர்களும்  கையளிக்கப் பட்டவர்களும் காணாமல் போய் விட்டனர் என்று கைவிரிக்கும் பெரும் தைரியத்தை சிங்கள அரசுக்கு கொடுத்தது.  இது ஈழத் தமிழ் இனத்தையே காணாமல் ஆக்கும் தைரியத்தையும் கொடுத்திருப்பதைதான் இந்த நாளில் உணர வேண்டும். 

இலங்கேஸ்வரன் என்பது இலங்கையை ஆண்ட தமிழ் மன்னர்களுக்கு சூட்டப்படும் பெயர் என்று வரலாற்று பத்தி எழுத்தாளர் கலாநிதி த. ஜீவராசா எழுதியிருந்தார். அந்த அடிப்படையில்தான் இராவணனை இலங்கேஸ்வரன் என்கிறோம். கம்பராமாயணமும் அப்படிச் சித்திரிக்கிறது. ஒரு காலத்தில் இலங்கேஸ்வரர்களாக ஈழத்தை ஆண்ட தமிழினம் பின்னர், சிறுபான்மை இனமானது. இலங்கையில் இரண்டு சம அந்தஸ்துள்ள நாடுகள் அமையக் கூடிய சூழல் பிரித்தானிய வெளியேற்றத்தின்போது ஏற்பட்ட போதும் நல்லிணக்கம் பேசி அவ் வாய்ப்பு தவறவிடப்பட்டது.

வடக்கு கிழக்கு சிறுபான்மை தமிழர்கள் ஆக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்கள், இன்றைக்கு வடக்கு தமிழர்கள் என்கின்ற அளவில் கிழக்கின் சிங்கள மற்றும் இஸ்லாமியவாதக் குடியேற்ற சூழல்கள் தள்ள முற்படுகின்றன. தமிழீழமே இன்றைக்கு சுருங்கிப் போயிருப்பதைப் போன்றதொரு தோற்றம் ஏற்படுத்தப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழீழம் குறித்து பேசும் ஒரு சிங்கள பேரினவாதிகூட வடக்கு கிழக்கிற்கு அதிகாரம் தரமாட்டோம் என்று சொல்லுவார். இன்று வடக்கிற்கு அதிகாரத்தை தர ஒரு போதும் இடமிளிக்கோம் என்று பேசப் பார்க்கிறார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இருந்த பெரும்பாலான நிலங்கள் இன்று காணாமல் ஆக்கப்பட்டுவிட்டன. எமது தலைமைகள் ஆளும் சிங்கள அரசை காப்பாற்றுகின்றன. மைத்திரிபால சிறிசேனவை ஆட்சியில் அமர்த்தினோம். அவரது ஆட்சியை தொடர்ந்து பாதுகாக்க உதவுகிறோம். சர்வதேசத்தை துணைக்கு அழைத்துவிட்டு, அதன் பிடியிலிருந்து தப்பவும் நாமே உதவிக் கொண்டிருக்கிறோம். மைத்திரியுடன் ரணிலுக்கு முரண்பாடு. ரணிலை நாம் காப்பாற்றுகிறோம். ரணில் அரசு இன்றைக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால்தான் காப்பாற்றப்பட்டிருக்கிறது.

ஒரு புறத்தில் தமிழ் தலைமைகளின் ஆதரவை பெற்றுக் கொண்டு மறுபுறத்தில் தமிழர்களின் உரிமைகளையும் பண்பாட்டு அம்மசங்களையும் திருடும் காணாமல் ஆக்கும் வேலையை சிங்கள அரசும் அதன் தலைவரும் பிரதமரும் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த நாளின் பெரும் சூத்திரதாரிகளும் இந்த நாளின் எதிரிகளுமே இலங்கை ஆட்சியாளர்களைப் போன்றவர்கள்தான். மணலாறு என்ற ஈழத் தமிழர்களின் பிரதேசத்தை காணாமல் ஆக்கி, வெலி ஓயா உருவாக்கப்பட்டது. இத்தகைய செயல்களுக்காகவே ஈழத் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடும் சூழலே ஏற்பட்டது.

ஆனால், இன்றைக்கு வந்து இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஆமையன் குளம் என்ற தமிழ் குளத்தை காணாமல் ஆக்கிவிட்டு, அதை சிங்களக் குளமாக்கி திறந்து வைத்துச் செல்கிறார். ஈழ இன விடுதலைக்கான போராட்டம் இலங்கை தீவில் நடந்தது. அதனை சிதைக்க தமிழ் இன அழிப்பை சிங்கள அரசு மேற்கொண்டது. இவ்வளவு நடந்த பின்னரும், வவுனியா ஒதியமலையை அண்டிய பகுதியில் நாளும் பொழுதும் ஒரு சிங்களக் குடி குடியேறிக் கொண்டிருக்கின்றது. யாரோ ஒரு பிக்கு வந்து புத்தர் சிலையுடன் குடி ஊன்றிக் கொண்டிருக்கிறார்.

செம்மலையில் இந்து ஆலய வளாகத்தை அடாத்தாக பிடித்து, பௌத்த சிங்களப் பிக்கு பாரிய புத்தர் சிலை கட்டி விகாரை அமைக்கிறார். வடக்கு கிழக்கில் ஆயிரம் இடங்களில் புத்தர் சிலைகளை அமைக்க ஜனாதிபதி சிறிசேனதான் திட்டம் தீட்டியவர். இதனால்தான் கன்னியாவில் பாரிய நெருக்கடி உருவாகியது. அங்குள்ள இந்து ஆலய நிலத்தில், விகாரை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நீதிமன்றத்தால் அந்த முயற்சி தடுக்கப்பட்டாலும் அரசாணைப்படியும் அதிகாரபூர்வமற்ற முறையிலும் குடியேற்ற முயற்சிகள் வேறு இடங்களில் நடந்துகொண்டு தான் இருக்கின்றன.

ஆகஸ்ட் 30 காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தினம். போர் முடிந்து பத்தாண்டுகள் ஆகின்றன. வருடம் தோறும் இந்த தினத்தை நினைவு கொள்கிறோம். போராட்டங்கள் செய்கின்றோம். தலைவர்கள் அறிக்கைகளை விடுகின்றனர். எழுத்தாளர்கள் கட்டுரைகளை எழுதுகிறோம். கவிஞர் கவிதைகளை எழுதுகிறோம். இந்தப் பத்தாண்டுகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயத்தில் என்ன முன்னேற்றம் நடந்தது? அந்த மக்கள் இன்றும் தெருவில் இருந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராடிப் போராடியே செத்துக் கொண்டிருப்பதுதான் நடந்தது.

ஒன்று மாத்திரம் நன்றாகப் புலப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் இராணுவத்தை நோக்கிச் சென்று சரணடைந்தவர்கள் மாத்திரம் காணாமல் ஆக்கப்படவில்லை. போர் முடிவுக்கு வந்த பின்னர், அருட்தந்தை பிரான்சிஸ் அடிகளாருடன் கையளிக்கப்பட்ட பல நூற்றுக் கணக்கான போராளிகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் மாத்திரம் காணாமல் ஆக்கப்படவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக போராடிய உறவுகளும் காணாமல் ஆக்கப்படுகிறார்கள். மெல்ல மெல்ல அவர்களும் இந்த மண்ணுக்குள் காணாமல் தொலைக்கப்படுகிறார்கள்.

ரணிலும் மைத்திரியும் முரண்படுகின்றனர். ரணிலும் மகிந்தவும் முரண்படுகின்றனர். மைத்திரியும் கோத்தாவும் முரண்டுகின்றனர். ஆனால் இவர்கள் யாரும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் வாய் திறப்பதில்லை. சிங்கள இராணுவத்தின், சிங்கள அரசுகளின் இனப்படுகொலைக் குற்றங்களை பாதுகாப்பதில் மிக கச்சிதமாக, மிக ஒற்றுமையாக செயற்பட்டு வருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள், தந்தையர்கள் போராடுவது பற்றி அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. துளியும் குற்றமில்லை.

அவர்கள் இதைத்தான் எண்ணுகின்றனர் போலும். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக போராடுகின்ற தாய் – தந்தையர்களும் மெல்ல மெல்ல காணாமல் ஆகிப் போவார்கள். அப்போது கேள்வி எழுப்ப எரும் இருக்க மாட்டார்கள் என்று. இதே விசயத்தைதான் எல்லா இடத்திலும் சிங்கள அரசு பிரயோகிக்கிறது. நாம் நிலத்தின் அதிகாரத்தை கேட்கிறோம். அவர்கள் தொடர்ந்து நிலத்தை காணாமல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். நாம் நமது கடலைக் கோருகிறோம். அவர்கள் கடலை காணாமல் ஆக்குகிறார்கள். நாம் நமது காட்டை கோருகிறோம் அவர்கள் காட்டை காணமல் ஆக்குகிறார்கள். அவர்கள் எல்லாவற்றையும் காணாமல் ஆக்குவதைத்தான் தீர்வாகக் கொண்டுள்ளனர்.

இப்போது நாங்கள் ஆலயத்திற்கு பெரிதாக செல்வதில்லை. நல்ல தருணம். அவர்கள் ஆலயங்களை காணாமல் ஆக்கி புத்த விகாரைகளை கட்டுகிறார்கள். நாம் பண்பாட்டு உணர்வு உரிமையை மறந்துவிடுகிறோம். அவர்கள் அதனையும் காணாமல் ஆக்குகிறார்கள். எங்களை பக்கத்தில் வைத்திருந்தபடி, எங்களை துணையாக்கிக் கொண்டே எங்களை காணாமல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைக்கு ஒன்றுபட்ட இலங்கையைப் பேசிக் கொண்டு ஈழ விடுதலைப் போராட்டத்தை காணாமல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதே நிலைமை தொடர்ந்தால், எதிர்வரும் காலத்தில் இந்த நாளில் ஒட்டுமொத்தமாக காணாமல் போனோர் என்றொரு இனமாக ஈழத் தமிழரையும் நினைவு கூர வேண்டிய நிலை வரும். இதே நிலை தொடர்ந்தால் ஈழம் என்றொரு காணாமல் போன நிலத்தையும் நினைவுகூர வேண்டி வரும். காணாமல் போன ஒரு தாயின் வலியை உணர்தலும் அதற்காய் இயங்குதலும்தான் இந்த நிலையை இல்லாமல் செய்யும் முதல் புள்ளியாய் இருக்கும்.

-தீபச்செல்வன்

நன்றி: இலக்கு

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More