இந்தோனேசியா – பாலித் தீவில் 65 பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த படகு நீரில் மூழ்கியது. இதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், 23 பேரைக் காணவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை, தேடுதல் நடவடிக்கையின் போது நால்வர் இன்று (03) அதிகாலை மீட்கப்பட்டனர் என சுராபாயா தேடல் மீட்புக் குழு தெரிவித்தது.
ஜாவா தீவிலிருந்து பாலித் தீவுக்கு நேற்றிரவு (02) பயணம் செய்துகொண்டிருந்தபோது KMP Tunu Pratama Jaya எனும் கப்பலே கடலில் மூழ்கியது.
கப்பலில் இருந்தவர்களில் 53 பேர் பயணிகள் என்றும் 12 பேர் ஊழியர்கள் என்றும் மீட்புக் குழு தெரிவித்தது.
படகில் 22 வாகனங்கள் ஏற்றப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இப்படகு மூழ்கியதற்கான காரணம் தெரியவில்லை. எனினும், படகில் அளவுக்கு அதிகமாக பயணிகள் இருந்தனரா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகின்றது.
பாலித் தீவில் அடிக்கடி படகு விபத்து
பாலித் தீவில் அடிக்கடி படகு விபத்து இடம்பெறுகிறது. கடந்த மார்ச் மாதம் 16 பேரை ஏற்றியிருந்த கப்பல் பாலித் தீவில் மூழ்கியது. அதில் ஓர் ஆஸ்திரேலியப் பெண் உயிரிழந்தார். ஒருவர் காயமுற்றார்.
2022இல் 800க்கும் அதிகமானோர் பயணம் செய்த படகு ஈஸ்ட் நுசா தெங்காரா மாநிலத்தில் ஆழமற்ற நீரில் கரைத்தட்டி 2 நாள்கள் நின்றது. ஆனால், யாருக்கும் பாதிப்பில்லை.
அதேபோன்று 2018இல் சுமத்ரா தீவில் உலகின் மிக ஆழமான நதியில் 150 பேரை ஏற்றியிருந்த படகு மூழ்கியமை குறிப்பிடத்தக்கது.