அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப்பின் செலவின மசோதாவை அந்நாட்டு செனட் சபை ஏற்றுக்கொண்டது.
மசோதா குறித்து ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகள் காரணமாக, வாக்கெடுப்பு 24 மணிநேரத்துக்கு நீடித்தது.
இறுதியில் வாக்குகள் சமமாக இருந்த நிலையில், துணையதிபர் ஜே டி வான்ஸின் வாக்கு குடியரசுக் கட்சிக்குப் பெரும்பான்மையைத் தந்தது.
அடுத்தக் கட்டமாக இந்த மசோதா பாராளுமன்றுக்குச் செல்லும்.
டிரம்ப், தமது முதல் தவணையின்போது அறிவித்த வரிக் குறைப்பைக் காட்டிலும் கூடுதலாக 4.5 டிரில்லியன் டாலர் வரிக்குறைப்புச் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
தேசிய மருத்துவக் காப்புறுதித் திட்டம், மத்திய அரசாங்க உணவு உதவி ஆகியவற்றுக்கான செலவுகளை 1.2 டிரில்லியன் டாலர் குறைக்கவும், எல்லைப் பாதுகாப்பு, சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றம் ஆகியவற்றுக்கு 350 பில்லியன் டாலர் செலவிடவும் அவர் எண்ணம் கொண்டுள்ளார்.
பாராளுமன்றின் ஆதரவுடன் செலவின மசோதாவை அமெரிக்கச் சுதந்திர தினமான ஜூலை 4ஆம் திகதிக்கு முன்னதாக நடப்புக்குக் கொண்டுவர டிரம்ப் முனைப்புடன் செயற்படுகிறார்.