உலகளவில் எரிபொருள் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரானின் 3 அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது.
பூமிக்கு அடியில் மிக அழமான இலக்குகளை தாக்கி அழிக்கக்கூடிய சுமார் 14 டன் எடை கொண்ட குண்டுகளை அமெரிக்கா முதன் முதலாக பயன்படுத்தி இந்த தாக்குதலை நடத்தியது.
இதனால் கடும் கோபம் அடைந்த ஈரான், இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது. நேற்று அடுத்தடுத்து ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் இஸ்ரேல் நாட்டின் முக்கிய நகரங்களான டெல்அவிவ், ஹய்பா மற்றும் சியோனா நகரங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன.
இதன் காரணமாக போர் பதட்டம் மேலும் அதிகரித்து இருக்கிறது. இந்த பதட்டத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் ஈரான் மேலும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கி இருக்கிறது.
அமெரிக்கா மீது நேரடி தாக்குதலை தொடுக்காத ஈரான், அதற்கு பதில் உலகம் முழுவதும் நடைபெறும் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்கும் முயற்சிகளை கையில் எடுத்துள்ளது.
குறிப்பாக, உலகம் முழுக்க நடைபெறும் கச்சா எண்ணெய் வர்த்தக விநியோகத்தில் சுமார் 20 சதவீதம் ஹார்முஸ் நீரிணை வழியாகத்தான் நடைபெறுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணை இணைப்பு பகுதியை மூட ஈரான் முடிவு செய்துள்ளது.
ஈரானால் அங்கு ஏற்படுத்தப்படும் இந்த இடையூறு பல நாடுகளின் பொருளாதாரத்தை பதம் பார்க்கும் விதமாக மாறி விடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக, கச்சா எண்ணெய் விநியோகம் கணிசமான அளவுக்கு முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அரபு நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மற்ற நாடுகளுக்கு செல்வது தடுக்கப்படும். முக்கியமாக அமெரிக்காவுக்கு கச்சா எண்ணெய் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படலாம். இது அடுத்தடுத்து மற்ற பாதிப்புகளையும் உருவாக்கும் என்று கருதுகிறார்கள்.
கச்சா எண்ணெயில் இருந்து தயாரிக்கப்படும் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாட்டையும் உருவாக்க ஈரான் நடவடிக்கை ஏற்படுத்தக் கூடும். கச்சா எண்ணெய் கிடைக்காதபட்சத்தில், பல நாடுகளில் பெட்ரோல்- டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறும் என்று கூறப்படுகிறது.