வடமேற்கு சிரியாவில் உள்ள தடுப்பு முகாமில் இருந்து ஓர் இங்கிலாந்து சிறுமி திருப்பி அனுப்பப்பட்டதாக அப்பகுதி அதிகாரிகள் ஸ்கை நியூஸிடம் தெரிவித்துள்ளனர்.
சுமார் 09 வயதுடையதாகக் கருதப்படும் சிறுமி, வடகிழக்கு சிரியாவில் உள்ள அல் ஹோல் முகாமில் கண்டுபிடிக்கப்பட்டார். அங்கு ஐ.எஸ் போராளிகள் மற்றும் பயங்கரவாதக் குழுவின் ஆதரவாளர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
அங்கு அந்தச் சிறுமி உயிரியல் ரீதியாகத் தாய் அல்லாத ஒரு பெண்ணால் வளர்க்கப்பட்டதுடன், வாழ்நாளின் பெரும்பகுதியை முகாம்களில் கழித்ததால் ஆங்கிலம் பேசத் தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முகாமில் அவளைக் கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு வடகிழக்கு சிரியாவில் உள்ள அதிகாரிகளிடம் இங்கிலாந்து அரசாங்கம் முன்னதாக கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு மற்றும் கிழக்கு சிரியாவின் தன்னாட்சி நிர்வாகத்தின் (AANES) வெளியுறவுத் துறையின் உறுப்பினரான கலீத் இப்ராஹிம், கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறுமியின் அடையாளம் மற்றும் இருப்பிடத்தைக் கண்டறிய இங்கிலாந்து அரசாங்கத்துடன் “தொடர்ச்சியான தொடர்பில்” இருந்து வருவதாகக் கூறினார்.
அந்த சிறுமி பெற்றோரை இழந்த நிலையில், அங்குள்ள பெண்களின் பராமரிப்பில் இருந்ததால் அவளுடைய அம்மாவையோ அப்பாவையோ அவளுக்குத் தெரியாது என்றும் இப்ராஹிம் சுட்டிக்காட்டியுள்ளார்.