தேசிய பாதுகாப்பு மற்றும் உளவு தொடர்பான பல்வேறு கவலைகள் எழுந்துள்ள நிலையிலும், இலண்டனில் புதிய சீனத் தூதரக வளாகத்தை அமைப்பதற்கு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான இங்கிலாந்து அரசு உத்தியோகபூர்வ அனுமதி வழங்கியுள்ளது.
சுமார் 255 மில்லியன் பவுண்டுகள் செலவில், 22,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ள இந்த ‘மெகா தூதரகம்’, ஐரோப்பாவில் சீனாவின் மிகப்பெரிய தூதரக வளாகமாக உருவாக உள்ளது. இலண்டனின் டவர் பிரிட்ஜ் அருகிலுள்ள ரோயல் மின்ட் கோர்ட் பகுதியில் இந்த வளாகம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதற்கிடையில், திட்டத்திற்கு எதிராக அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். அரசாங்கத்தின் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் அவர்கள் தயாராகி வருகின்றனர்.
தொடர்புடைய செய்தி – இலண்டனில் சீனாவின் பிரம்மாண்ட தூதரகம்: பாதுகாப்பு அச்சம் காரணமாக தொழிற்கட்சி எம்.பிகள் எதிர்ப்பு
தூதரக வளாகத்திற்குள் 200-க்கும் அதிகமான ரகசிய அறைகள் அமைக்கப்படலாம் என்றும், இது இலண்டனின் முக்கிய தரவு பரிமாற்ற கேபிள்களுக்கு மிக அருகில் உள்ளதால் உளவு நடவடிக்கைகள் நடைபெறும் அபாயம் இருப்பதாகவும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், இங்கிலாந்தின் உளவு அமைப்பான MI5, ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க முடியும் என அரசாங்கத்துக்கு உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஜனவரி இறுதியில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சீனாவுக்குச் செல்லவுள்ள முக்கிய அரசியல் பயணத்திற்கு முன்னதாக, இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
2018 ஆம் ஆண்டிலிருந்து நீண்ட காலமாக இழுபறியில் இருந்த இந்த சீனத் தூதரக திட்டம், தற்போது ஒரு தீர்மானத்துக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.