தனது சொந்த வீட்டில் இருந்த நபர் ஒருவர் மீது ஆசிட் வீசப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பிறகு ஆறு பேர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பெப்ரவரி 21 ஆம் திகதி அதிகாலை 3.55 மணியளவில் பிளைமவுத்தில் உள்ள லிப்சன் வீதியில் வீடொன்றில் நடந்ததாகக் கூறப்படும் கடுமையான தாக்குதலுக்குப் பிறகு 38 வயதான டேனி கஹலேன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் மே 3 சனிக்கிழமை கஹலேன் மருத்துவமனையில் இறந்ததாக டெவோன் மற்றும் கார்ன்வால் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் பின்னர், இலண்டனைச் சேர்ந்த இஸ்ரேல் அகஸ்டஸ், 25, அப்துல்-ரஷீத் அடெடோஜா, 22, ராமர்னி பகாஸ்-சித்தோல் (வயது 22), பிரையன் கலெம்பா (வயது 22) மற்றும் இசானா சுங்கம் (வயது 21) ஆகியோர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் மூன்று சந்தேகநபர்கள் மீது ஏற்கெனவே வேறு குற்றங்கள் சுமத்தப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டி உள்ளனர்.
அத்துடன், பிளைமவுத்தைச் சேர்ந்த 34 வயதான பாரிஸ் வில்சன் மீதும் கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆறு பேரும் செவ்வாய்க்கிழமை பிளைமவுத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.